''ஆளுங்களையேத் தூக்கியிருக்கோம்... அடிக்கிறது தப்பா!''
''மத்தவங்களை சுட்டா மனித உரிமைக் கழகம் வரும்... அவங்களையே சுட்டா யார் வருவாங்கன்னு தெரியாது!''
2020 பொங்கலுக்கு ரிலீஸான 'தர்பார்' படத்தில் ரஜினிகாந்த் பேசும் வசனங்கள் இது. படத்தின் முதல் 5 நிமிடங்களிலேயே போலீஸ் கமிஷ்னருக்குத்தான் நாட்டிலேயே உச்சபட்ச அதிகாரங்கள் இருக்கின்றன என்கிற தொனியில்தான் படமே தொடங்கும். கண்களில் சிக்குகிற குற்றவாளிகளையெல்லாம் நடுரோட்டில் சுட்டுத்தள்ளிக்கொண்டே போவார் ரஜினி. படத்தின் டைட்டில் வரும்போதே ''ஆதித்ய அருணாசலம் ஒரு பைத்தியக்கார போலீஸ்'' என்றுதான் செய்தித்தாள்களின் தலைப்பு செய்திகள் சொல்லும்.
'தர்பார்' காட்சிகள் ஓர் உதாரணம்தான். தமிழ் சினிமாவில் போலீஸை ஹீரோவாகக் கொண்டு எடுக்கப்பட்ட எல்லா படங்களிலுமே கிட்டத்தட்ட இதுபோன்ற காட்சிகள் இடம்பிடித்திருக்கும். ''நான் போலீஸ் இல்லை பொறுக்கி'', ''அவனைப் போலீஸ், கோர்ட்டுன்னு கூட்டிட்டுப்போக எதுக்கு அரசாங்கம் தேவையில்லாத செலவு பண்ணணும்... அதான் 50 ரூபாய் புல்லட்ல முடிச்சிட்டேன்'', ''போலீஸ் பவர் என்னான்னு தெரியுமாடா உனக்கு'' என்கிற வசனங்கள் எல்லாம் தமிழ் சினிமாவில் சர்வசாதாரணம். 'சட்டமாவது... ...ஆவது' என்கிற ஸ்டைலில்தான் சினிமாவில் போலீஸ் இயங்குவதாகக் காட்டப்படும். இப்போது சாத்தான்குளத்தில் நடைபெற்றிருக்கும் கொடூர சம்பவத்துக்கு பொதுமக்கள் தொடங்கி சமூக ஆர்வலர்கள் வரை கைகாட்டுவது சினிமாக்களைத்தான்.
இதற்கு சினிமா உலகம் என்ன சொல்கிறது, உண்மையிலேயே சினிமாக்கள்தான் போலீஸ் இதுபோன்று நடந்துகொள்ள காரணமா?
சாத்தான்குளம் விவகாரத்தின்போது அதிகம் விவாதிக்கப்பட்ட படம் இயக்குநர் வெற்றிமாறனின் 'விசாரணை.' இந்தப்படம் போலீஸின் லாக் அப் டார்ச்சர்கள் பற்றியும், அப்பாவி மக்கள் எப்படி குற்றாவளிகள் ஆக்கப்பட்டு அநியாயமாகக் கொல்லப்படுகிறார்கள் என்பது பற்றியும் பேசியிருக்கும். இந்தப் படத்தில் தினேஷ் உள்ளிட்ட தமிழகத் தொழிலாளர்கள் ஆந்திர காவல்நிலையத்தில் வைத்து டார்ச்சர் செய்யப்படும்போது அங்கே கான்ஸ்டபிளாக இருக்கும் ஒரு பெண்தான் செல்போனைக் கொடுத்து அவர்களுக்கு உதவுவார். இப்போது சாத்தான்குளம் சம்பவத்திலும் ஒரு பெண் போலீஸ் கான்ஸ்டபிள்தான் உண்மையை வெளியே கொண்டுவந்திருக்கிறார் என இந்தப்படத்தையும் சாத்தான்குளம் சம்பவத்தையும் வைத்து பல ஒப்பீடுகள் நடக்கின்றன.
'விசாரணை' இயக்குநர் வெற்றிமாறனிடம் பேசினேன். ''சினிமாவால்தான் சமூகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன என்பதில் சத்தியமாக உண்மையில்லை. போலீஸுக்கு யாரையும் அடிக்கும் உரிமையோ, துன்புறுத்தும் உரிமையோ இல்லை. சமூகத்துக்குள் நடக்கும் இதுபோன்ற விஷயங்கள்தான் சினிமாவுக்குள்ளேயும் வருகிறது. உண்மையை வரவழைக்கணும்னா ஒரு போலீஸ் அதிகாரி யாரையாவது போட்டு அடிப்பார். பிறகுதான் அவர்கள் உண்மையை ஒப்புக்கொள்வார்கள். இந்தச் சித்திரிப்பு சரியானதில்லை. இதை நாம் நிச்சயம் மாற்றத்துக்கு உட்படுத்தியே ஆக வேண்டும்.
போலீஸை இன்னும் எப்படிப் பொறுக்கித்தனமாகக் காட்டுவது, எப்படி அவர்கள் இன்னும் வித்தியாசமாக என்கவுன்டர் செய்வதுபோல காட்சிகளை உருவாக்குவது என யோசிக்கும் கட்டாயத்தில்தான் இப்போது சில இயக்குநர்கள் இருக்கிறார்கள். அதே நேரத்தில் நிறைய நல்லபடங்கள், போலீஸின் பிரச்னைகளைப் பேசுகின்ற படங்களும் வந்திருக்கின்றன. 'விசாரணை' படம் வெளிவந்த பிறகு ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் என்னை நேரில் சந்தித்தார். 'போலீஸின் தவறுகளை சரியா காட்டியிருந்தீங்க. அதேசமயம் தயவு செய்து இதோட நிறுத்தாதீங்க. போலீஸ் செய்ற நல்ல விஷயங்களையும் படமா பண்ணுங்க' எனச் சொன்னார்.
முதலில் சாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ் அப்போது 'விசாரணை' படத்தைப் பார்த்துவிட்டு என்னிடம் பேசினார். ஒருவாரம் கழித்து பயிற்சியில் இருந்த மேஜிஸ்திரேட்டுகளுக்குப் படத்தைப்போட்டுக்காட்டி என்னையும் சந்திரகுமாரையும் பேச அழைத்திருந்தார். 'மேஜிஸ்திரேட்டுகளான நீங்கள்தான் இதுபோன்ற வழக்குகளை அதிகம் விசாரிப்பவர்கள். நீங்கள் நிச்சயம் இந்தப்படத்தைப் பார்க்க வேண்டும். விசாரணைக் கைதிகளை சிறைக்கு அனுப்பும்முன் அவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்' என்று அப்போது அவர் அங்கே பேசினார். எதிர்காலத்தில் வன்முறையைக் கையில் எடுக்கும் ஹீரோயிஸ போலீஸாக இல்லாமல் ஒரு நல்ல போலீஸ் கதையை படமாக எடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன்'' என்றார் வெற்றிமாறன்.
சினிமாவின் தாக்கம்தான் போலீஸ் இதுபோன்று நடந்துகொள்வதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று என்று சொல்லப்படுவதைப் பற்றி 'அஞ்சாதே' உட்பட தொடர்ந்து போலீஸ் கதைகளை இயக்கிவரும் மிஷ்கினிடம் கேட்டேன்.
''சமூகத்தில் எது நடந்தாலும் உடனே சினிமாவைக் குற்றம் சொல்றது காலங்காலமா நடந்துட்டேதான் இருக்கு. போலீஸின் வன்முறை என்பது பல காலமா இருக்கு. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நம் மக்களும்தான் அவங்களோடு காவல்துறையில் இருந்தாங்க. அவங்க பிரிட்டிஷாரோட சேர்ந்து நம் மக்களையும் அடிப்பாங்க. அங்கிருந்து வந்ததுதான் இந்த அடிக்கும், சித்ரவதைகள் செய்யும் பழக்கம் எல்லாமேனு நினைக்கிறேன். யூதர்களைக் கொடுமைப்படுத்த வதைமுகாம்கள் வெச்சிருந்தாங்கனு கேள்விப்பட்டிருக்கோம். ஆனா, அந்த மாதிரியான வதைமுகாம்கள் நம்ம ஊர்லயே இருக்கிறதுன்றதைப் பார்க்கும்போது பயமா இருக்கு. இதுக்குப் பின்னால் இருக்கும் உளவியல் பிரச்னை என்னென்னு பார்க்கணும். இதை உடனடியாகச் சரிசெய்யணும்.
சாத்தான்குளம் சம்பவத்துக்குக் காரணம் சினிமாதான்னோ, இல்லை இந்த போலீஸே இப்படித்தான்னோ எல்லாத்தையும் ஜெனரலைஸ் பண்ணிடக்கூடாது. இன்னைக்கு இந்த சமூகத்துல மிக முக்கியமான இடத்தில் காவல்துறை இருக்கு. இனிமேலும் சாத்தான்குளத்தில் நடந்தது போன்ற ஒரு சம்பவம் நடந்துடவே கூடாது. அதற்கு நாம என்ன பண்ணணும்னுதான் யோசிக்கணும். போலீஸுக்கான அதிகாரம் என்ன, அவங்க அத்துமீறும்போது அதுபற்றி எங்கே சொல்லணும்கிற விவரங்களை மீடியாக்கள் தொடர்ந்து வெளியிடணும். எல்லோருடைய லிமிட்ஸும் என்னன்னு மக்கள் தெரிஞ்சிக்கணும். பெரிய அளவில் இதை ஒரு விழுப்புணர்வு பிரசாரமாக மீடியாக்கள் தங்கள் கையில் எடுக்கணும்'' என்றார் இயக்குநர் மிஷ்கின்.
தமிழ் சினிமாவைத் தொடர்ந்து கவனித்துவரும் சாதாரண ரசிகர்களுக்கே சினிமாவில் போலீஸ் எப்படி காட்டப்படுகிறார்கள், உண்மையான போலீஸிடம் சினிமாவின் தாக்கம் எந்தளவுக்கு இருக்கிறது என்பது தெரியும். தமிழ் சினிமாவில் போலீஸுக்கு இருக்கும் அதிகாரங்கள் என்ன, அவர்கள் ஒரு குற்றவாளியை எப்படி நடத்த வேண்டும், விசாரிக்கும் முறைகள் என்ன என்கிற புரிதல் போலீஸ் படங்களை எடுக்கும் பல முக்கிய இயக்குநர்களுக்கே இல்லை என்பதுதான் உண்மை. தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த குற்றவாளியை சுட்டுக்கொன்ற போலீஸ் அதிகாரி ஒருவர் சென்னை கமிஷனராக இருந்தபோது ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அந்தப் பேட்டியில், ''சினிமாக்களில் போலீஸாக கமல்ஹாசன் இயங்குவதைப்போல நான் உண்மையில் இயங்குகிறேன்'' என்று சொன்னார். கமல்ஹாசன் என்னைப்போல படங்களில் நடிக்கிறார் என்று சொல்ல வேண்டிய கமிஷனரே 'நான் கமல்ஹாசனைப்போல இயங்குகிறேன்' என்று சொல்கிறார் என்றால் போலீஸ்துறையில் உச்சம்வரைக்குமே சினிமாவின் தாக்கம் எப்படிப் பரவியிருக்கிறது எனப் புரிந்துகொள்ளலாம்.
Also Read: அத்துமீறலை ஆதரிக்கலாமா போலீஸ் சினிமாக்கள்?
சென்னையில் போலீஸ் கமிஷனராக இருந்த இன்னொரு அதிகாரி 'விருமாண்டி' மீசையை முறுக்கியபடியேதான் வலம்வருவார். 'காக்க காக்க' படத்தைப் பார்த்துதான் நான் ஐ.பி.எஸ் ஆக வேண்டும் என்றே முடிவெடுத்தேன் என்று தமிழகத்தில் பணியாற்றும் பல ஐ.பி.எஸ் அதிகாரிகள் பேட்டி கொடுத்திருக்கிறார்கள். ஐ.பி.எஸ்-களே சினிமா ஹீரோக்களைத்தான் முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு காவல்துறைக்கு வருகிறார்கள் என்றால், இன்ஸ்பெக்டர்களாகவும், சப் இன்ஸ்பெக்டர்களாகவும் வருபவர்கள் யாரை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு பணியாற்றுவார்கள்? அவர்களுக்கான நல்ல முன்மாதிரிகளை போலீஸ் துறை உருவாக்கியிருக்கிறதா அல்லது அப்படிப்பட்டவர்கள்தான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார்களா?
சாதாரண கான்ஸ்டபிள்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை பலருக்குமே ''போலீஸ் இல்லைடா பொறுக்கி'', ''நான் அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா'' என்று பீரால் முகம் கழுவும் ஹீரோக்கள்தான் இங்கே முன்மாதிரிகளாக இருக்கிறார்கள். எல்லோருமே அப்படியில்லை என்று நமக்கு நாமே சமாதானம் சொல்லிக்கொண்டாலும் உண்மை என்பது இதற்குமேலும் கொடூரமாகவே இருக்கிறது. 'சாமி' படம் வந்தபோது ''போலீஸ் இல்லடா பொறுக்கி" என்று காலர்ட்யூன் வைத்திருந்த போலீஸும் இங்கேதான் இருக்கிறார்கள். டாஸ்மாக் போராட்டத்தின்போது எந்தக் குற்றமும் செய்யாத ஒரு பெண்ணை 'ஓன்றரை டன் வெயிட்டோடு' ஓங்கி அறைந்த போலீஸ் அதிகாரியும் இங்கேதான் இருக்கிறார். ஹெல்மெட் போடாத குற்றத்துக்காக சினிமா பாணியில் துரத்திச்சென்று ஒரு கர்ப்பிணியைக் கொலை செய்த போலீஸ்காரர்களும் இங்கேதான் இருக்கிறார்கள்.
சினிமாவில் இருந்துதான் நாம் முதலமைச்சர்களை தேர்ந்தெடுத்திருக்கிறோம். சினிமாவில்தான் அடுத்த முதல்வர்களை, தலைவர்களைத் தேடுகிறோம். இங்கே சினிமாதான் எல்லாம். தமிழ்நாட்டில் நடக்கும் பல நிகழ்வுகளில் சினிமாவுக்கு பெரும்பங்கிருக்கிறது. போலீஸ் வன்முறைகளை அங்கீகரிக்கும் சினிமாக்களையும், என்கவுன்டர் செய்யும் போலீஸ் ஹீரோக்களையும் சினிமா உருவாக்குமானால் இன்னும் பல சாத்தான்குளங்கள் தமிழத்தில் தொடர்ந்து ஊற்றெடுத்துக்கொண்டேதான் இருக்கும். அப்பாவி மக்கள் அதிகாரத்தின் கைகளில் சிக்கி கொல்லப்பட்டுக்கொண்டேதான் இருப்பார்கள்.
source https://cinema.vikatan.com/tamil-cinema/how-does-tamil-cinema-deal-with-police-stories-criticizes-vetrimaaran-and-mysskin
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக