உதவி இன்ஜினீயர்
சென்னையில் கொரோனா தடுப்புப் பணியில் தன்னார்வலர்கள், தற்காலிக ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வடசென்னையில் கொரோனா விழிப்புணர்வு பணியில் கல்லூரி மாணவி ஒருவர் ஈடுபட்டுவந்துள்ளார். அந்த மாணவியும், உதவி இன்ஜினீயர் ஒருவரும் போனில் பேசும் ஆடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இதுதொடர்பாக எஸ்பிளனேடு போலீஸார் சம்பந்தப்பட்ட மாணவியிடம் விசாரித்தனர். அப்போது மாணவி நடந்த விவரத்தை போலீஸாரிடம் கூறினார்.
Also Read: `கொரோனா பணியிலும் ஒருதலைக் காதல்!' - சென்னை மாநகராட்சி இன்ஜினீயரை சிக்க வைத்த மாணவி
இந்தநிலையில் சம்பந்தப்பட்ட மாநகராட்சி உதவி இன்ஜினீயரை சஸ்பெண்ட் செய்து மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் உத்தரவிட்டார். இன்ஜினீயருடன் ஆடியோவில் பேசிய மாணவி, ஒரு புதிய ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், `இணையதளத்தில் வரும் ஆடியோ உண்மை கிடையாது. அதை வைத்து ஒரு பிரச்னையை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அனைவரும் அண்ணன் தங்கச்சி போலத்தான் பழகி வருகிறோம்' என்று கூறியிருந்தார்.
வழக்கு பதிவு
மேலும், சம்பந்தப்பட்ட இன்ஜினீயர் நல்லவர் என்றும் அவர் மீதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமியை சந்தித்து மனு ஒன்றைக் கொடுத்தார்.
இந்தநிலையில், எஸ்பிளனேடு மகளிர் போலீஸார், சம்பந்தப்பட்ட உதவி இன்ஜினீயர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 354 A மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிந்த போலீஸார் உதவி இன்ஜினீயரை தேடிவருகின்றனர்.
இதுகுறித்து துணை கமிஷனர் ஜெயலட்சுமியிடம் கேட்டதற்கு, ``உதவி இன்ஜினீயரும் மாணவியும் பேசிய ஆடியோ அடிப்படையில் இந்த வழக்கை பதிவு செய்துள்ளோம். சம்பந்தப்பட்ட இன்ஜினீயர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என மாணவி தெரிவித்துள்ளார். வழக்கு பதிவு செய்த பிறகு நீதிமன்றத்தில்தான் அதைச் சட்டரீதியாக வாபஸ் பெறுமாறு மாணவியிடம் தெரிவித்துள்ளோம்" என்றார்.
போலீஸார் வழக்கு பதிவு செய்ததையடுத்து மாணவி தரப்பிலும் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளனர்.
source https://www.vikatan.com/news/crime/chennai-police-filed-case-against-corporation-assistant-engineer
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக