Ad

புதன், 15 ஜூலை, 2020

திருவள்ளூர்: ஆந்திர எம்.எல்.ஏ ஸ்டிக்கர்; கோவை பிரமுகரின் கார்! - ரூ.4 கோடி சிக்கிய பின்னணி

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள எளாவூரில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி உள்ளது. இந்தச் சோதனைச்சாவடி வழியாக நேற்று அதிகாலை நேரத்தில் தமிழக பதிவு எண் கொண்ட சொகுசுக் கார் வந்தது. சோதனைச் சாவடியில் இருந்த போலீஸார் காரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது காரிலிருந்த 4 டிராவல்ஸ் பேக்கில் கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது. அதுதொடர்பாக டிரைவர் மற்றும் காரிலிருந்த இருவரிடம் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் டிரைவர் லட்சுமி நாராயணன் (38) எனத் தெரிந்தது.

போலீஸாரிடம் சிக்கிய கார்

மேலும், அந்தக் காரில் ஆந்திர மாநிலம் ஓங்கோல் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (32), வசந்த் (36) ஆகியோர் இருந்தனர். பணம் தொடர்பாக போலீஸார் விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தனர். இதையடுத்து 3 பேரையும் கார் மற்றும் பணத்துடன் காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். கணக்கில் வராத பணத்தை போலீஸார் எண்ணியபோது, 4 கோடி ரூபாய் இருந்தது. பின்னர் பணத்தை போலீஸார் வருமானவரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பணத்தைப் பெற்றுக்கொண்ட வருமானவரித்துறையினர் காரில் வந்தவர்களிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள் பணத்துக்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து ஆந்திர மாநிலத்திலிருந்து இவ்வளவு ரூபாய் யாருக்குக் கொண்டு செல்லப்பட்டது என வருமான வரித்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீஸார், மாவட்ட எஸ்.பி அரவிந்தனுக்கு தகவல் தெரிவித்தனர். எஸ்.பி அரவிந்தன் உத்தரவின் பேரில் ஆரம்பாக்கம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சோதனைச் சாவடி

Also Read: ஹவாலா பணம்: `கட்டுக் கட்டாக நோட்டுகள்’ - வாளையார் பகுதியில் சிக்கும் மோசடிக் கும்பல்

இதுகுறித்து குறித்து போலீஸார் கூறுகையில், ``ஆந்திர மாநிலம் ஓங்கோல் பகுதியிலிருந்து இந்த சொகுசுக் கார் வந்துள்ளது. காரின் முன்பகுதியில் ஆந்திர மாநில எம்.எல்.ஏ ஒருவரின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. ஆனால் கார், தமிழக பதிவு நம்பரைக் கொண்டது. கோவையைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் பெயரில் கார் உள்ளது. அதனால் ரவிச்சந்திரனிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம். காரிலிருந்த பணம் யாருடையது என்று விசாரித்து வருகிறோம் வழக்கமாக ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு எளாவூர் சோதனைச் சாவடி வழியாக கஞ்சா, செம்மரம் ஆகியவை கடத்தப்படும். ஆனால், கோடிக்கணக்கில் பணம் கடத்தப்பட்டுள்ளது. ஆந்திர மாநில சோதனைச் சாவடிகளைக் கடந்து வந்த இந்தக் கார் தமிழக சோதனைச் சாவடியில் சிக்கிக்கொண்டது. ஹவாலா பணமா என்றும் விசாரித்து வருகிறோம்" என்றனர்.

சொகுசு காரில் கோடிக்கணக்கில் பணம் சிக்கிய சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று விசாரணை நடந்துவருகிறது.



source https://www.vikatan.com/news/crime/tn-police-seized-4-crore-rupees-in-tiruvallur

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக