Ad

திங்கள், 20 ஜூலை, 2020

சென்னை: `அம்மாவை வெட்டாதப்பா!' - தந்தையிடம் இருந்து தாயைக் காப்பாற்றிய சிறுமி

சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் சர்வமங்களா நகர் 2-வது மெயின் ரோடு விர்கான் சுக்திரி அப்பார்ட்மென்ட்டில் குடியிருந்து வருபவர் சீனிவாசன் (39). தனியார் வங்கியில் பணியாற்றி வந்துள்ளார். இவரின் மனைவி விஜயலட்சுமி (37). கடந்த சில மாதங்களாக சீனிவாசன், கோயில், யோகா எனச் சென்று வந்தார். கடந்த 20-ம் தேதி காலையில் மனைவி விஜயலட்சுமியிடம் கோயிலுக்குச் செல்ல சீனிவாசன் பணம் கேட்டுள்ளார்.

சிட்லபாக்கம்

அப்போது பணம் கொடுக்க விஜயலட்சுமி மறுத்துள்ளார். அதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சீனிவாசன், கத்தியை எடுத்து மனைவியைக் குத்தியுள்ளார். விஜயலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு கண்விழித்த அவரின் மகள் நேத்ரா (13), சீனிவாசனை தடுத்துள்ளார். அப்போது மகளுக்கும் கத்திக்குத்து விழுந்தது. இருவரும் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்ததும் சீனிவாசன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

விஜயலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு கண்விழித்த அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தாய், மகளை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். பின்னர் இது குறித்து தகவலறிந்த சிட்லபாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து சீனிவாசனைத் தேடி வருகின்றனர்.

சம்பவம் நடந்த இடம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயலட்சுமி, எஸ்.ஐ திவ்யாவிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, 2001-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு எம்.பி.ஏ படிப்பை மேல்மருவத்தூரில் படித்தபோதுதான் சீனிவாசன் எனக்கு அறிமுகமானார். இருவரும் ஒரே வகுப்பில் படித்தோம். அதனால் காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் 2006-ம் ஆண்டு குரோம்பேட்டையில் திருமணம் செய்துகொண்டோம். என் கணவர் சீனிவாசனுக்கு ஆந்திராவில் உள்ள வங்கியில் வேலை கிடைத்தது. அதனால் 2017-ம் ஆண்டு வரை குடும்பத்துடன் அங்கு வாழ்ந்தோம்.

2017-ம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் சீனிவாசனுக்கு வேலை கிடைத்தது. அதனால் ஆந்திராவிலிருந்து சென்னை வந்தோம். சிட்லபாக்கத்தில் தங்கியுள்ளோம். என் மகள் நேத்ரா (13) 9-ம் வகுப்பும் மகன் கிருஷ்ணேஸ்வரன் 3-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். என் கணவர் சீனிவாசன், கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். அவர் அடிக்கடி யோகா மையத்துக்கு செல்வார். வீட்டிலும் யோகா செய்து வருவார்.

18-ம் தேதி பிரதோஷம் என்பதால் சிவன் கோயிலுக்குச் செல்ல என்னிடம் பணம் கேட்டர். கையில் காசு இல்லாத நேரத்தில் இப்போது போக வேண்டாம் என்று கூறினேன். அதிலிருந்து என் மீது அவர் கோபமாகவே இருந்தார். 20-ம் தேதி அதிகாலை 3 மணிளவில் கோயிலுக்குச் செல்ல தயாரானார். அப்போது என்னைப் பார்த்து முறைத்தார். செலவுக்கு பணமும் கார் சாவியையும் கொடு என்று கேட்டார். நான் பேசாமல் நின்றிருந்தேன். அப்போது காலை 6.30 மணியளவில் என் கணவர் சமையல் அறையில் காய்கறிகளை வெட்டப் பயன்படுத்தும் கத்தியை எடுத்து வைத்திருந்தார். அப்போதே எனக்கு மனதில் ஏதோ விபரீதம் நடக்க போகிறது என்று உணர்ந்து நான், எனது சித்திக்கு போன் செய்து வீட்டுக்கு வரக்கூறினேன்.

சீனிவாசன்

பின்னர் அறையின் கதவை பூட்ட முயன்றபோது கதவை தள்ளினார். அப்போது உன்னை கொன்னாதான் நான் சுதந்திரமா கோயிலுக்கு போக முடியும் என்று ஆக்ரோஷமாக கத்திக்கொண்டு தலையில் கத்தியால் வெட்டினார். நான் அதை எனது வலது கையால் தடுத்தபோது என் கையில் பலமான வெட்டு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

அப்போது நான் அலறிய சத்தம் கேட்டு பக்கத்து அறையிலிருந்த என் மகள் ஓடிவந்து, ஐயோ அம்மாவை வெட்டாதப்பா என்று கத்திக்கொண்டே ஓடிவந்து என்னைக் காப்பாற்ற முற்பட்டபோது அவளின் வலதுபக்க முகத்தில் ஓங்கி வெட்டியதில் அவளுக்கு வலது கன்னத்தில் காயம் ஏற்பட்டது. மேலும் இடதுகை புஜம் கை முட்டி, மார்பு ஆகிய இடங்களில் குத்தியதில் ரத்தம் கொட்டியது.

சர்வமங்களா நகர்

Also Read: சென்னை: 2 வது திருமணம்; தங்கையைப் பெண் கேட்ட ரவுடி! - அம்மிக் கல்லால் கொலை செய்த அண்ணன்

அப்போது கீழ்பிளாட்டிலிருந்து சந்திரமோகன் என்பவரும் பக்கத்து வீட்டிலிருந்து சிவாவும் வந்தனர். என் கணவர் கையில் கத்தி வைத்திருந்ததால் அக்கம்பக்கத்தினர் வந்து தடுக்க முடியாமல் நின்றுவிட்டனர். சந்திரமோகன் என்பவர், என் மகளைக் காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அப்போது என் சித்தியும் தம்பி சுப்பிரமணியமும் வந்தார்கள். அவர்களும் சேர்ந்து என் கணவரைப் பிடிக்க முற்பட்டபோது கத்தியைக் காட்டி மிரட்டியபடி அவர் தப்பி சென்றுவிட்டார். பின்னர் என்னையும் தாம்பரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். என் கணவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திவ்யா, 341, 294 பி, 324, 506 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் சிட்லபாக்கத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/chennai-bank-employee-tried-to-kill-his-wife-and-daughter

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக