Ad

புதன், 15 ஜூலை, 2020

நாகை: `இலவச சூரியஒளி மின்சாரம்!' - பிறந்தநாளில் அசத்திய ஊராட்சி மன்றத் தலைவர்

சாலை, குடிநீர், மின்சாரம் என எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் வாழ்ந்துவரும் ஏழைக் குடும்பத்துக்கு, கருப்பம்புலம் ஊராட்சி மன்றத் தலைவர் சுப்பராமன் தன் பிறந்தநாளில் சூரியஒளி மின்சாரம் வழங்கியிருப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது.

சூரிய ஒளி மின்சாரம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கருப்பம்புலம் ஊராட்சி உள்ளது. கடந்த ஊராட்சி மன்றத் தேர்தலிலில் தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ் போன்ற பிரதான கட்சி வேட்பாளர்களைத் தோற்கடித்து, சுயேச்சையாகக் களமிறங்கி வெற்றிபெற்றவர் பட்டதாரி இளைஞரான சுப்புராமன்.

இவர் பதவியேற்ற நாள் முதல் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கருப்பம்புலம் வடகாடு இரட்டை ஓடை பகுதி மக்களின் 20 ஆண்டுகளுக்கு மேலான குடிநீர் வசதி கோரிக்கையை நிறைவேற்றியுள்ளார். அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக சிவன்கோயில் கிணற்றிலிருந்து 2 கிலோமீட்டர் தூரம் தலையில் குடிநீர் சுமந்து சென்றனர். அப்பகுதிக்கு புதிய கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் தண்ணீர் தந்துள்ளார்.

Also Read: மரத்தடி மாநாடு : உயிர்வேலி... உழவர் கடன் அட்டை... சூரிய ஒளி உலர்த்தி!

இந்நிலையில், தெற்குகாடு பகுதியில் வசித்து வந்த தச்சு தொழிலாளியான முருகையன் இறந்து 5 ஆண்டுகள் ஆகிறது. இவரின் மனைவி கோமதி முருகையன் இரண்டு பெண் குழந்தைகளுடன் தனியாக எந்த ஒரு அடிப்படை வசதிகளின்றி பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். அவருடைய வீட்டுக்கு ரூ. 35,000 சொந்த செலவில் சூரிய ஒளி மின்சாரம் வழங்கியிருக்கிறார் சுப்பராமன்.

சூரிய ஒளி மின்சாரம்

இதுபற்றி சுப்பராமனிடம் பேசினோம்.

"ஊராட்சி மன்றத் தேர்தலுக்கு வாக்கு சேகரிக்கும்போது இந்த குடும்பத்தின் பரிதாப நிலையை அறிந்தோம். அப்போது ஒரு வாக்குறுதி அளித்தோம். ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றால் கண்டிப்பாக மின் இணைப்பு வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றோம். அப்படி மின் இணைப்பு வழங்க முடியாத பட்சத்தில் சூரிய ஒளி மின்சாரம் அமைத்து தரப்படும் என்று உறுதி அளித்தோம். அதன்படி சொந்த செலவில் (150 Amps battery & 2 160 watts solrar pannel &inverter) சூரிய ஒளி மின்சாரத்துக்கு ஏற்பாடு செய்துள்ளேன்" என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/nagai-village-president-gave-free-solar-electricity-to-poor-family

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக