Ad

திங்கள், 20 ஜூலை, 2020

பெட்ரோல் விலையேற்றம்; இளைஞர்களுக்கு மரண தண்டனை! - மீண்டும் பற்றியெரியும் இரான்

அணு ஆயுதம் தொடர்பான பிரச்னையில் ஏற்பட்ட மோதலின் விளைவாக இரான் மீது கடுமையான பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா. இதனால் இரானில் பொருளாதார தேக்கநிலை, பணவீக்கம் ஆகியவை அதிகரித்து, இரானிய பண மதிப்பு குறைந்துள்ளது. எனவே, அங்கு அத்தியாவசிய பொருள்களின் விலை பல மடங்கு அதிகமாகியுள்ளது. இந்தப் பொருளாதார பிரச்னையைத் தீர்க்க டீசல் மற்றும் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலையை ஒரே இரவில் 50% உயர்த்தியது இரான் அரசு.

இரான் போராட்டம்

அதன்படி, இந்திய மதிப்பில் ரூ.18-க்கு விற்கப்பட்டு வந்த பெட்ரோல் ரூ.27 ஆக உயர்த்தப்பட்டது. இரான் அரசின் இந்த விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த நவம்பர் மாதம் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் வெடித்த கலவரத்தினால் 300-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். அமீர் ஹூசைன் மொராடி, சயீத் தாம்ஜிடி, மொஹம்மத் ராஜாபி ஆகிய மூன்று இளைஞர்களும் விலையுயர்வைக் கண்டித்து நடந்த போராட்டத்தைத் தீவிரமாக முன்னெடுத்தனர்.

Also Read: "எண்ணெய், இயற்கை வளத்தை பகிர்ந்துகொள்ளத் தயார்"- ஈரான் அறிவிப்பு

இதனையடுத்து, அரசுப் பேருந்தைக் கொளுத்தியது, வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்குத் தீவைத்ததாகக் கூறி இந்த 3 இளைஞர்களையும் இரான் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 6 மாதங்களாக நடந்த வந்த இந்த வழக்கில் கடந்த வாரம் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், இந்த மூவருக்கும் மரணதண்டனை விதித்து உத்தரவிட்டது இரான் உச்ச நீதிமன்றம்.

இந்தத் தீர்ப்பு இரான் மட்டுமல்லாது, மொத்த உலக நாடுகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மூன்று பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

போராட்டம்

அவர்களை விடுவிக்க வேண்டும் என #StopExecutionsInIran மற்றும் #dontexecuteiniran போன்ற ஹேஸ்டாக்குகள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன. இதனையடுத்து அந்த மூன்று இளைஞர்களின் மரண தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர்களின் வழக்கறிஞர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இரானில் இனி யாரும் போராட்டம் நடத்தக்கூடாது என்பதற்காகவே அரசு இப்படி நடந்துகொள்வதாகப் பலர் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். உலகிலேயே அதிக தூக்குத்தண்டனை நிறைவேற்றும் நாடுகளில் முதல் இடத்தில் இரான் உள்ளது. உலகம் முழுவதும் கோவிட் 19 பரவல் அதிகமாகியிருக்கும் இந்தநேரத்திலும் தூக்குத் தண்டனையைக் குறைக்கவில்லை எனப் பலரும் குற்றம் சுமத்தியுள்ளனர்.



source https://www.vikatan.com/news/international/iran-halts-execution-of-three-protesters

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக