சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த துளாவூர் கிராமத்தில் தொடர்ந்து பழைமையான மரங்கள் வெட்டிச் சாய்க்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் மட்டும் 30 டன் அளவுக்கு மேலே மரங்கள் வெட்டப்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.
குடிமராமத்து செய்கிறோம், வாய்க்கால் தூர்வாருகிறோம் எனக் கூறி அப்பகுதியில் உள்ள ஏகப்பட்ட மரங்களை அரசு உதவியோடு தனி நபர்கள் காலி செய்து வருவதாக அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்தனர்.
இதுகுறித்து அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் கூறுகையில்,``எங்கள் கிராமத்தில் நான்குக்கும் மேற்பட்ட ஊரணி, கண்மாய் நீர்ப்பிடிப்புகள் உள்ளன. இதைச் சுற்றியுள்ள புறம்போக்கு நிலங்களில் உள்ள பழைமையான மரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது தனிப்பட்ட நபர் ஒருவர் அரசு ஜே.சி.பி உதவியுடன் கண்மாய்களைத் தூர்வாருகிறோம், வரத்துக்கால்வாயை சரி செய்கிறோம் எனக் கூறி மரங்களைத் தீவிரமாக வெட்டுகிறார்.
அவரிடம் கேட்டால், `இது அரசு ஜே.சி.பி அதற்கு டீசல் தேவைப்படுகிறது. அதனால்தான் மரம் வெட்டுகிறோம்' என்று முன்னுக்குப் பின் முரணாகப் பதில் சொல்கிறார். அதிகாரிகளிடம் புகார் அளித்தால் கண்டும்காணமல் போகின்றனர். ஆனால், இங்கு டிராக்டர், டாடா ஏசி எனப் பல வண்டிகளில் வெட்டப்பட்ட மரங்கள் லோடு, லோடாகச் செல்கிறது. இதைப் பார்க்கும்போது ஈரக்கொலையே நடுங்குகிறது’’ என்று வேதனை தெரிவித்தார்.
Also Read: `ஒண்ணேகால் ஏக்கர் நிலம்; 300 பழ மரங்கள்!' -விதை பரவலுக்காக `உணவுக்காடு’ அமைக்கும் இன்ஜினீயர் இளைஞர்
கிராமத்தைச் சேர்ந்த நடராஜர்,``எங்கள் கிராமத்தில் அரசி கண்மாய் மற்றும் புக்களம் கண்மாயில் சமீபத்தில்தான் தூர்வாரப்பட்டு குடிமராமத்து பணி நடைபெற்றது. இந்நிலையில் அதே கண்மாய்களில் மீண்டும் குடிமராமத்து செய்வதாகக் கூறி அதிகப்படியான மண் அள்ளப்பட்டு தேசிய நெடுஞ்சாலைக்கு பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். மேலும், `வரத்துக் கால்வாயை சரி செய்து தருகிறோம்’ எனக் கூறிவிட்டு, எங்கள் கிராமத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தில் பழைமையான மரங்கள் வெட்டப்படுகின்றன.
வரத்துக் கால்வாய்க்கும் மரங்கள் இருக்கும் இடத்துக்கும் சம்பந்தமே இல்லை. இந்நிலையில் திட்டமிட்டு மரங்கள் வெட்டப்படுகிறது. சிவகங்கை மாவட்ட நிர்வாகத்துக்குச் சொந்தமான ஜே.சி.பி-யை வெட்டப்படும் மரங்களை, வாகனங்களில் ஏற்றிவிட பயன்படுத்துகின்றனர்.
இந்தச் செயல் வேதனை அளிக்கிறது. புகார்களை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. வெட்டப்படும் மரங்கள் அனைத்தும் மிகவும் பழைமையானது. எனக்கு 45 வயதாகிவிட்டது. நான் சிறுவயதாக இருக்கும்போதே அவை எல்லாம் ஓங்கி உயர்ந்து பெரும் மரங்களாய் நின்றவை. தற்போது அது வெட்டப்படுவது கண்ணீரை வரவழைக்கிறது" என்றார்.
இது குறித்து அந்தக் கிராமத்தின் வி.ஏ.ஓ-விடம் கேட்டபோது,``நான் தற்போது விடுப்பில் உள்ளேன் எனக்கு ஒன்றும் தெரியாது’’ என்பதோடு முடித்துக்கொண்டார்.
திருப்பத்தூர் தாசில்தார் ஜெயலெட்சுமியிடம் கேட்டபோது, ``துளாவூர் கிராமப் பகுதியில் வரத்து கால்வாய்கள் சரி செய்யப்படுகிறது. இது அரசு சார்பாகத்தான் செய்யப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் உத்தரவில் சட்டத்துக்கு உட்பட்டுதான் பணிகள் நடைபெறுகின்றன. சட்ட விரோதமான செயல்கள் எதுவும் நடக்கவில்லை. வரத்து கால்வாயில் சில மரங்கள் எதுவும் வெட்டப்பட்டிருக்கலாம். தவறான செயல்கள் எதுவும் நடக்கவில்லை’’ என்றார்.
இதுகுறித்து விளக்கம் பெற மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தனைத் தொடர்புகொண்டோம். ``அப்பகுதியில் வரத்துக் கால்வாய் சீரமைப்பு நடைபெறுகிறது. நீர் ஆதராங்களுக்கு தண்ணீரை முறையாகக் கொண்டு செல்ல வேண்டும் என வரத்துக் கால்வாய்கள் சுத்தம் செய்யப்படுகின்றன. அதில், இடையூறாக இருக்கும் மரங்கள் சில வெட்டப்படுகின்றன. அதற்குறிய பணத்தை வருவாய் அலுவலர்கள் ஆய்விற்குப் பின் கட்டிவிடுவார்கள்’’ என்றார்.
source https://www.vikatan.com/social-affairs/controversy/trees-uprooted-illegally-near-water-bodies-alleges-sivaganga-village-people
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக