Ad

ஞாயிறு, 12 ஜூலை, 2020

கொரோனா: தாமதமான ஆம்புலன்ஸ்! - இறந்தவர் உடல் ஆட்டோவில் எடுத்துச் செல்லப்பட்ட அவலம்

உலக அளவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் அடக்கம் செய்யப்பட வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழிகாட்டுதல்களையும் வழங்கியிருக்கிறது.

கொரோனாவால் இறந்தவர் உடல்

இந்தநிலையில், தெலங்கானாவின் நிஜாமாபாத் நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த ஒருவரின் உடல் எந்தவித பாதுகாப்புமின்றி ஆட்டோவில் எடுத்துச் சென்ற சம்பவம் நடந்திருக்கிறது. நிஜாமாபாத் அரசு மருத்துவமனையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட 50 வயதான நபர் சிகிக்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது உறவினர் ஒருவர், அதே மருத்துமனை பிணவறையில் பணிபுரிந்து வருகிறார். ஆம்புலன்ஸுக்காகக் காத்திருந்த நிலையில், அது வர தாமதமானதாகச் சொல்லப்படுகிறது. இதனால், கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை, எவ்வித முன்னெச்சரிக்கையும் இன்றி ஆட்டோவில் கொண்டு சென்றது தற்போது சர்ச்சையாகியிருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read: கொரோனா:`முதன்முறையாக முகக்கவசம் அணிந்த ட்ரம்ப்!’ - அரசியலும் விமர்சனங்களும்...

இதுகுறித்து பேசிய நிஜாமாபாத் மருத்துமனைக் கண்காணிப்பாளர் நாகேஸ்வர ராவ், ``கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர், சிகிச்சைக்காகக் கடந்த ஜூன் 27-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். 50 வயதான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர், கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். அவர் பிற சில நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தார். அவருடைய உறவினர் ஒருவர், இதே மருத்துமனையில் பணிபுரிகிறார். இறந்தவரின் உடல், அவரது உறவினர் கேட்டுக்கொண்டதன் பேரில் ஒப்படைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் வரும்வரை காத்திருக்காமல், தம்முடன் பிணவறையில் பணிபுரியும் சக ஊழியருடன் இணைந்து சடலத்தை அவர் ஆட்டோவில் எடுத்துச் சென்றுள்ளார்’’ என்று கூறினார்.

நிஜாமாபாத் அரசு மருத்துவமனை

நிஜாமாபாத் மாவட்ட ஆட்சியர் சி.நாராயண ரெட்டி இதுகுறித்து கூறுகையில், ``நிஜாமாபாத் மருத்துமனை கண்காணிப்பாளர் இல்லாத நிலையில், இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதில், தொடர்புடையவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும். கொரோனா பாதிக்கப்பட்டு இறப்பவர்களை அடக்கம் செய்யும்போது அரசு கூறிய வழிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். இதுபோல் சம்பவங்கள் இனிமேல் நிகழக் கூடாது என அனைத்து மருத்துவக் கணிக்கணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது'’ என்றார். நிஜாமாபாத் மருத்துவமனையில் இரண்டு ஆம்புலன்ஸ்கள் மட்டுமே இருந்த நிலையில், அன்று ஒரே நாளில் 4 பேர் இறந்ததாகச் சொல்லப்படுகிறது. அதனால், ஆம்புலன்ஸ் கிடைக்க ஒரு மணிநேரம் தாமதம் ஏற்படலாம் என்று கூறப்பட்டதால், மருத்துவமனை ஊழியர் தனது உறவினரின் உடலை ஆட்டோவில் ஏற்றிச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/body-of-covid-19-patient-taken-to-burial-ground-in-auto

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக