Ad

திங்கள், 20 ஜூலை, 2020

`மூச்சுப்பயிற்சி; மூலிகை மருந்துகள்!’- தேனியில் கோவிட் கேர் சித்த மருத்துவ சிகிச்சை மையம்

கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவத்தின் மூலம் சிகிச்சை அளித்து, பூரண குணமடையச் செய்யும் விதமாக, சென்னையில் முதன் முதலாக, சித்த மருத்துவ சிகிச்சை மையம் துவங்கப்பட்டது. அதன்படி, கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துகளை மட்டுமே கொடுத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால், நோயாளிகள் விரைவில் குணமடைந்து வீடு திரும்புகின்றனர்.

சித்த மருத்துவ சிகிச்சை மையம்

அதனை அடுத்து, மாவட்டம் தோறும் சித்த மருத்துவ சிகிச்சை மையம் துவங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள மேரி மாதா கலை அறிவியல் கல்லூரியில் `கோவிட் கேர் சித்த மருத்துவ சிகிச்சை மையம்’ துவங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவ் முயற்சியில், துவங்கப்பட்டுள்ள இந்த சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில், தற்போது 71 பேர் சிகிச்சை எடுத்துவருகின்றனர்.

Also Read: மாமருந்தாகும் மஞ்சள் பால்! - சித்த மருத்துவர் விக்ரம்குமார்

இது தொடர்பாக மாவட்ட சித்த மருத்துவ அலுவலரிடம் பேசிய போது, ``சித்த மருத்துவத்தில் 32 வகையான அக மருந்துகளும், 32 வகையான புற மருந்துகளும் உள்ளன. கொரோனா நோயாளிகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய புற மருந்துகளான கபசுரக் குடிநீர், தாளிசாதன சூரணம், அமுக்ரா சூரணம் போன்றவை மட்டுமல்லாமல், புற மருந்துகளாக, ஓமப்பொட்டணம், மஞ்சள் திரிபுகை ஆகியவற்றைக் கொடுக்கிறோம்.

சித்த மருத்துவ சிகிச்சை மையம்

இதனை மூக்கில் வைத்து சுவாசிக்கும் போது, சுவாசப் பாதை மற்றும் நுரையீரலில் உள்ள தொற்றுகள் நீங்கும். இதோடு, நோயாளிகள் தங்கியுள்ள அறையில் அடிக்கடி மூலிகை தூபம் போடப்படுகிறது. இதனால், காற்றில் உள்ள கிருமிகளும் அழியும்.

தினமும் காலை மிளகு, சீரகம் போடப்பட்ட வெண்பொங்கல், 11 மணிக்கு நெல்லிக்காய் ஜூஸ், மதியம் உளுந்து சாதம், சாம்பா, ரசம் என உணவு முறைகளில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, காலை எழுந்தவுடன், `திருமூலர் பிராணாயாமம்’ சொல்லிக்கொடுக்கப்படும். இது சித்த மருத்துவத்தின் மிகச் சிறந்த மூச்சுப்பயிற்சி. இதனால், நுரையீரல் வலுப்பெறும். தற்போது அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ சிகிச்சை மையம், மாவட்ட ஆட்சியரின் முன்னெடுப்பில் தான் சாத்தியமானது.

Also Read: கபசுர குடிநீர்... கொரோனாவுக்குத் தீர்வாகுமா சித்த மருத்துவம்?

பணிகள் அனைத்தையும் சிறப்பு வருவாய் அலுவலர் தியாகராஜன் கவனித்துவருகிறார். தற்போது 71 பேர் சிகிச்சையில் இருந்தாலும், 100 பேருக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய வசதி இங்குள்ளது. 2 சித்த மருத்துவர்கள், 4 செவிலியர்கள், 3 தூய்மைப் பணியாளர்கள், 2 உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் முழு கவச உடையில் தங்கள் பணிகளை செய்துவருகிறார்கள்” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/healthy/covid-care-siddha-medical-treatment-center-inaugurated-in-theni

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக