Ad

புதன், 15 ஜூலை, 2020

தஞ்சை: `கொரோனா வார்டில் 100 நாள் உணவு; ஒரு வேளைகூட நிறுத்தல’ - இளைஞரின் சேவை

தஞ்சாவூரில் கொரேனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவக் கல்லுாரி சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்றவர்களுக்கு,100 நாள்களுக்கு மேலாக உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களைத் தனது சொந்த செலவில் வழங்கி வந்த இளைஞர் ஒருவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

கொரோனா வார்டு

தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் ரியாஸ்சுதீன் (38) விவசாயியான இவர் சமூக செயல்களையும் ஆர்வமுடன் செய்து வருபவர். இந்நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு 100 நாள்களுக்கு மேலாக உணவு, தண்ணீர் உள்ளிட்ட பொருள்களை வழங்கி வந்துள்ளார்.

தனக்கு கொரொனா பாதிப்பு ஏற்பட்டு விடும் என்ற அச்சம் கொள்ளாமல் முன் நின்று மூன்று வேளை உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளைத் தன் சொந்த பணத்தில் செய்து கொடுத்த ரியாசுதீனை கொரோனா தொற்றிலிருந்து குணமாகி சென்றவர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

கொரோனா 360

இது குறித்து ரியாஸ்சுதீனிடம் பேசினோம், ``கடந்த மார்ச் மாதம் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு நபருக்கு முதல் முதலாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு தேவையான உணவு, குடிநீர், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வாங்கிக் கொடுத்தேன்.

இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை அதிகமானது இதைத் தொடர்ந்து அவர்கள் எல்லோருக்கும் உணவு கொடுக்க வேண்டும் என நினைத்தேன். இதை என் நண்பர்கள் சிலரிடம் சொன்னேன் பலர் ஒதுங்கிக் கொள்ள சிலர் செய்யலாம் என முன் வந்தனர்.

தஞ்சை கொரோனா வார்டு முன்

அதன் பிறகு மாவட்ட நிர்வாகத்தின் உரிய அனுமதி பெற்று, மூன்று வேளை உணவுகளை, ஆட்கள் வைத்து சமைத்துக் கொடுக்கத் தொடங்கினோம். ஆரம்பத்தில் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எங்களுக்கு எதுவும் பாதிப்பு ஏற்படுமோ என பயந்தனர். உரிய பாதுகாப்பு உடை அணிந்துகொண்டு உணவு உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு மூன்று நேரமும் நேரத்துக்கு உணவைக் கொண்டு சென்று கொடுத்து வந்தோம்.

இதைப் பார்த்த பலர் எங்களுக்கு பொருள் உதவியும் செய்தனர். மொத்தம் 4 பேர் தொடர்ச்சியாக இந்தப் பணியில் ஈடுபட்டோம். எங்களின் சேவயைப் பார்த்த மருத்துவக் கல்லுாரி நிர்வாகத்தினர், `என்னோட செல் நம்பரை பலரிடம் கொடுத்து எது தேவை என்றாலும் இவரிடம் கேளுங்கள், அடுத்த 10 நிமிடத்தில் கொண்டு வந்து கொடுத்துவிடுவார்’ எனக் கூறினர்.

ரியாஸ்சுதீன்

இதையடுத்து கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்ட பலரும், தங்களுக்கு ஏதேனும் பொருள்கள் தேவைப்பட்டால் வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்புவார்கள். அவசர பொருளாக இருந்தால் உடனே வாங்கிக் கொண்டு செல்வேன். இல்லையென்றால் சாப்பாடு கொண்டு போகும்போது கொடுப்பேன்.

கொரோனா வார்டில் இருந்த நுாற்றுக்கணக்கானோருக்கு வாளி, மக், பேஸ்ட், பிரஸ், சோப்பு, பிளாஸ்க், பழங்கள், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை எனது சொந்த செலவில் வாங்கிக் கொடுத்துள்ளேன். இதற்கு பணம் கொடுத்தாலும் வாங்கிக்கொள்ள மாட்டேன்.

கொரோனா வைரஸ்

சிகிச்சை பெற்று வந்த சிலர் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து இருப்பதால் ரொம்பவே சோர்வாகக் காணப்படுவார்கள். அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும் பேசுவேன். அப்போது அவர்கள் மனதில் நம்பிக்கையை விதைப்பேன். நாள்கள் கடந்த நிலையில் என்னுடன் இருந்த சிலர் ஒதுங்கிக் கொணடனர். ஆனால், கடைசி வரை நான் மட்டும் இதை நிறுத்தவே இல்லை.

Also Read: கொரோனா 360 - காற்றில் பரவுமா? தடுப்பு மருந்து தயாராவது எப்போது?

என்னோட இந்தச் செயலை கண்ட கலெக்டர் கோவிந்தராவ் மற்றும் அரசு அதிகாரிகள் பலரும் பாராட்டினார்கள். அவர்களிடம் நான் செய்த இந்த உதவியின் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமாகிச் சென்ற பலர் எனக்கு நண்பர்களாக மாறியுள்ளனர். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி என்றேன். மொத்தம் 112 நாள் சிலர் செய்த உதவியால் ஒரு வேளைகூட நிறுத்தாமல் நான் இதைச் செய்தேன். இந்தப் பணி எனக்கு முழு மனநிறைவு தந்தது” எனத் தெரிவித்தார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/young-man-donated-food-for-the-patients-in-corona-ward-for-more-than-100-days

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக