Ad

செவ்வாய், 14 ஜூலை, 2020

புதுக்கோட்டை: பறிபோகும் பெண் பிரதிநிதிகளின் உரிமைகள்! - எச்சரித்த கலெக்டர்

தமிழகம் முழுவதுமே சமீபகாலங்களாகவே உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுத் தேர்ந்தெடுக்கப்படும் பெண் உள்ளாட்சிப் பிரதிநிதிகளைச் செயல்படவிடாமல், அவர்களின் கணவர் உட்பட உறவினர்கள் பலரும் உள்ளாட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், பெரும்பாலான இடங்களில் அவர்களைக் கையெழுத்துகூட போடவிடாமல் உரிமையைப் பறிக்கும் வகையில் செயல்பட்டு வருவதாகவும் தொடர்ந்து புகார் சொல்லப்பட்டு வருகிறது.

ஆட்சியர் அலுவலகம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அதுபோன்ற புகார்கள் தொடர்ந்து வந்த நிலையில், பெண் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்குப் பதிலாகக் கணவரோ, உறவினர்களோ தலையிடுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறித் தலையிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Also Read: உள்ளாட்சியில் பெண்களாட்சி: பெண்களால்தான் நல்ல மாற்றங்கள் சாத்தியமாகும்!

இதுபற்றி மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி கூறும்போது, ``தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, பெண் உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை முழுமையாகப் பயன்படுத்தி சுதந்திரமாகவும் சிறப்பாகவும் செயல்பட அரசு அரசாணை பிறப்பித்து அறிவுறுத்தியுள்ளது. எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்குப் பதிலாக அவரின் கணவரோ, உறவினர்களோ செயல்பட முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி

ஆய்வுக் கூட்டங்கள், ஊராட்சிமன்றக் கூட்டங்கள் மற்றும் கிராம சபைக் கூட்டங்களில் தொடர்புடைய பெண் ஊராட்சி மன்றத் தலைவர்தான் பங்கேற்க வேண்டும். மாறாக அவர்களின் பதவியைப் பயன்படுத்தி கணவர் மற்றும் உறவினர்கள் பங்கேற்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.இதுதொடர்பான புகார்கள் இருந்தால், பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் கட்டணமில்லா 1800-425-9013, 04322-222171 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/pudukkottai-collector-warned-relatives-domination-in-local-bodies

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக