Ad

செவ்வாய், 14 ஜூலை, 2020

உலக சுகாதார நிறுவனத்துக்கும் அமெரிக்காவுக்கும் என்னதான் பிரச்னை? #DoubtOfCommonMan

விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், உலக சுகாதார நிறுவனத்தின் செயல்பாடு என்ன? அதிலிருந்து அமெரிக்கா ஏன் விலகியது? என்ற கேள்வியை எழுப்பிருந்தார் வாசகர் முருகன். அந்தக் கேள்வியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை இது.
DoubtOfCommonMan

இதேமாதிரி வாசகர்கள் கேட்ட கேள்விகளின் அடிப்படையில் எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரைகளை வாசிக்க... இங்கே க்ளிக் செய்யவும்

உலக சுகாதார நிறுவனம், உலக அளவில் மருத்துவத்துறையை கண்காணித்து வழிகாட்டும் ஒரு சர்வதேச அமைப்பு. உலக நாடுகள், தாங்கள் எதிர்கொள்ளும் மருத்துவம் சார்ந்த பிரச்னைகளை உலக சுகாதார நிறுவனத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லும். அந்த நிறுவனத்தில் உள்ள நிபுணர்கள், அதற்கான தீர்வை முன்மொழிவார்கள்.

சீனாவில் கோவிட்-19 பரவியுள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டு, இரண்டு மாதங்கள் கழித்து, ஜனவரியில்தான் அதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்திற்கு ( WHO) சீனா தெரிவித்தது. மேலும் இரண்டு மாதம் எடுத்துக்கொண்டு, மார்ச் 11-ல் கொரோனாவை, மனிதரிலிருந்து மனிதருக்குப் பரவும் கொள்ளை நோயாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. இந்த ஆறு மாத காலத்தில் கோவிட்-19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ், உலக அளவில் பரவி நிலைகுலையச் செய்துவிட்டது.

சீனாவில் வுகான் மாகாணத்தில் தொற்று ஆரம்பித்த அறிவிப்பு முதல், உலகளவில் அவசரநிலையை அமல்படுத்தியது மற்றும் தற்போது கொரோனா வைரஸ் காற்றின் மூலமும் பரவும் என்ற புதிய எச்சரிக்கை வரை, உலக சுகாதார நிறுவனத்தின் ஒவ்வோர் அறிவிப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. சமீபத்தில், உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகளிலிருந்து அமெரிக்கா வெளியேறியது உலக சுகாதார நிறுவனத்தை நோக்கி அனைவரின் கவனத்தையும் திருப்பியுள்ளது.

Corona (Representational Image)

ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கம்தான் உலக சுகாதார நிறுவனம். ஜெனிவாவைத் தலைமையிடமாகக் கொண்டு இந்த நிறுவனம் செயல்படுகின்றது. பொருளாதார மற்றும் சமூக அளவில் திறம்படச் செயல்படும் அளவுக்கு அனைவரும் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்ற நோக்கத்தோடும் உலகளவில் மக்களின் நல்வாழ்வை முன்னிறுத்தியும் செயல்பட்டு வருகின்றது. இதன் உறுப்பு நாடுகள் பட்டியலில் தற்போது 194 நாடுகள் உள்ளன.

உலக சுகாதார நிறுவனத்தின் முக்கிய செயல்பாடுகள்.

*நோய்களைத் தடுப்பது, தொற்று நோய்கள் பரவுவதைத் தீவிரமாகக் கண்காணித்து அதைக் கட்டுப்படுத்துவது.

சின்னம்மைக்குத் தீர்வைக் கொண்டுவந்ததிலும், போலியோ நோயைக் கட்டுப்படுத்தியதிலும் சிறந்த முறையில் இந்த நிறுவனம் பங்காற்றியது. கொரோனா வைரஸ் போன்ற கொள்ளை நோய்கள் பரவும் காலகட்டத்தில், உலகளவில் அந்த நோய்த் தொற்றினுடைய பரவலைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகளை எடுக்கின்றது. அதேநேரம், இருதய நோய், புற்றுநோய், மரபணுக் கோளாறு நோய்கள், பார்வை இழப்பு, மன நோய் போன்ற பல தொற்றா நோய்களின் மீதும் கவனம் செலுத்தி வருகிறது.

*கர்ப்பிணிகளின் நலன், குழந்தைகள் நலன், சுகாதாரக் கல்வி, ஊட்டச்சத்து, மனித இனப்பெருக்கம் ஆகியவை குறித்துப் பல வழிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது. உறுப்பு நாடுகள் செயல்படுத்தி வரும் சுகாதார மேம்பாட்டிற்கான வழிமுறைகளுக்கும் ஆதரவு அளிக்கின்றது.

*சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதாரம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், பிறப்பு, இறப்பின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்தல், உலகளவில் மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு ஆதரவளித்தல் போன்ற பணிகளையும் உலக சுகாதார நிறுவனம் மேற்கொள்கிறது.

*ஐக்கிய நாடுகள் மற்றும் அதனுடன் இணைந்த மற்ற நிறுவனங்களுடன் சேர்ந்து இந்த நிறுவனமும் செயல்படுகின்றது. உலக சுகாதார நிறுவனம், தனது நிதித் தேவையை இரண்டு வகைகளில் பெறுகின்றது. ஒன்று, உறுப்பு நாடுகள் தரும் சந்தா தொகை. இரண்டாவது, உறுப்பு நாடுகள் தாமாக விருப்பப்பட்டு அளிக்கும் தொகை மற்றும் இதர பங்களிப்பாளர்கள் அளிப்பது.

உலக சுகாதார நிறுவனம்
2018, 2019 ல் WHO-வுக்கான 15% சதவிகித நிதிப் பங்களிப்பு அமெரிக்காவினுடையது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (UN General Assembly) ஒத்துக்கொண்டுள்ள வரைமுறைப்படி, உறுப்பு நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் (GDP) பொறுத்து, உறுப்பு நாடுகளின் பங்களிப்புத் தொகை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்ணயிக்கப்படுகிறது. இவ்வாறு அளிக்கப்படும் தொகை மொத்த பட்ஜெட்டில் 20 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.

பெரும்பாலும் உறுப்பு நாடுகள் தாமாக விரும்பிப் பங்களிப்பு செய்கின்ற தொகை, ஐக்கிய நாடுகள் அமைப்பு, இண்டர் கவர்மெண்டல் ஆர்கனைசேஷன் (Inter-governmental organisation), கொடையாளர்கள் மற்றும் இதர வகைகளிலும் இதற்கான நிதி கிடைக்கின்றது.

2018-2019-ல் WHO-வுக்கு நிதியளித்த முதல் 10 நிதியளிப்பாளர்கள் (மில்லியன் டாலர்களில்)

National philanthropic Trust - 115.9,

Rotary International - 168,

European Commission - 213.3,

Japan - 233.9,

Germany - 358.8,

GAVI Alliance - 388.7,

Bill and Melinda Gates foundation - 455.3,

UK - 463.4,

USA - 851.6

உலக மக்கள் தொகையில் 4 சதவிகிதமே அமெரிக்கர்கள். ஆனால், கொரோனாவால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளில் கால் பங்கு அமெரிக்காவில்தான் நிகழ்ந்தது. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நோய்த்தொற்று மற்றும் உயிரிழப்பின் காரணமாக, ட்ரம்ப் WHO-வின் மேல் சரமாரியாக விமர்சனங்களை வைத்துள்ளார். 30 நாள்களுக்குள் WHO தன் நிலைப்பாட்டில் முன்னேற்றத்தைக் கொண்டு வரவில்லை என்றால் அமெரிக்கா, WHO உடனான தன் உறவை முறித்துக்கொண்டு, உலக அளவில் செயல்படும் ஏனைய பொது சுகாதார நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிக்குமென்று ஏப்ரல் மாதத்திலிருந்து கூறி வந்தார்.

``சீன அரசின் பொறுப்பற்ற தன்மையால், இன்று உலகமே கொரோனாவால் பாதிப்படைந்துள்ளது. சீனா சொல்வதைத்தான் WHO கேட்கிறது" என்று ட்ரம்ப் தன் வாதத்தை கடுமையாக முன்வைத்து வருகிறார்.

இந்த நோய்த் தொற்றுக் காலத்தில் தேவையான மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்று வருந்திக் கேட்டும், உலக சுகாதார நிறுவனம் செவி சாய்க்காததால் WHO-விலிருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்தது. இந்த அமைப்பிலிருந்து வெளியேறுவதால், எதிர்காலத்தில் உலகளவில் ஆரோக்கியத்தைப் பேணுவதிலும், நோய்களைக் கையாள்வதிலும் பின்னடைவைச் சந்திக்க நேரிடலாம்.

அதேநேரம், WHO-விலிருந்து விலக வேண்டுமானால் ஒரு வருடத்திற்கு முன்பாக உறுப்பினர்கள், விலகலைப்பற்றி அறிவிக்க வேண்டும். அதன்படி, அமெரிக்கா எடுத்துள்ள விலகும் முடிவானது 2021, ஜூலை 6-ம் தேதியிலிருந்துதான் அமலுக்கு வரும்.

விகடன் #DoubtOfCommonMan பக்கத்தை ஃபேஸ்புக்கில் பின்தொடர இங்கே க்ளிக் செய்யவும்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகள் கோவிட்-19-க்கு தடுப்பூசி உருவாக்குவதில் உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து செயல்படப் போவதாகவும் தாங்கள் வெளியேறுவதாக இல்லை என்றும் தெரிவித்துள்ளன. உலக நாடுகள், கொரோனாவிற்கான மருந்து மற்றும் தடுப்பூசி உருவாக்கத்தில் உலக சுகாதார நிறுவனத்திடம் அனுமதி பெறாமல், தங்கள் நாட்டின் மருத்துவச் சட்ட திட்டத்திற்கு உட்பட்டுச் செயல்படலாம் என்று இருந்தாலும், உலகமே கொரோனாவால் தத்தளிக்கும் இந்த வேளையில், இந்தக் கூட்டமைப்பிலிருந்து அமெரிக்கா விலகுவது தவறான முடிவாகக் கருதப்படுகின்றது. இது ஏழை நாடுகளையும் வளர்ந்துவரும் நாடுகளையும் பாதிக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்!



source https://www.vikatan.com/health/international/why-trump-decided-to-quit-world-health-organization-amidst-pandemic

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக