Ad

சனி, 18 ஜூலை, 2020

ராஜஸ்தான்:`சச்சின் பைலட் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மாயம்!’ - தீவிர தேடுதலில் அதிகாரிகள்

ராஜஸ்தான் மாநிலத்தின் ஆளும்கட்சியான காங்கிரஸில் நிலவும் குழப்பங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதோடு விடை தெரியாத பல மர்மங்களும் நீடித்து வருகின்றன. அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் மற்றும் முன்னால் துணை முதல்வர் சச்சின் பைலட் இடையே நிலவி வந்த பனிப்போர் பின்னாளில் மிகப்பெரிய மோதலாக வெடித்தது. இதனைத் தொடர்ந்து, சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் அமைச்சர் மற்றும் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன. அவர்களை தகுதி நீக்கம் செய்யவும் நடவடிக்கைகளை ஆளும்கட்சிகள் மேற்கொண்டன. ஆனால், இதனை எதிர்த்து சச்சின் பைலட் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் செவ்வாய்க்கிழமை வரை சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தடை விதித்து உத்தரவிட்டது.

சச்சின் பைலட்

இந்த பிரச்னைகள் தீவிரமாகத் தொடங்கிய நாள் முதலே சச்சின் பைலட்டை பா.ஜ.க இயக்குவதாகவும் மத்தியப் பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியாவை வைத்து காய் நகர்த்தி ஆட்சியைக் கவிழ்த்ததைப் போல ராஜஸ்தானிலும் செய்ய முயற்சி செய்து வருவதாக அசோக் கெலாட் உள்ளிட்ட காங்கிரஸார் குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்தனர். சச்சின் பைலட்டும் பா.ஜ.க-வில் இணைய இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வந்தன. எனினும், பா.ஜ.க இந்தக் குற்றச்சாட்டுகளை எதிர்த்தது. சச்சின் பைலட்டும் பா.ஜ.க-வில் இணையவில்லை என்று கூறினார். இந்த நிலையில், பா.ஜ.க-வின் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் சச்சின் பைலட்டின் ஆதரவாளரான பன்வர் லால் சர்மா மற்றும் சஞ்சய் ஜெயின் ஆகியோர் ஆட்சியைக் கவிழ்க்க பேரம் பேசியது தொடர்பான ஆடியோ ஒன்றை காங்கிரஸ் வெளியிட்டு அவர்களைக் கைது செய்ய கோரிக்கை விடுத்தது.

Also Read: ராஜஸ்தான்: `எங்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தீர்கள்?' - கொதிக்கும் சச்சின் பைலட் ஆதரவாளர்கள்

அரசியல் வட்டாரத்தில் இந்த ஆடியோ விவகாரம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு அதிகாரிகள் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டனர். மத்திய அமைச்சர் உட்பட 3 பேர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சஞ்சய் ஜெயின் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அமைச்சர் தன்மீதுள்ள இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இதனையடுத்து பன்வர் லால் சர்மாவைத் தேடி சச்சின் பைல்ட் உள்ளிட்ட 19 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கியிருந்த மானேசர் பகுதி ஹோட்டலுக்கு ராஜஸ்தான் மாநில காவல்துறை அதிகாரிகள் சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் அந்த ஹோட்டலில் இல்லாததை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர். தற்போது, அவர்கள் அனைவரும் எங்கிருக்கிறார்கள் என்ற விஷயம் மர்மமாக இருந்து வருகிறது. அவர்கள் ஹோட்டலில் இருந்து தப்பி கர்நாடகாவுக்கு சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், சச்சின் பைலட் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் இதனை மறுக்கவும் செய்துள்ளார்.

அசோக் கெலாட் - சச்சின் பைலட்

சச்சின் பைலட் அணியைச் சேர்ந்த மூத்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் என்டிடிவி ஊடகத்திடம் பேசும்போது கர்நாடகாவுக்கு அழைத்து செல்வது தொடர்பான கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு `நோ வே’ என்று தன்னுடைய பதிலை தெரிவித்துள்ளார். எனினும், அவர்கள் தற்போது தங்கியுள்ள இடத்தை வெளிப்படுத்த அவர் தயாராக இல்லை. ஆனால், இந்த 18 சட்டமன்ற உறுப்பினர்களும் டெல்லியில்தான் எங்கேயோ பதுங்கி இருப்பதாக அம்மாநில காவல்துறையினர் நம்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ரிசார்ட் அரசியல் விளையாட்டுக்களும் ஜோதிராதித்ய சிந்தியா மூலம் மத்தியப் பிரதேசத்தில் நடந்த அரசியல் விளையாட்டை ஒத்து இருப்பதால் சச்சின் பைலட்டின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்த தீவிரமான விவாதங்கள் எழுந்துள்ளன. அதிகாரிகள் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கும் இடத்தை அதிகாரிகள் தீவிரமாகத் தேடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: ராஜஸ்தான்:`அழகும் ஆங்கிலமும் மட்டும் போதாது!’ - சச்சின் பைலட்டை விமர்சித்த அசோக் கெலாட்



source https://www.vikatan.com/government-and-politics/politics/rajasthan-sachin-pilot-and-his-supporters-were-missing

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக