Ad

சனி, 18 ஜூலை, 2020

கொரோனா: `போராடிய நோயாளிகள்!’ - சொந்த செலவில் உணவு வழங்கிய கோட்டாறு இன்ஸ்பெக்டர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 2,195 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 815-பேர் குணமடைந்து சென்றுள்ளனர். 18 பேர் மரணம் அடைந்துள்ளனர். 1,362 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களில் சுமார் 800 பேர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். 67 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

அதேசமயம், கொரோனா பாதிக்கப்பட்டு அறிகுறிகள் எதுவும் இல்லாமல் உள்ளவர்கள் கோணத்தில் உள்ள அரசு கல்லூரி, ஆசாரிப்பள்ளம் மெடிக்கல் காலேஜ் அருகில் உள்ள தனியார் பள்ளி மற்றும் சில இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்றும், உணவு பற்றாக்குறை ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆசாரிப்பள்ளம் மருத்துக்கல்லூரி மருத்துவமனையை ஊழியர்கள் சுத்தம் செய்வதில்லை என அங்கு சிகிச்சையில் இருந்தவர்கள் வீடியோ வெளியிட்டனர். பின்னர், நோயாளிகள், தங்களுக்கு உணவு சரியாகக் கிடைப்பதில்லை என வீடியோ வெளியிட்டனர். இந்த நிலையில் கோணம் அரசு கல்லூரியில் தங்க வைக்கப்படுள்ள கொரோனா நோயாளிகள் தங்களுக்கு மதியம் உள்ள சாதம் மற்றும் ரசத்தை இரவு நேரத்திலும் கொடுப்பதாக வீடியோ வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளனர். மேலும், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி அருகில் தனியார் பள்ளியில் தங்க வைக்கப்பட்ட கொரோனா பாதித்த ஒருவர் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து புரோட்டா வாங்கச் சென்றதாகதி தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை அருகே உள்ள தனியார் பள்ளியில் தங்க வைக்கப்பட்டவர்கள் சரியாக உணவு கிடைக்கவில்லை என இரவு நேரத்தில் போராட்டத்தில் குதித்தனர். பள்ளி காம்பவுண்டில் ஏறிநின்று சத்தம்போட்டனர். அப்போது, அந்தப் பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கோட்டாறு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களுக்கு உணவு கிடைக்காததுதான் பிரச்னை என்பதை புரிந்துகொண்டார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் செந்தில் குமார், தனது சொந்த செலவில் அவர்களுக்கு புரோட்டா மற்றும் ஆம்ப்லேட் வாங்கிக்கொடுத்ததைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டனர்.

கோட்டாறு காவல் ஆய்வாளர் செந்தில் குமார்

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கூறுகையில், ``இரவு நேரத்தில் சுமார் 45 பேர் கொரோனா முகாமில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உணவு கிடைக்காததுதான் பிரச்னை எனப் புரிந்துகொண்டேன். உணவுக்காக அவர்கள் வெளியே வந்தால், கொரோனா தொற்று பிரச்னை ஏற்படும். எனவே, அவர்களின் குறையைப் போக்கும் விதமாகவும், போராட்டத்தை முடித்து வைக்கும் விதமாகவும் அவர்களுக்கு உணவு வாங்கி கொடுத்தேன்" என்றார்.

Also Read: “நடப்பாண்டில் கொரோனா தடுப்பூசி வர வாய்ப்பில்லை..!” - மருத்துவ ஸ்டார்ட்அப் சொல்லும் உண்மை!

கொரோனா முகாம்களில் உணவுப் பிரச்னை ஏற்பட காரணம் என்னவென்று அதிகாரிகளிடம் பேசினோம், ``சில நேரங்களில் எதிர்பாராத விதமாக நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துவிடுவதால் உணவு பிரச்னை ஏற்படுகிறது. உடனே அதை நிவர்த்தி செய்துவிடுகிறோம். மருத்துவமனை மற்றும் முகாம்களில் உள்ள நோயாளிகள் வீட்டில் இருந்து ஒருமுறை பயன்படுத்தும் வாழை இலை போன்றவற்றில் உணவு கொண்டு கொடுக்கலாம் என அனுமதித்துள்ளோம்" என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/kottar-inspector-distributes-food-to-corona-patients-in-isolation-ward

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக