`கல்வி என்பது வியாபாரப் பண்டமல்ல; அது அனைத்து குடிமக்களுக்குமான உரிமை!' என மேடைப்பேச்சில் முழங்கும்போது கைத்தட்டல்கள் கிடைக்கலாம். ஆனால், நிதர்சனம் என்னவென்றால் கல்வி சேவைப் பட்டியலிலிருந்து மாற்றலாகி எப்போதோ வியாபாரப் பட்டியலுக்குச் சென்றுவிட்டது. படிப்பது அடிப்படை உரிமை, அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி என்பது அரசின் கொள்கை என பட்டிதொட்டியெங்கும் பள்ளிகளை அரசு திறந்தாலும், தரமான கட்டணக் கல்வி, சரளமான ஆங்கிலப் பேச்சு, 100% தேர்ச்சி என்ற தனியார் பள்ளிகளின் தாரக மந்திரத்தை நோக்கியே தமிழ்நாடு பெற்றோர்கள் தவம் கிடக்கின்றனர். தங்கள் சக்திக்கும் அப்பாற்பட்டு தங்கள் குழந்தைகளைத் தனியார்ப் பள்ளிகளில் சேர்க்கின்றனர். பல பெற்றோர்கள் தாங்கள் நினைத்ததுபோல குழந்தைகளைத் தலைசிறந்த மாணவர்களாக படிப்பை முடித்து வெளியில் கூட்டிச்சென்றாலும், பல இன்னல்களால் படிப்பைத் தொடரமுடியாமல் பாதியிலேயே தற்கொலை செய்துகொண்ட குழந்தைகளின் சடலத்தைச் சுமந்துசெல்லும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்... என்னக்காரணம்?'
கள்ளக்குறிச்சி மாவட்டம், கணியாமூர் தனியார்ப் பள்ளி மாணவியின் மர்ம மரணம் தமிழ்நாட்டையே பதற்றத்தில் ஆழ்த்தியது. மாணவியின் மரணத்துகான உண்மைக் காரணம் என்னவென்று முழுமையாக உறுதிப்படுத்தப்படாத நிலையில் பள்ளி நிர்வாகிகள், போராட்டக்காரர்கள் என இருதரப்பிலும் கைது நடவடிக்கையை முடுக்கி விட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. இதேபோல கடந்த ஓராண்டில் பாலியல் தொந்தரவு, படிப்புச் சுமை, ஆசியர்களின் அழுத்தம், தாழ்வுமனப்பான்மை என பல காரணங்களால் தனியார் பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. தொடர்ச்சியானப் புகார்களில் சிக்கும் தனியார்ப் பள்ளிகளின் பட்டியலும் நீண்டுகொண்டிருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில், கணியாமூர் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் தனியார்ப் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் சூறையாடியதில் `பள்ளிக்கு ரூ.50 கோடி நட்டம், 4,000 மாணவர்களின் மாற்றுச்சான்றிதழ்கள் தீயில் எரிந்து நாசம்' எனக்கூறி தனியார்ப் பள்ளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தனி சட்டம் கொண்டுவர வேண்டும் என தனியார்ப் பள்ளிகள் சங்க நிர்வாகிகள் கோரிக்கை வைத்திருக்கின்றனர். எதிர்தரப்பில், `பள்ளி மாணவர்களின் உயிர் முக்கியமா சான்றிதழ்கள் முக்கியமா? தொடர் குற்றச்சாட்டுகளில் சிக்கும் தனியார்ப் பள்ளிகளை அரசுடமையாக்க வேண்டும்' என சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்களும் கோரிக்கை வைத்திருக்கின்றனர். இருதரப்பு நியாயங்களையும் கேட்டறிந்தோம்.
`தனியார்ப் பள்ளிகளை அரசுடமையாக்க வேண்டும்'
``தனியார்ப் பள்ளிகளில் நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்பதற்கு ஆளில்லை; பணபலத்தாலும், பயமுறுத்தலாலும் எந்தத் தகவலும் வெளியில் கசியாதபடி பார்த்துக்கொள்கிறார்கள். படிப்பு, மதிப்பெண்களைக் காரணம்காட்டி மாணவர்கள், பெற்றோர்களை வாய்மூட வைத்திருக்கின்றனர். மாணவர்கள் தங்கள் பிரச்னைகளை வெளியில் சொல்வதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடுகிறது" என்கிறார் கல்வியாளர் எஸ்.உமா மகேஸ்வரி.
குறிப்பாக, ``பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்கவேண்டும் என்பதற்காக பெற்றோர்களின் வற்புறுத்தலாலும், ஆசிரியர்களின் அறிவுறுத்தாலும் தனியார்ப் பள்ளிகளின் ஹாஸ்டலில் தங்கி படிக்கவைக்கப்படும் மாணவர்கள்தான் அதிகளவு பாதிக்கப்படுகிறார்கள். பள்ளியில் நடக்கக்கூடிய பிரச்னைகளை வீட்டில் பெற்றோர்களிடம் கூற முடியாத சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். ஹாஸ்டல், ரெசிடென்சியல் பள்ளிகளில் குழந்தைகளுக்கு என்ன நடக்கிறது என்பதே வெளியில் தெரிவதில்லை.
சமீபத்தில்கூட விடுமுறையில் வந்த தனியார்ப் பள்ளிக் குழந்தைகள் சிலரிடம் நான் சாதாரணமாகப் பேசியபோது, பள்ளியில் அவர்களுக்கு என்னென்னக் கொடுமைகள் நடக்கின்றன, பாலியல் சுரண்டல்கள் நடக்கின்றன என்பதையெல்லாம் 13 வயதுக்குள்ளான குழந்தைகளே சொல்கிறார்கள். காலங்காலமாகவே ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் பள்ளிகளில் Abuse நடக்கிறது. தாங்கள் சுரண்டப்படுகிறோம் என்றுத் தெரியாமல் இருந்துவரும் மாணவர்கள் வளரிளம் பருவத்தில் விவரம் தெரிந்து புரிந்துகொள்ளும்போதுதான் இதை வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் பெற்றோர்களிடம் சொன்னாலும்கூட பெரிய அளவில் பள்ளி நிர்வாகத்தை கேள்விகேட்காமல், படிப்பையே முக்கியமாகப் பார்க்கிறார்கள். இதனால் ஏற்றுக்கொள்ள முடியாத பல விளைவுகள் நேரிடுகிறது. அரசு, தனியார் என எல்லாப் பள்ளிகளிலுமே இது நடக்கிறது. வெளியில் வருவது 10% தான், வராதது 90%.
எந்தப் பள்ளியாக இருந்தாலும் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள்தானே வருகிறது, ஒரு பள்ளியில் நடக்கும்போதே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எல்லாப் பள்ளிகளுக்கும்சென்று ஆய்வு நடத்தவேண்டுமா இல்லையா? ஆனால் செய்யமாட்டார்கள். காரணம், எல்லாமே இங்கு பணம்தான். பணத்தைக்கொடுத்து அதிகாரிகளை சரிகட்டிவிடுகிறார்கள் தனியார்ப் பள்ளி நிர்வாகிகள். இதுமட்டுமல்ல, அரசியல்வாதிகள்தான் எங்குபார்த்தாலும் தனியார் பள்ளிகளையும் கல்லூரிகளையும் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் அரசும் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க முன்வருவதில்லை. குற்றவாளிகள் யார் என்று தேடினால் அவர்களுக்குள்ளாகத்தான் இருப்பார்கள்.
தனியார்ப் பள்ளிகளை அரசாங்கமே வளர்த்துவிடுகிறது. கல்வி உரிமை சட்டம் (Right To Education Act) மூலம் தனியார் பள்ளிகளில் 25% இலவச இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் படிக்க, தனியாருக்கு கோடிக்கணக்கில் அரசாங்கம் பணம் கொடுக்கிறது. ஏன்? அரசுதானே மக்களுக்கு கல்வி கொடுக்க வேண்டும். ஒருபக்கம் தனியார் பள்ளிகளுக்கு தாராளமாக அங்கீகாரம் கொடுத்துவிட்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைகிறது, அதனால் ஆசிரியர்களை தூக்குகிறோம் என்றால் என்ன நியாயம்? யார் காசுகொடுத்தாலும் அங்கீகாரம் கொடுத்துவிடுவதா? இருப்பினும் நூற்றுக்கணக்கான தனியார் பள்ளிகள் இன்று அங்கீகாரம் இல்லாமல்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன. அரசு உத்தரவுகள், விதிமுறைகளெல்லாம் வெறும் அறிவிப்பாக மட்டுமே இருக்கிறது. செயல்பாட்டில் இல்லை. அரசின் எந்த உத்தரவுகளையும் தனியார் பள்ளிகள் மதிப்பதில்லை; குழந்தைகளை அடிக்கக்கூடாது என்பதும் அரசுப் பள்ளிகளுக்குதான், தனியார் பள்ளிகளில் போய்ப்பாருங்கள் உண்மை புரியும்" என்றார்.
மேலும், ``அரசாங்கம் முறையாக அரசுப் பள்ளிகளை சீரமைத்து, அனைத்து தொழில்நுட்பக் கட்டமைப்புகளையும் கொண்டுவந்தால் பெற்றோர்கள் ஏன் தனியார் பள்ளிகளை நோக்கிச் செல்லப்போகிறார்கள். இப்போதும்கூட அரசு பள்ளிகள் திறந்து இத்தனை நாள்களாகியும் நோட்டு, புத்தகங்கள் கொடுக்கப்படவில்லை. உண்மையாலுமே மக்களுக்கான அரசாக இருந்தால் ஒரே உத்தரவில் இவை அனைத்தையும் மாற்றவேண்டும். துணிந்து முடிவெடுக்கவேண்டும். பள்ளிக்கல்வி அலுவலர்கள் சுதந்திரமாக செயல்பட அரசு அனுமதிக்கவேண்டும். அரசுப் பள்ளிகளில் இருப்பதுபோல தனியார் பள்ளிகளிலும் `பள்ளி மேலாண்மைக் கமிட்டி(SMC)' ஏற்படுத்த வேண்டும். தொடர்ந்து பிரச்னை வரக்கூடிய தனியார் பள்ளிகளை அரசாங்கமே எடுத்து நடத்த வேண்டும். முதலில் ஒரு நான்கு பள்ளிகளை அரசுடமையாக்கிப் பாருங்கள், பிறகு எல்லாம் தன்னால் மாறும்!" என்கிறார் கல்வியாளர் எஸ்.உமா மகேஸ்வரி.
`தனியார் பள்ளிகளைப் பாதுகாக்க தனிச்சட்டம் வேண்டும்'
``தனியார் பள்ளிகள் மிகமிக முக்கியம். தமிழ்நாட்டில் 15,000 பள்ளிகள் இருக்கின்றன. அரசு கணக்குப்படி அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் 12,500. மேலும், 55,000 பள்ளி வாகனங்கள் இயங்குகின்றன. சுமார் 6 லட்சம் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பிற ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். அரசு விதிப்படி, அனைத்து அனுமதிகளையும் பெற்றுதான் பள்ளிகள் நடத்தப்பட்டுவருகின்றன. பள்ளிகளின் தரம், தேவையைப் பொறுத்து கட்டணங்கள் நியமிக்கப்படுகின்றன. வருவாயைப் பொறுத்து ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது" என்கிறார் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் தலைவர் நந்தகுமார்.
தொடர்ந்து பேசிய அவர், ``அரசுக்கு பெரும் பணச்சுமையை, பணிச்சுமையை குறைத்து, வேலைவாய்ப்பை கொடுத்து, தரமான கல்வியை கொடுத்து வருகிறோம். அதனால்தான் இன்றைக்கு சாதாரண கூலித்தொழிலாளிகள் முதல் அமைச்சர்கள், நீதியரசர்கள், தொழிலதிபர்கள் வரை தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். நாட்டிலும் விமானம், ரயில்வேதுறை என எல்லாமே தனியாரை நோக்கிதான் சென்றுகொண்டிருக்கின்றன. இன்றைக்கு எத்தனையோ அரசுப் பள்ளிகளில் சத்துணவு சாப்பிட்டு இறந்துபோனவர்கள், மயக்கம்போட்டு விழுந்தவர்கள் இருக்கிறார்கள். அரசுப் பள்ளிகளில் ஆயிரம் சம்பவங்கள் நடந்தாலும் வெளியில் வருவதில்லை, தனியார் பள்ளியில் ஒரு சம்பவம் நடந்துவிட்டால் எல்லோருக் எகிறி குதிக்கிறார்கள். ஏன் இந்த பாரபட்சம். இன்று பாலியல் புகார்களில் சிக்கி சிறையில் இருப்பவர்களில் அதிகம்பேர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்தான்" என குற்றம் சாட்டினார்.
மேலும், ``சிறிய சிறிய தனியார் பள்ளிகளில் அதிகாரிகள் விசிட் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அங்கு வாங்க வேண்டியதை வாங்கிக்கொண்டு சென்றுவிடுவார்கள். பெரிய பெரிய பள்ளிகளுக்குப்போகமாட்டார்கள். ஏனென்றால் அது அரசியல்வாதிகளின் பள்ளிகள். இதில் யாரை குற்றம் சொல்வது? வீட்டில் இருந்தால் மாணவர்கள் படிக்க மாட்டார்கள், சினிமா பார்ப்பார்கள் எனக்கருதி பெற்றோர்கள்தான் ஹாஸ்டலில் சேர்த்துவிடுகிறார்கள். பெரிய பள்ளிகளில் படிக்க வைத்தால் கௌரவம்; அதிக மதிப்பெண் எடுத்தால் கௌரவம் என்று பெற்றோர்கள் நினைப்பதும் தவறு.
தனியார் பள்ளிகளில் பல்வேறு கட்சிக்காரர்கள் சீட்டு கேட்பார்கள், டொனேசன் கேட்பார்கள்; கொடுக்கவில்லை என்றால் இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு பிரச்னையை கிளப்புவார்கள். இந்தக் காரணங்களுக்காக எத்தனையோ ஜோடிக்கப்பட்ட பொய் வழக்குகள் தனியார் பள்ளிகள்மீது போடப்பட்டிருக்கிறது. அப்படித்தான் பல பள்ளிகள் சிக்கியிருக்கின்றன. இவர்கள் சொல்வதைப்போல, தனியார் பள்ளிகளை அரசிடம் கொடுத்தால், மாணவர்கள் படிக்கமாட்டார்கள்; ஒழுக்கமாக இருக்க மாட்டார்கள்; படிக்காதே, அடிக்காதே என்றெல்லாம் சொல்லமுடியாது. மாணவர்களால் எக்ஸாம் ரிசல்ட் கொடுக்க முடியாது. யார் எக்கேடு கெட்டுப்போனால் என்ன... எனக்கு அரசாங்கம் சம்பளம் கொடுத்துவிடுகிறது, பள்ளிக்கு வாடகை கொடுத்துவிடுகிறது, எல்லா வரிகளையும் கட்டிவிடுகிறது என்ற மனோபாவம்தான் மேலோங்கும்" என்றார்.
``பொய்யான மருத்துவ சிகிச்சை அளித்ததால் இறந்துவிட்டார்கள் எனக்கூறி மருத்துவமனையை தாக்கும் சம்பவங்கள் அரங்கேறியதால் அரசாங்கம் மருத்துவமனையை பாதுகாக்க தனிச்சட்டம் கொண்டுவந்தது. அதன்படி மருத்துவமனைக்கு சேதம் விளைவித்தால் அவர்கள்மீது குண்டர் சட்டம் பாயும். அதேபோல, தனியார் பள்ளிகளையும் பாதுகாக்கவும் தனிச்சட்டம் கொண்டுவரவேண்டும்" என கோரிக்கை வைக்கிறார் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் தலைவர் நந்தகுமார்.
source https://www.vikatan.com/government-and-politics/education/private-schools-issues-need-a-school-protection-law-or-should-it-be-nationalized
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக