பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.
நம் கல்வி முறை பலரை மனித பிராய்லர் கோழிகளைப் போல்தான் உருவாக்கியுள்ளது. இந்த வார்த்தை சற்றுக் காட்டமாக இருக்கலாம். ஆனால், இதை என் அனுபவத்தில் கூறுகிறேன். 80-களின் ஆரம்பத்தில் பள்ளிகள் என்ற போர்வையில் உருவாகிய சில மதிப்பெண் தொழிற்சாலைகளின் படைப்புகள்.
கல்வித் தரம் என்பதற்கு மதிப்பெண் என்னும் ஒரு ஒற்றை அளவுகோலை நாம் பின்பற்றியது வரலாற்றுப் பிழை. அந்தத் தொழிற்சாலையில் மருத்துவமும் பொறியியலும் மட்டுமே சிறந்தவை என்ற மாயை உருவாக்கப்பட்டது. மந்தைகள் போல அவற்றை நோக்கி பிள்ளைகள் துரத்தப்பட்டார்கள். மற்ற துறைகள் இரண்டாம் தரமானவையாகப் பார்க்கப்பட்டன. இப்படியான பிராய்லர் கோழி கல்வி முறையின் ஒரு ஆகச் சிறந்த தயாரிப்பு நான்.
மழலைக் கல்வி முதல் 12-ம் வகுப்பு வரை நான் பயின்றது தனியார் பள்ளிகளில். வெறும் மதிப்பெண் எந்திரமாகச் சிறப்பாகச் செயல்பட்டேன். நான் என்னவாக வேண்டும் என்பதை சமூகம் தீர்மானித்தது. நான் யார் என்பதை இக்கல்வி முறை எனக்கு அறிமுகப்படுத்தவே இல்லை.
என் பள்ளியின் முதல் நாள் நினைவிருக்கிறது. 80-களின் நடுப்பகுதி. பெற்றோருடன் சென்றிருந்தேன். என் அம்மாவின் கல்லூரித் தோழியான தலைமை ஆசிரியர் எனக்கு பொம்மை காட்டி மகிழ்வித்தார். மழலைகள் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை கொண்ட ஒரு தனியார் பள்ளி. சாயப்பட்டறை பள்ளியாக உருமாறியிருந்தது. மூன்று வாசல்கள் கொண்ட ஒரு பெரிய நீளமான கட்டடம் மட்டும்தான் பள்ளி. அதன் பரப்பளவு 6 உயர தடுப்புகள் கொண்டு வகுப்பறைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஆஸ்பெஸ்டாஸ் கூரை. நான்காம் வகுப்பு வரை அடக்கம். 5-ம் வகுப்பு மட்டும் வெளியே வாசலருகில் முழுக்க கூரை வேய்ந்த அறையில். அதுவே தலைமை ஆசிரியர் அறையும்கூட. இடையில் மைதானம்.
மனப்பாட கல்வி முறையைக் கொஞ்சமாக நான் கற்றுக்கொண்டது இங்குதான். புத்தகங்களில் இருக்கும் பாடங்கள் நடத்தப்பட்டு கேள்விக்கான விடைகளைப் பாடத்தில் உள்ள வரிகளை ஆசிரியர் சொல்ல அடைப்புக்குறிகளில் குறித்துக்கொள்ள வேண்டும். அவற்றை எழுதினால் போதும். பாடத்தை முழுவதும் கற்று, உள்வாங்கி பின் எந்தக் கேள்விக்கும் சுயமாகச் சிந்தித்து பதிலளிக்க வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை. பாடத்தின் இறுதியில் உள்ள கேள்விக்கு ஆசிரியர் குறித்துக் கொடுக்கும் பதிலை எழுதினால் போதுமானது. மாதப் பரீட்சைகளில் எடுக்கும் மதிப்பெண் மூலம் தரவரிசைப்படுத்துவார்கள். முதல் மூன்று மாணவர்களுக்கு முறையே சிவப்பு, பச்சை, நீல நிறங்களில் பட்டை அணிவிக்கப்படும்.
சிவப்பு நிறம் அணிந்த முதல் மாணவன் வகுப்புத் தலைவன். என்னதான் பச்சை, நீலநிற பட்டைகளைப் பெற்றாலும் சிவப்பு நிற பட்டை அணிந்த முதல் மாணவன் மீது கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கும். முதல் மாணவனாகி சிவப்பு நிற பட்டை பெற்றால் அது தரும் பெருமை உச்சாணிக்கொம்புதான். சக மாணவனை, நண்பனை மதிப்பெண் போட்டியாளராகப் பார்க்கத் தூண்டுதலாக அமைந்தது இந்தப் பட்டை முறை. இது சில மாணவர்களின் பெற்றோருக்கிடையே இருந்த நட்புக்கும் ஆப்பு வைத்தது கூடுதல் சிறப்பு.
தன் மகனின் போட்டியாளனின் பெற்றோரை தங்களின் போட்டியாளர்களாகவும் பார்த்தனர். இப்படியாக என் பள்ளி வாழ்க்கை அமைந்தது. கல்வி என்பது கற்றுக்கொள்வது. போட்டிபோடுவது அன்று. வெற்றி, தோல்விகளுக்கு அப்பாற்பட்ட சிந்தித்து செயல்படத் தூண்டும் பகுத்தறிவே கல்வி. மதிப்பெண்ணைக் கடந்து சக மனிதனைப் பற்றியும் சிந்திக்கத் தூண்டுவதே கல்வி. அந்தக் கல்வியையும் பாடத்திட்டத்தோடு சேர்த்து கற்போம் சிந்திப்போம்.
- ராம்குமார்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
source https://www.vikatan.com/oddities/miscellaneous/man-shares-about-his-schooling
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக