Ad

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

Live சுதந்திர தின விழா: ``நமது எதிர்காலத்திற்கான தீர்வு விண்வெளி, கடலின் ஆழத்தில் உள்ளது” - பிரதமர் மோடி

``குடிமக்கள் லட்சியமாக இருப்பதை என்னால் பார்க்க முடிகிறது”

பிரதமர் மோடி, ``குடிமக்கள் லட்சியமாக இருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. ஒரு லட்சிய சமுதாயம் எந்த நாட்டிற்கும் ஒரு சொத்தாக இருக்கிறது, இன்று இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் லட்சியங்கள் உயர்ந்திருப்பதில் பெருமிதம் கொள்கிறோம். ஒவ்வொரு குடிமகனும் விஷயங்களை மாற்ற விரும்புகிறார்கள். ஆனால் காத்திருக்கத் தயாராக இல்லை. அவர்கள் வேகத்தையும் முன்னேற்றத்தையும் விரும்புகிறார்கள்” என்ரார்.

தொடர்ந்து, ``விண்வெளி முதல் கடலின் ஆழம் வரையிலான அனைத்து துறைகளிலும் ஆராய்ச்சி செய்வதற்கு நாட்டின் இளைஞர்கள் அனைத்து ஆதரவையும் பெற வேண்டும் என்பதே எங்கள் முயற்சி. அதனால்தான் நாங்கள் எங்கள் விண்வெளிப் பணி மற்றும் ஆழ்கடல் பணியை விரிவுபடுத்துகிறோம். நமது எதிர்காலத்திற்கான தீர்வு விண்வெளி மற்றும் கடலின் ஆழத்தில் உள்ளது” என்றார்.

``அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும்” - பிரதமர் மோடி

பிரதமர் மோடி, ``வரும் ஆண்டுகளில், நாம் 'பஞ்சபிரான்' (5 விஷயங்களில்) மீது கவனம் செலுத்த வேண்டும், முதலில், வளர்ந்த இந்தியாவின் பெரிய தீர்மானங்கள் மற்றும் உறுதியுடன் முன்னேற வேண்டும்; இரண்டாவதாக, அடிமைத்தனத்தின் அனைத்து தடயங்களையும் அழிக்க வேண்டும். மூன்றாவதாக, நமது பாரம்பரியத்தைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும், நான்காவது, ஒற்றுமையின் வலிமை, இறுதியாக ஐந்தாவது, பிரதமர் மற்றும் முதல்வர்களை உள்ளடக்கிய அனைத்து குடிமக்களின் கடமைகள்.

இன்று, டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியைப் பார்க்கிறோம், நாட்டில் ஸ்டார்ட்அப்கள் வளர்ந்து வருகின்றன, மேலும் 2,3-ம் நிலை நகரங்களில் இருந்து நிறைய திறமைசாலிகள் வருகிறார்கள். நம் திறமையில் நம்பிக்கை வைக்க வேண்டும்” என்றார்.

பிரதமர் மோடி

தொடர்ந்து பேசிய பிரதமர், ``இந்தியாவை முதலில் வைத்திருக்க வேண்டும், இது ஒன்றுபட்ட இந்தியாவுக்கு வழி வகுக்கும். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதே லட்சியம்.

மகாத்மா காந்தியின் கடைசி மனிதன் வரை அடைய வேண்டும் என்ற கனவு, கடைசி மனிதனையும் திறமையாக மாற்ற வேண்டும் என்ற அவரின் லட்சியம்... அதற்காக என்னை அர்ப்பணித்தேன். அந்த எட்டு வருடங்கள் மற்றும் சுதந்திரத்தின் பல வருட அனுபவத்தின் விளைவாக, 75 ஆண்டுகால சுதந்திரத்தில் ஒரு திறனைக் காண முடிகிறது.” என்றார்.

``அடுத்த 25 ஆண்டுகள் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமானது” - பிரதமர் மோடி

பிரதமர் மோடி, ``இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக உருவாக வேண்டும். என்னுடன் சேர்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள்.... அனைவரும் ஒன்றாக முன்னேறுவோம். நமது குறிக்கோள்கள் எண்ணங்கள் மிகப்பெரியதாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு இல்லத்திலும் தேசியக் கொடியை ஏற்றி, மக்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தி உள்ளனர். எனது கோரிக்கையை ஏற்று வீடுகளில் தேசியக் கொடி ஏற்றியயது மிக மகிழ்ச்சியாக இருந்தது.

அடுத்த 25 ஆண்டுகள் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமானது. 2047-க்குள் சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனைவாக்க வேண்டும். பெரிய இலக்குகளை நிர்ணயிப்பது மட்டுமே இந்தியாவில் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும். அடிமைத்தனத்தை முழுவதுமாக வேரறுக்க வேண்டும். நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும்.

நமது பாரம்பரியத்தின் மீது நாம் பெருமைப்பட வேண்டும். கர்வத்துடன் பாரம்பரியத்தை நாம் பாதுகாக்க வேண்டும். நாட்டு மக்கள் அனைவரும் நாட்டின் வளர்ச்சிக்கு தங்கள் பங்களிப்பை அர்ப்பணிக்க வேண்டும். சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் ஆகும் போது நமது முக்கிய குறிக்கோள்களை அடைந்து காட்ட வேண்டும்.” என்றார்.

``2014 -ல், குடிமக்கள் எனக்கு ஒரு பொறுப்பை வழங்கினர்” - பிரதமர் மோடி

பிரதமர் மோடி செங்கோட்டையில், ``நாம் சுதந்திரம் அடைந்தபோது நமது வளர்ச்சிப் பாதையில் சந்தேகம் கொண்டனர் பலர். ஆனால், இந்நாட்டு மக்களிடம் வித்தியாசமான ஒன்று இருப்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. இந்த மண் சிறப்பு என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

இந்தியா ஒரு லட்சிய சமூகம், அங்கு மாற்றங்கள் கூட்டு உணர்வால் இயக்கப்படுகின்றன. இந்திய மக்கள் நேர்மறையான மாற்றங்களை விரும்புவதோடு, அதற்கு பங்களிக்கவும் விரும்புகிறார்கள். ஒவ்வொரு அரசாங்கமும் இந்த லட்சிய சமுதாயத்திற்கு தீர்வு காண வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசியவர், ``இந்த 75 ஆண்டுகால பயணத்தில், நம்பிக்கைகள், லட்சியங்கள் , உயர்வு, தாழ்வுகளுக்கு மத்தியில் அனைவரின் முயற்சியால் நம்மால் முடிந்த இடத்தை அடைந்தோம். 2014 -ல், குடிமக்கள் எனக்கு ஒரு பொறுப்பை வழங்கினர். சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்த முதல் நபர், செங்கோட்டையில் இருந்து இந்த நாட்டின் குடிமக்களைப் புகழ்ந்து பாடும் வாய்ப்பைப் பெற்றார்.” என்றார்.

``இந்தியா ஜனநாயகத்தின் தாய்” - மோடி

பிரதமர் மோடி, ``'ஆசாதி மஹோத்சவ்' அன்று, நமது பல தேசிய வீரர்களை நினைவு கூர்ந்தோம். ஆகஸ்ட் 14 அன்று, பிரிவினையின் கொடூரங்களை நினைவு கூர்ந்தோம். கடந்த 75 ஆண்டுகளில் நமது நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கு பங்களித்த நாட்டின் அனைத்து குடிமக்களையும் நினைவுகூரும் நாள் இன்று.

சுதந்திரத்திற்காகப் போராடியவர்களோ அல்லது தேசத்தைக் கட்டியெழுப்பியவர்களோ, டாக்டர் ராஜேந்திர பிரசாத், நேரு ஜி, சர்தார் படேல், எஸ்.பி.முகர்ஜி, எல்.பி.சாஸ்திரி, தீன்தயாள் உபாத்யாயா, ஜே.பி. நாராயண், ஆர்.எம்.லோகியா, வினோபா பாவே, நானாஜி தேஷ்முக், சுப்பிரமணிய பாரதி, என அத்தகைய சிறந்த ஆளுமைகளின் முன் தலைவணங்கும் நாள்” என்றார்.

தொடர்ந்து, ``இந்தியா ஜனநாயகத்தின் தாய். இந்தியா தனது 75 ஆண்டு கால பயணத்தில் பல சவால்களை எதிர்கொண்டதுடன், விலைமதிப்பற்ற திறன் கொண்டது என்பதை நிரூபித்துள்ளது. நம் நாட்டு மக்கள் பல முயற்சிகளை மேற்கொண்டனர், எதையும் எப்போதும் கைவிடவில்லை, தங்கள் உறுதிகளை மங்க விடவில்லை” என்றார் மோடி.

``பல ஆண்டுகளாக மறைக்கப்பட்ட சுதந்திர வீரர்களை வெளிக்கொண்டு வருவோம்”

பிரதமர் மோடி, ``ராணி லக்ஷ்மிபாய், ஜல்காரி பாய், சென்னம்மா, பேகன் ஹஸ்ரத் மஹால் என இந்தியப் பெண்களின் வலிமையை நினைத்துப் பார்க்கும்போது ஒவ்வொரு இந்தியாவும் பெருமிதம் கொள்கிறது.

மங்கள் பாண்டே, தாத்யா தோபே, பகத் சிங், சுகதேவ், ராஜ்குரு, சந்திரசேகர ஆசாத், அஷ்பகுல்லா கான், ராம் பிரசாத் பிஸ்மில், மேலும் ஆங்கிலேயர் ஆட்சியின் அடித்தளத்தை அசைத்த நமது எண்ணற்ற புரட்சியாளர்களுக்கு இந்த தேசம் நன்றி கூறுகிறது. மேலும் போராட்டத்தில் பங்கெடுத்து வெளியே தெரியாமல் பிறக்கணிக்கப்பட்டவர்களையும் நினைவு கூர்வோம். பல ஆண்டுகளாக மறைக்கப்பட்ட சுதந்திர வீரர்களை வெளிக்கொண்டு வருவோம்” என்றார்.

மேலும், ``சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி பேசும்போது பழங்குடியின சமூகத்தை மறக்க முடியாது. பகவான் பிர்சா முண்டா, சித்து-கன்ஹு, அல்லூரி சீதாராம ராஜு, கோவிந்த் குரு, என பழங்குடி சமூகத்தை சேர்ந்த மாத்ருபூமிக்காக வாழவும் இறக்கவும் தூண்டிய எண்ணற்ற பெயர்கள் உள்ளன” என்றார்.

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை!  

இந்தியாவின் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய பிரதமர் மோடி, தனது உரையை தொடங்கினார். பிரதமர் மோடி, ``இந்த சுதந்திர தினத்தில் அனைத்து இந்தியர்களுக்கும், இந்தியாவை நேசிக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய தீர்மானத்துடன், புதிய திசையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள்.

``”

கடமைப் பாதையில் தங்கள் இன்னுயிரை ஈந்த காந்திஜி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பாபாசாகேப் அம்பேத்கர், வீர் சாவர்க்கர் போன்றோருக்கு குடிமக்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறார்கள்” என்றவர், வேலு நாச்சியார், விவேகானந்தர், தாகூர் ஆகியோர் பங்களிப்பு குறித்தும் பேசினார். மேலும் சுதந்திர போராட்டத்தில், பெண்கள், பழங்குடியினரின் பங்களிப்பு மிகப் பெரியது என்றார் பிரதமர் மோடி.

தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி!

இந்தியாவின் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி. முன்னதாக அவர் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பை ஏற்றார். இன்னும் சற்றுநேரத்தில் சுதந்திர தின உரையை நிகழ்த்த இருக்கிறார் பிரதமர் மோடி!

மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி!

இந்தியாவின் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

சிக்கிமில் 18,800 அடி உயரத்தில் ITBP வீரர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடினர்!

76-வது சுதந்திர தின விழா!

இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலை தலைநகர் டெல்லியிலுள்ள செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றி நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

செங்கோட்டை

சுமார் ஏழாயிரம் பேருக்கு செங்கோட்டை சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. பத்தாயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றும்வரை, அந்தப் பகுதியைச் சுற்றி ஐந்து கிலோ மீட்டர் பரப்பளவில் பட்டம் பறக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், கண்காணிப்பு பணியில் டி.ஆர்.டி.ஓ எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/delhi-red-fort-75th-independence-day-celebration-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக