Ad

ஞாயிறு, 19 ஜூலை, 2020

திருத்தணி: வீட்டுக்குள் அடைத்து வைத்து சிறுமிக்கு பாலியல் கொடுமை - இளைஞர் சிக்கிய பின்னணி

அயனாவரம் சிறுமி

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த சிறுமியின் அம்மா மனநலம் பாதிக்கப்பட்டவர். அதனால் பாட்டியின் அரவணைப்பில் சிறுமி வளர்ந்து வந்தார். இந்தச் சூழலில் சிறுமிக்கும் பாட்டிக்கும் சில மாதங்களுக்கு முன் மனவருத்தம் ஏற்பட்டுள்ளது. அதனால் வீட்டை விட்டு சிறுமி வெளியேறி பெரம்பூர் ரயில் நிலையத்துக்கு சென்றார். பின்னர் அங்கு பிளாட்பாரத்தில் சுற்றித்திரிந்தார். அப்போது மின்சார ரயிலில் வேலைக்காகத் திருத்தணியிலிருந்து பெரம்பூருக்கு வெங்கடேஷ் (21) என்பவர் வந்தார்.

பெரம்பூர் ரயில் நிலையம்

பெரம்பூர் ரயில் நிலையத்தில் சிறுமி, தனியாக சுற்றித்திரிவதைப் பார்த்த வெங்கடேஷ், அவரிடம் பேச்சுக்கொடுத்தார். அப்போது சிறுமி, வீட்டை விட்டு ஓடி வந்தது வெங்கடேஷிக்கு தெரிந்தது. அதனால் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அவரை திருத்தணிக்கு வெங்கடேஷ் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், சிறுமியைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி அவரை வீட்டில் உள்ள அறையில் அடைத்து வைத்து மாதக்கணக்கில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியால் அந்த வீட்டைவிட்டு வெளியில் வர முடியவில்லை.

வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட சிறுமி

இந்தச் சூழலில் வெங்டேஷ், கடந்த மாதம் வேலைக்காக ஆந்திரா சென்றார். அப்போது, சிறுமியைத் தனக்குத் தெரிந்த மேஸ்திரி ஒருவரின் வீட்டில் அடைத்து வைத்துள்ளார். அங்கிருந்து தப்பிய சிறுமி, திருத்தணி ரயில் நிலையத்துக்கு சில தினங்களுக்கு முன் வந்து சேர்ந்தார். ரயில் மூலம் ஊருக்குச் செல்லலாம் என திட்டமிட்ட சிறுமிக்கு ஊரடங்கால் ரயில் இயக்கப்படவில்லை எனத் தெரிந்ததும் பிளாட்பாரத்திலேயே சுற்றித் திரிந்துள்ளார்.

Also Read: சென்னை: ஒரே நேரத்தில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - புகாரால் சிக்கிய ரவுடி முரளி

பாலியல் வன்கொடுமை

அதைக்கவனித்த திருத்தணி ரயில்வே போலீஸார் சிறுமியிடம் விசாரித்து, அவரை அயனாவரம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அயனாவரம் போலீஸார் விசாரித்தபோதுதான் சிறுமிக்கு நடந்த கொடுமைகள் வெளியில் தெரிந்தது. சிறுமியை அவரின் பாட்டியிடம் போலீஸார் ஒப்படைத்தனர். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் சிறுமிக்கு கவுன்சலிங் அளிக்கப்பட்டது.

சிறுமி மீட்கப்பட்ட தகவல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவின் துணை கமிஷனர் ஜெயலட்சுமிக்கு தெரிவிக்கப்பட்டது. அவரின் உத்தரவின் பேரில் அயனாவரம் அனைத்து மகளிர் போலீஸார் வெங்கடேஷ் பாபுவை தேடிவந்தனர். அவர் ஆந்திரா மாநிலம் ரேணிகுண்டா பகுதியில் பதுங்கியிருக்கும் தகவல் போலீஸாருக்கு கிடைத்தது.

துணை கமிஷனர் ஜெயலட்சுமி

உடனே, ஆந்திராவுக்குச் சென்ற அயனாவரம் போலீஸார் வெங்கடேஷை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 363 மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து வெங்கடேஷிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர், `சிறுமி மீது இரக்கப்பட்டுதான் அவரை திருத்தணிக்கு அழைத்துச் சென்றேன். பின்னர் அவரை திருமணம் செய்துகொள்ளலாம் என்றுதான் தவறு செய்துவிட்டேன்' என்று கூறியுள்ளார். இதையடுத்து வெங்கடேஷ், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு போலீஸார் சிறையில் அடைத்தனர்.

தொடரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்

சென்னையில் தொடர்ச்சியாக சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்படும் சம்பவங்கள் நடந்துவருகின்றன. சென்னை திருநின்றவூரைச் சேர்ந்த இறைச்சி கடைக்காரர் முரளி, 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அதில் ஒரு சிறுமி, முரளியின் மகள். வடசென்னையில் ஆட்டோவில் சிறுமி ஒருவர் மயக்க மருந்து தெளித்து கடத்தப்பட்டார்.

ஹரிபாபு

இந்த வழக்கில் உதவி கமிஷனர் கோ.அரிக்குமார் சிறப்பாக விசாரணை நடத்தி ஆட்டோ டிரைவர் ஹரிபாபுவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார். சிறுமிகளை அடுத்து சென்னை அயனாவரத்தில் 63 வயதான மூதாட்டி ஒருவர் மர்ம நபரால் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டுள்ளார். ஆனால், மூதாட்டி காவல் நிலையத்தில் புகாரளிக்கவில்லை. ஊரடங்கு நேரத்தில் குடும்ப வன்முறைகள், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளதற்கு இந்தச் சம்பவங்களே எடுத்துக்காட்டு என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.



source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-youth-and-charged-him-in-pocso-act

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக