Ad

சனி, 18 ஜூலை, 2020

`கொரோனா, என்னை விவசாயம் செய்ய வைத்தது!' - சோள சாகுபடியில் அசத்திய வழக்கறிஞர்

கொரோனா ஊரடங்கால் வழக்கும் இல்லை, வருமானமும் இல்லை எனச் சோர்ந்து போகாமல் சொந்த நிலத்தில் இயற்கை முறையிலான சோளம் சாகுபடி செய்து அசத்தியிருக்கிறார் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தினேஷ்குமார்.

சோளம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கிடாரங்கொண்டான் ஊராட்சி சங்கிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார். இவர் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கறிஞராக உள்ளார். சொந்த ஊர் சங்கிருப்பு என்றாலும் பெரும்பாலும் தனது பணி சார்ந்து சென்னையிலேயே வசித்து வந்தார்.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக நீதிமன்றப் பணிகள், வழக்குகள் இல்லாததால் வருமானமின்றி சொந்த ஊர் திரும்பினார் தினேஷ்குமார். தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் குறுகிய காலத்தில் மாற்று விவசாயம் ஏதாவது செய்து சாதிக்க வேண்டும் என்றும், ஊரடங்குக் காலத்தைப் பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என்றும் முடிவு செய்தார். குறுகிய கால (75 நாள்கள்) பயிரான சோளத்தை சுமார் 1 ஏக்கரில் பயிரிட்டு, இயற்கை உரங்கள் கொண்டு மோட்டார் பாசனம் மூலம் சாகுபடி செய்துள்ளார். தற்போது சோளக் கதிர் விளைந்து அறுவடைக்கு தயாராகிவிட்டது.

Also Read: கொரோனா காலத்தில் பிசியோதெரபி... இவற்றை ஃபாலோ பண்ணுங்க ப்ளீஸ்... #ExpertAdvice

வழக்கறிஞர் தினேஷ்குமாரிடம் பேசினோம். "வி.ஆர். 4226 என்ற ரக சோளத்தை பயிரிட்டுள்ளேன். விவசாயக் குடும்பம் என்றாலும் இந்தக் கொரோனா என்னை விவசாயம் செய்ய வைத்திருக்கிறது. ரசாயன உரங்களைத் தவிர்த்து இயற்கை முறையில் சாகுபடி செய்துள்ளேன். கடந்த மே மாதம் 10-ம் தேதி விதைப்பு செய்தேன். ஒவ்வொரு செடியிலும் இரண்டு சோளக் கதிர்கள் விளைந்துள்ளது. அவை தரமான கதிர்களாக உள்ளதால் தற்போதே வியாபாரிகள் கொள்முதல் செய்ய போட்டிப் போடுகின்றனர்.

சோளம்

இன்னும் 5 தினங்களில் அறுவடை செய்யலாம். சோளக்கதிர் ஒன்று 4 ரூபாய்க்குக் கேட்கின்றனர். சோளத்தட்டை மாட்டுத் தீவனத்துக்கு விலை போகும். 1 ஏக்கர் சாகுபடி செய்ய 25,000 ரூபாய் செலவானது. தற்போது செலவு போக 40,000 ரூபாய் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. நாம் என்ன தொழில் செய்தாலும் விவசாயத்தை கைவிடாமல், இயற்கை முறையிலான மாற்று சாகுபடிகளை செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும்" என்றார் உற்சாகத்துடன்.



source https://www.vikatan.com/news/agriculture/chennai-high-court-advocate-cultivated-maize-in-his-farm

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக