சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளைக் கடந்திருக்கிறோம். இந்தச் சந்தர்ப்பத்தில் இந்தியா என்னும் ஜனநாயக நாடு மக்கள் போக்குவரத்து தொடர்பாகச் சாதித்திருக்கும் விஷயங்களை இந்தக் கட்டுரையில் காண்போம்!
1. அமெரிக்காவுக்கு அடுத்து அதிகம் சாலைகள் இருப்பது இந்தியாவில்தான். 19 லட்சம் மைல் நீளத்துக்குச் சாலைகள் உள்ளன.
2. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நான்கு நகரங்களையும் தேசிய நெடுஞ்சாலைகளால் இணைக்கும் 5,846 நீளத் தங்க நாற்கரச் சாலைப் பணி 2012-ம் ஆண்டு முடிந்தது. நம் பயணத்தை இது எளிதாக்குகிறது.
3. லடாக் யூனியன் பிரதேசத்தில், கடல் மட்டத்திலிருந்து 19,300 அடி உயரத்தில் சாலை அமைத்து சாதனை படைத்திருக்கிறது இந்தியா. உலகின் மிக உயரமான இடத்தில் வாகனங்கள் பயணிக்கும் சாலை இதுதான்.
4. இமயமலையில் டிராஸ் மற்றும் சுரு நதிகளுக்கு இடையே அமைந்துள்ள பெய்லி பாலம், உலகின் மிக உயரமான பகுதியில் இருக்கும் சாலைப்பாலம். இந்திய ராணுவத்தின் இன்ஜினியரிங் பிரிவு இதைக் கட்டியது.
5. மும்பை மாநகரில் பாந்த்ரா மற்றும் வோர்லி பகுதிகளை இணைக்கக் கடல்மீது பாலம் கட்டப்பட்டுள்ளது. நெரிசலான சாலைகள் வழியாகப் பயணிக்காமல் குறுகிய காலத்தில் செல்லும் வசதியை இது தருகிறது. கம்பிகளின் தாங்கு திறனில் அமைக்கப்பட்ட சஸ்பென்ஷன் பாலம் இது. இதில் பயன்படுத்திய இரும்புக் கம்பிகளைப் பிணைத்தால், இந்த பூமியை ஒரு சுற்றுச் சுற்றிவிடலாம்.
6. உலகின் நான்காவது பெரிய ரயில்வே நெட்வொர்க், இந்திய ரயில்வே. உலகின் இரண்டாவது பிஸியான ரயில்வே சேவையாகவும் இது இருக்கிறது. 1,19,630 கி.மீ நீளப்பாதை, 7,216 ரயில் நிலையங்கள் என மிகப்பெரிய பொதுச்சொத்தாக இந்திய ரயில்வே செயல்படுகிறது.
7. இந்தியாவில் அதிகம் பேர் பணிபுரியும் நிறுவனம், இந்திய ரயில்வே. 10 லட்சத்துக்கும் மேலானவர்கள் பணி செய்கிறார்கள்.
8. ஈஃபிள் டவரைவிட 35 மீட்டர் உயரமாக இருக்கும் செனாப் பாலம், உலகின் மிக உயரமான ரயில்வே பாலம். செனாப் நதிக்கு மேலே 1,178 அடி உயரத்தில் இது இருக்கிறது.
9. இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. சின்ன சின்ன நகரங்களையும் இணைக்கும் விமானச் சேவைகள் வந்துவிட்டன. விமானக் கட்டணம் குறைந்து, சாமானியர்களும் வானத்தில் பறப்பது சாத்தியமாகியுள்ளது. உலகின் மிகச்சிறந்த விமான நிலையம் என்ற விருதை டெல்லி இந்திரா காந்தி விமான நிலையம் 2015-ம் ஆண்டு பெற்றது.
10. நதிகள், கால்வாய்கள், கழிமுகப் பகுதிகள் வழியே படகில் மக்கள் பயணிப்பது, சரக்குகள் எடுத்துச் செல்வது போன்றவற்றுக்கான நீர்வழிப் பாதைகளும் இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ளன. உலகிலேயே ஒன்பதாவது பெரிய நீர்வழிப் பாதை அமைப்பை இந்தியா கொண்டிருக்கிறது.
source https://www.vikatan.com/news/travel/india-75-top-10-achievements-of-india-in-transport-sector
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக