Ad

திங்கள், 20 ஜூலை, 2020

வேலூர்: வம்பிழுத்த சிறைவாசி; கண்டித்த ஜெயிலர்! - தற்கொலைக்கு முயன்ற நளினி?

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட கைதிகளான முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், அவரின் மனைவி நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையிலும் 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகிறார்கள். கொரோனா தொற்று காரணமாக, பார்வையாளர் சந்திப்பு கடந்த 4 மாதங்களாக ரத்து செய்யப்பட்டிருப்பதால், அனைத்து சிறைவாசிகளும் போன் மூலமாகத் தங்களுடைய உறவினர்களிடம் பேசி வருகிறார்கள். நளினி, முருகனும் தங்களின் வழக்கறிஞர் மற்றும் உறவினர்களிடம் அடிக்கடி போனில் பேசி வருகின்றனர்.

வேலூர் மத்திய சிறை

இந்தநிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு முருகன் தாக்கப்பட்டதாக அதிர்ச்சிகர தகவல் வெளியானது. விரைவாக நேரில் வந்து சந்திக்குமாறு முருகன் போனில் பதறியதாகக் கூறியிருந்தார் அவர் வழக்கறிஞர் புகழேந்தி. இந்த சர்ச்சை ஓய்வதற்குள்ளாக, நேற்று இரவு நளினி தற்கொலைக்கு முயன்றதாகப் புதிய பரபரப்பு சிறைத்துறையை வட்டமிடுகிறது.

Also Read: வேலூர்: `சிறைக்குள் தாக்கப்பட்டாரா முருகன்?!' - அதிர்ச்சி கொடுத்த அவசர அழைப்பு

நம்மிடம் பேசிய நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி, ``நளினிக்கும் கொலை வழக்கில் அடைக்கப்பட்டிருக்கும் ஒரு சிறைவாசிக்கும் நேற்று இரவு தகராறு நடந்ததாகச் சொல்கிறார்கள். இதைக் கவனித்த ஜெயிலர் நளினியை மட்டும் கடுமையாகக் கண்டித்துள்ளார். இதனால், மனஉளைச்சலுக்கு ஆளான நளினி அறையில் இருந்த ஜாக்கெட் ஒன்றை எடுத்து கழுத்தில் இறுக்கி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகச் சொல்கிறார்கள்.

வழக்கறிஞர் புகழேந்தி

சிறை அதிகாரி ஓடி வந்து நளினியைத் தடுத்து காப்பாற்றியதாகவும் சிறைத்துறை தரப்பில் என்னிடம் சொன்னார்கள். சம்பவம் உண்மையாகக்கூட இருக்கலாம். அதற்கான காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சிறைவாசியுடன் ஏற்பட்ட மோதலில் நளினி இந்த முடிவை எடுத்திருப்பாரா என்றால் நம்பும்படியாக இல்லை. நளினி உறவினர்களிடம் மட்டும்தான் போனில் பேசி வருகிறார். என்னிடம் பேச சிறைத்துறையினர் அனுமதிப்பதில்லை. இந்தப் பிரச்னையை எப்படி அணுகுவது என்பது குறித்து மூத்த வழக்கறிஞர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு சொல்கிறேன்’’ என்றார்.

இந்த விவகாரத்தில் உண்மையைத் தெரிந்துகொள்ள சிறைத்துறை டி.ஐ.ஜி ஜெயபாரதியைத் தொடர்புகொண்டோம். அவர் போனை எடுக்கவில்லை. இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தால் உரிய பரிசீலனைக்குப் பிறகு வெளியிடவும் தயாராக இருக்கிறோம்.



source https://www.vikatan.com/government-and-politics/crime/is-nalini-attempts-suicide-in-vellore-jail

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக