Ad

சனி, 18 ஜூலை, 2020

`அசத்தும் நெட்ஃப்ளிக்ஸ்’ - ஊரடங்கில் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமான புதிய சந்தாதாரர்கள்

ஊரடங்கில் அசத்தும் ஓடிடி-க்கள்!

பொழுதுபோக்கு துறையில் உச்சத்துக்கு எகிறியுள்ளது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம். ஊரடங்கு காரணமாக அனைத்து துறைகளும் முடங்கியதும் தொலைக்காட்சிகள் புதிய நிகழ்ச்சிகளைத் தயாரிக்க இயலாமலும் திரையரங்குகள் திறக்கப்படாமல் இருப்பதும் ஒரு புறம் இருக்க, மறுபுறம் ஓடிடி நிறுவனங்கள் மட்டும் கோட்டை கட்டிக்கொண்டு இருந்தன. அதில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் மாஸ் காட்டுகிறது.

ஊரடங்கு நேரத்தில் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களைச் சேர்த்துள்ளது நெட்ஃப்ளிக்ஸ். மேலும், இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில், அதாவது ஏப்ரல் முதல் ஜூன் வரை 6.15 பில்லியன் டாலர்கள், இந்திய மதிப்புக்கு கிட்டத்தட்ட 48,785.9 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் காலாண்டுக்கான நிகர வருமானம் 720 மில்லியன் டாலர்கள் அதாவது 5,395.6 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

நெட்ஃப்ளிக்ஸ்

எனினும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் வளர்ச்சி மந்தப்படும் என்ற அச்சத்தில் 9 சதவிகித பங்குகள் குறைக்கப்பட்டுள்ளன, என்று மார்கெட்வாட்ச் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் உருவாக்கும் மற்றும் வெளியிடும் நிகழ்ச்சிகள் திரைப்படங்கள் ஆகியவற்றைக் கண்காணிக்கும் முதன்மை உள்ளடக்க அதிகாரியான டெட் சரண்டோஸ் இணை தலைமை நிர்வாகியாகப் பதிவு உயர்வு பெற்றிருக்கிறார். சரண்டோஸ், நிறுவனத்தின் இணை நிறுவனரான ரீட் ஹேஸ்டிங்ஸ் உடன் தலைமை நிர்வாகி பதவியைப் பகிர்ந்து கொள்வார் என நெடிப்பிலிக்ஸ் பங்குதாரர்களுக்கு அளித்த கடிததில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 2.5 மில்லியன் புதிய சந்தாரர்களை உருவாக்க நெட்ஃப்ளிக்ஸ் திட்டமிட்டுள்ளது ஆனால், ஆய்வாளர்கள் கூற்றுப்படி மூன்றாவது காலாண்டில் 5.27 மில்லியன் சந்தாதரர்கள் புதிதாக இணைய வாய்ப்பு உள்ளது. ``கொரோனா வைரஸ் பரவல் மற்றும் சமூக கட்டுப்பாடுகளின் ஆரம்பகட்டத்தில் பயனர்கள் அதிர்ச்சி அடைந்ததால் நிறுவனத்தின் வளர்ச்சி குறைந்தது. ஜூன் மாதத்துக்கான நிகர கட்டண சேர்ப்பு சமீபத்தில் சேவையைப் பயன்படுத்தாத சிறிய அளவிலான ரத்து செய்யப்பட்ட சந்தாக்களையும் உள்ளடக்கியதே” என்று நிறுவனம் பங்குதாரர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.

மேலும், "தற்போது வைரஸ் பரவும் சூழலில் அமெரிக்காவில் நிகழ்ச்சிகள் மற்றும் படங்களைத் தயாரிக்க இயலாத நிலை உள்ளது. லத்தின் அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இன்னும் மோசமான நிலை உள்ளது எனினும், இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த நாடுகளிலும் தயாரிப்பை தொடங்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது" எனக் கடிதத்தில் தெரிவித்துள்ளது.

"கொரோனா ஊரடங்கு எங்களுக்கு ஒரு சிறந்த வளர்ச்சி வாய்ப்பாகும், மேலும் வருவாய் அதிகாமாகவோ குறைவாகவோ இருந்தாலும் எங்கள் உறுப்பினர்களுக்கு அதிக நிகழ்ச்சிகளை, கருத்துக்களை வழங்க முனைகிறோம், இது காலப்போக்கில் அதிக வளர்ச்சியை உருவாக்கும்" என நிறுவனத்தின் இணை நிறுவனரான ஹஸ்டிங்ஸ் தெரிவித்துள்ளார்.

நெட்ஃப்ளிக்ஸ் இதுவரை 190 நாடுகளில் 193 மில்லியனுக்கும் மேலான கட்டண வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/business/tech-news/netflix-add-10-million-paid-subscribers-during-lockdown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக