Ad

வியாழன், 16 ஜூலை, 2020

ராஜசேகர ரெட்டியால் முடிந்தது ராமதாஸால் ஏன் முடியவில்லை? #32YearsOfPMK

`` `கார் உள்ள வரை கடல் நீர் உள்ள வரை பார் உள்ள வரை பைந்தமிழ் உள்ளவரை தி.மு.க, அதி.மு.கவுடன் கூட்டணி இல்லை’ இன்னும் எத்தனை தடவைதான் சொல்றது சொல்லி சொல்லி ஓய்ஞ்சு போய்ட்டேன். நான் வேணா ஒரு பத்திரத்துல எழுதித் தந்துடட்டுமா''

2018-ம் ஆண்டு பிரதமர் மோடி, தமிழகம் வரும்போது, பா.ம.க அறிவித்த கறுப்புக்கொடி போராட்டம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறிய வார்த்தைகள் இவை. ஆனால், சொல்லிய ஒரு வருடத்துக்குள், எந்தக் கட்சிக்கு எதிராக அடுக்கடுக்கான ஊழல் புகார்களை கவர்னரிடன் ஒப்படைத்தாரோ, எந்தக் கட்சியை கடுமையாக விமர்சித்து `கழகத்தின் கதை’ என்று நூல் வெளியிட்டாரோ... அதே அதிமுக கூட்டணியில் தன் கட்சியை இணைத்துக் கொண்டார் மருத்துவர் ராமதாஸ். அமைச்சர் செங்கோட்டையனுடன் நேருக்கு நேராக விவாதிக்கத் தயார் எனவும் முதல்வர் குறித்தும் துணை முதல்வர் குறித்தும் மிகக்கடுமையான விமர்சனங்களை முன்வைத்த பா.ம.க இளைஞரணித் தலைவர், அன்புமணி ராமதாஸ், பின்னர் அதே தலைவர்களுடன் தங்களின் பண்ணை வீட்டில் விருந்துண்ட நிகழ்வையும் நாம் தொலைக்காட்சி வழியாகப் பார்த்தோம். இன்றோடு முப்பத்தி இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அந்தக் கட்சியின் வரலாற்றை வெறும் கூட்டணி அரசியலை வைத்து மட்டும் மதிப்பிட முடியுமா என்பதை அலசுவதே இந்தக் கட்டுரை.

எடப்பாடி, பன்னீருடன் ராமதாஸ்...

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வழியாக உருவான காங்கிரஸ் கட்சியைப் போல, இந்தி எதிர்ப்புப் போரில் வீறு கொண்டு ஆட்சியைக் கைப்பற்றிய திமுகவைப் போல், பிற்படுத்தப்பட்ட மக்களாகிய வன்னிய சமுதாய மக்களின் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் கருவாகி உருவான கட்சிதான் பாட்டாளி மக்கள் கட்சி. அந்தக் கட்சியைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்பாக அந்தக் கட்சியின் நிறுவனரான மருத்துவர் ராமதாஸைப் பற்றியும் நிச்சயமாக தெரிந்திருக்கவேண்டியது அவசியம்.

கைராசி & மக்கள் மருத்துவர்!

1939-ம் ஆண்டு, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள, கீழ்சிவரி என்னும் கிராமத்தில் நடுத்தர விவசாயக் குடும்பத்தில் ஐந்து குழந்தைகளில் ஒருவராகப் பிறந்தவர்தான் ராமதாஸ். படிப்பில் மிகவும் கெட்டிக்காரராக இருந்த ராமதாஸுக்கு, சென்னை மருத்துவக் கல்லூரியில், மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது. மருத்துவம் முடித்த கையோடு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்க்கத் தொடங்கினார். சில ஆண்டுகள் மட்டுமே அரசு மருத்துவமனையில் பணியாற்றியவர், தனியாக 3 ரூபாய் கட்டணத்துக்கு மருத்துவம் பார்க்கத் தொடங்கினார். பத்தாண்டுகளுக்குப் பிறகுதான் அந்தக் கட்டணம் 5 ரூபாய் என ஆனது.

பேருந்துக்குக் காசில்லாமல் தன்னிடம் மருத்துவம் பார்க்கவரும் ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்த கையோடு, பேருந்துக்கும் பணம் கொடுத்து அனுப்பி வைத்து மக்களின் மருத்துவராக மிளிர்ந்தார் மருத்துவர் ராமதாஸ். இயல்பாகவே, காரல் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு முற்போக்குச் சிந்தனையும் சமூக நீதிப் பார்வை கொண்டவராகவும் விளங்கி வந்தார் மருத்துவர் ராமதாஸ். அப்படி மருத்துவம் பார்க்கும்போது, தான் சார்ந்த சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் கல்வி, வேலைவாய்ப்பில் மிகவும் பின்தங்கியிருப்பதைக் கண்டவர், அந்த சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களை ஒருங்கிணைத்து, 1980-ம் ஆண்டு வன்னியர் சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கினார்.

ராமதாஸ்

வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்ட வரலாறு!

உயர் வகுப்பில் இருந்த சமூகங்கள் சில, பிற்படுத்தப்பட்ட சமூகப் பட்டியலுக்குள் வந்து தங்களுக்குக் கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகளை அபகரித்துக் கொள்வதாக நினைத்தார் மருத்துவர் ராமதாஸ். அவரின் எண்ணத்துக்கு நியாயமான காரணங்களும் இல்லாமல் இல்லை, தமிழகத்தில் மிகப்பெரும்பான்மையான மக்கள்தொகையைக் கொண்ட வன்னியர் சமூக மக்கள், கல்வி, வேலைவாய்ப்புகளில் அதுவரை மிகக்குறைந்த அளவே பயனடைந்து வந்திருந்தனர்.

அதனால், 20 சதவிகித தனி இட ஒதுக்கீடு கேட்டு, ஏழு ஆண்டுகள் கடுமையான போராட்டங்களை முன்னெடுக்க, அப்போதிருந்த அ.தி.மு.க அரசு அதைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. 1987-ல் ஒட்டுமொத்த இந்தியாவுமே திரும்பிப் பார்க்கிற வகையில், ஒரு போராட்டத்தை நடத்தி, 21 பேரை பலிகொடுத்து பொதுச்சமூகத்தின் கவனத்தை ஈர்த்தாலும் அப்போதைய அரசு செவிசாய்க்கவில்லை. பின்னர், எம்.ஜி.ஆருடன் பேச்சுவார்த்தை, அவரின் மரணத்துக்குப் பிறகு அப்போதைய முதல்வர் ஜானகியிடம் கோரிக்கை, கவர்னர் அலெக்ஸாண்டரிடம் கோரிக்கை, பிரதமர் ராஜீவ் காந்தியிடம் கோரிக்கை, குடியரசுத் தலைவரான ஆர்.வெங்கட்ராமனிடம் கோரிக்கை என தொடர்ச்சியான முயற்சிகளிலும் எதுவுமே கைகூடவில்லை.

பாட்டாளி மக்கள் கட்சி தொடக்கம்!

அதேவேளை, 1989-ல் நடந்த நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வரான கருணாநிதி, வன்னிய சமூகத்துடன் சேர்த்து 108 சமூகங்களுக்கு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக்கான மொத்த இட ஒதுக்கீட்டான 50 சதவிகிதத்தில் இருந்து தனியாக இருபது சதவிகிதத்தைப் பிரித்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என தனிப்பிரிவை உருவாக்கினார். இதற்கு வன்னிய சமூகத் தலைவர்கள் சிலர் ஆதரவு தெரிவித்த போதும், மருத்துவர் ராமதாஸ், மிக்கடுமையாக விமர்சித்தார். வன்னியர் சமூகத்துக்கு கருணாநிதி துரோகம் இழைத்துவிட்டதாகவே கருதினார். பின்னர்தான் வன்னியர் சங்கத்தை அரசியல் இயக்கமாக மாறவேண்டும் என முடிவெடுத்தார் மருத்துவர் ராமதாஸ். அப்போது, மூன்று சத்தியங்களையும் செய்தார்.

பின்னர், இதே நாளில் சென்னை கடற்கரை சீரணி அரங்கில் பத்து லட்சம் மக்கள் புடைசூழ பாட்டாளி மக்கள் கட்சியைத் தோற்றுவித்தார் மருத்துவர் ராமதாஸ். மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மக்கள், மதச்சிறுபான்மையோர் ஆகியோரை அடையாளப்படுத்தும் வகையில் தங்களின் கட்சிக் கொடியை வடிவமைத்தார். மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் ஆகியோரை தங்களின் வழிகாட்டிகளாக அறிவித்தார். தங்கள் கட்சியின் பொதுச்செயலாளாரக பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர்தான் இருக்கமுடியும் என்கிற வகையில் கட்சியின் பை லாவை நிர்மாணித்தார். கட்சியின் தலைவராக பேராசியர் தீரனும், பொதுச்செயலாளராக தலித் எழில்மலையும் அறிவிக்கப்பட்டனர். ஆரம்பத்தில், தென்தமிழகத்தைச் சேர்ந்த பட்டியலின சமூகத் தலைவர்கள் ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சியில் முக்கியப் பொறுப்புகளில் இருந்தனர். இஸ்லாமியர் ஒருவர் மாநில இளைஞரணிச் செயலாளராகப் பதவி வகித்தார். அதுவரை இருபெரும் திராவிடக் கட்சிகளை மட்டுமே கண்டுவந்த தமிழகத்தின் பல முற்போக்கு எழுத்தாளர்கள், அறிவு ஜீவிகளாக அறியப்படுபவர்கள் பலரும் பா.ம.கவை ஒரு புதிய சக்தியாகப் பார்த்தனர். பா.ம.கவுக்குப் பின்னால் அணிதிரண்டனர். பா.ம.கவின் மேடைகளில், அவர்கள் நடத்திய கருத்தரங்குகளில் அதிகமாகக் கலந்துகொண்டனர்.

ராமதாஸ்

பா.ம.கவின் தேர்தல் பயணம்!

கட்சி தொடங்கிய ஆறு மாதத்துக்குள், அப்போதைய வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரணமல்லூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டது பாட்டாளி மக்கள் கட்சி. அந்தத் தேர்தலில், வெற்றி பெறாவிட்டாலும் 22,000 வாக்குகளைப் பெற்றது அந்தக் கட்சிக்கு புதிய உத்வேகத்தைக் கொடுத்தது. பெரணமல்லூர் தொகுதிக்கென பல தனிச்சிறப்புகள் அல்லது நம்பிக்கைகள் உண்டு. ஆம், பெரணமல்லூர் தொகுதியில் எந்தக் கட்சி வெற்றி பெறுகிறதோ அந்தக் கட்சிதான் தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் அமரும் என அரசியல்வாதிகள் மத்தியில் ஒரு நம்பிக்கை இருந்தது. (1962 முதல் அந்தத் தொகுதி கலைக்கப்படுவதற்கு முந்தைய 2006 வரை அந்தத் தொகுதியின் முடிவுகளை வைத்து இதை நாம் தெரிந்துகொள்ளலாம்) அதற்குப் பிறகு, 1989 நாடாளுமன்றத் தேர்தலில், எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் 33 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டு, ஆறு சதவிகித (15,36,350) வாக்குகளைப் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

அதன்பிறகு 1991 தேர்தலிலும் தன் தலைமையில், இஸ்லாமிய, தமிழ்த் தேசிய, அம்பேத்கரிய அமைப்புகளை இணைத்து ஒரு புதிய கூட்டணியை உருவாக்கினார் மருத்துவர் ராமதாஸ். 199 தொகுதிகளில் போட்டியிட்டது பா.ம.க. ஆனால், அந்தத் தேர்தலில், பா.ம.கவின் சார்பாக போட்டியிட்ட பண்ருட்டி ராமச்சந்தின் மட்டுமே வெற்றுபெற்றார். ஆனால் அந்தத் தேர்தலிலும், 14,52,982 வாக்குகளைப் பெற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

பா.ம.க வின் முற்போக்கு முகம்!

ஒருபுறம் தேர்தல் அரசியலில் மாற்று சக்தியாக வளர்ந்து வந்த நிலையில், தமிழ்மொழி, தமிழர்களின் உரிமை சார்ந்த முன்னெடுப்புகளையும் மிகத்தீவிரமாகச் செய்து வந்தார் மருத்துவர் ராமதாஸ். `தமிழர் வாழ்வுரிமை மாநாடு' என நடத்தி, தமிழ்நாட்டுக்கு தன்னுரிமை வேண்டும் தீர்மானம் நிறைவேற்றினார். ராஜீவ் காந்தி மரணத்துக்குப் பிறகு, ஈழ விடுதலைப் போராட்ட அமைப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டது தமிழகத்தில். ஆனால், `யாருக்கு யார் தடை விதிப்பது?' என, விடுதலை இயக்கத் தலைவரின் பேனர்களுடன், மிகப்பிராண்டமான பேரணிகளை நடத்தி அனைவரையும் மிரளச் செய்தார் மருத்துவர் ராமதாஸ். ``என்னை எத்தனை ஆண்டுகள் சிறையில் அடைத்தாலும் நான் தொடர்ந்து ஈழ மக்களுக்கு, ஈழ விடுதலைக்கு ஆதரவாகத்தான் பேசுவேன்'' என முழங்கி வந்தார் மருத்துவர் ராமதாஸ். அதன் காரணமாக தமிழ் ஆர்வலர்கள், ஈழ உணர்வாளர்கள் மத்தியிலும்,கோயம்புத்தூர் குண்டு வெடிப்புகளில் இஸ்லாமிய மக்களுக்கு இருந்த சில நெருக்கடிகளை உடைத்து இஸ்லாமிய மக்களின் ஆதரவையும் பெற்று செல்வாக்குமிக்க தலைவராக வலம் வந்தார் மருத்துவர் ராமதாஸ்.

பா.ம.கவின் கூட்டணி அரசியல்!

அடுத்த வந்த 1996 சட்டமன்றத் தேர்தலில், தி.மு.கவுடன் கூட்டணிக்குச் செல்ல முடிவெடுத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் எழ, பின் வாழப்பாடி ராமமூர்த்தியின் திவாரி காங்கிரஸ் மற்றும் 12 சிறிய கட்சிகளுடன் இணைந்து, 116 தொகுதியில் போட்டியிட்டு நான்கு தொகுதியில் வெற்றி பெற்றது பா.ம.க. மீண்டும் ஆறு சதவிகித வாக்குகளைப் பெற்றது. தமிழகத்தில் ஒரு கட்சி தொடங்கப்பட்டு மூன்று தேர்தலில், பிரதான இருபெரும் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லாமல் ஆறு சதவிகித வாக்குகளைப் பெற்றது பா.ம.கவின் மீது அனைவரின் கவனத்தையும் திருப்பியது. பின்னர், 98-ல் அதிமுகவுடன் கூட்டணி. 5 தொகுதியில் போட்டியிட்டு 4 -ல் வெற்றி பெற்றது. தங்கள் கட்சிக்குக் கிடைத்த முதல் மந்திரி பதவியை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த தலித் எழில்மலைக்குக் கொடுத்தார் மருத்துவர் ராமதாஸ். பிறகு, 1999 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பா.ஜ.க கூட்டணியில் இருந்து விலகிக்கொள்ள, தி,மு,க வுடன் கூட்டணி சேரும் வாய்ப்பு உருவானது. அப்போது, ஏழு தொகுதியில் போட்டியிட்டு, ஐந்து தொகுதிகளில் வெற்றிபெற்று, வாஜ்பாய் தலைமையிலான மத்திய மந்திரி சபையிலும் இடம் பெற்றது பா.ம.க.

பிறகு 2001 சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து 20 இடங்களில் வெற்றி, 2004 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி என ஏறுமுகத்தையும், 2009 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி. பிறகு 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்து, போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி என இறங்கு முகத்தையும் சந்தித்தது பா.ம.க.

2016 தேர்தல் பிரசாரத்தில் பா.ம.க

மீண்டும் தனித்துப் போட்டி!

பிறகு, 2016 சட்டமன்றத் தேர்தலில், இரண்டு திராவிடக் கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என அறிவித்து தனித்துக் களம் இறங்கியது பா.ம.க. அந்தக் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், அந்தத் தேர்தலில் ஒரு இடத்தில்கூட பா.ம.கவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. தொடர்ந்து, மத்தியில் ஆட்சியில் இருந்த பா.ஜ.கவையும், தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அதிமுகவையும் விமர்சித்து வந்த நிலையில், 2018-ல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி பா.ம.க அறிவித்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தது தி.மு.க. அப்போது, ``தி.மு.க உங்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறதே, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கவுடன் கூட்டணி சேர வாய்ப்பிருக்கிறதா'' எனப் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு, மருத்துவர் ராமதாஸ் அளித்த பதிலைத்தான் நாம் மேலே முதல் பத்தியில் பார்த்தோம்.

மீண்டும் கூட்டணி!

தமிழக தேர்தல் அரசியலில் கூட்டணி என்பது பெரிய கட்சிகளுக்கே தவிர்க்க முடியாத ஒன்றுதான்... தமிழகத்தில், தி.மு.க, அதிமுக, மதிமுக, கம்யூனிஸ்ட்கள், விசிக என மாறி மாறி கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை எனலாம். ஆனால், வீரியமாக எதிர்த்துவிட்டு உடனடியாக அதே கட்சிகளுடன் கூட்டணி அவைக்கும்போது அது மிகப்பெரிய அதிருப்தியை உண்டாக்கிவிடுகிறது. அதுவரை எதிரும் புதிருமாக இருந்த விஜயகாந்த் அங்கம் வகித்த கூட்டணியில் சேர்ந்து 2014 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டது பா.ம.க. அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை என்கிற வகையில் அதை எடுத்துக்கொண்டாலும், தேர்தலுக்கு முன்பாக, பா.ஜ.க அரசுக்கு முட்டை மதிப்பெண் கொடுத்துவிட்டு உடனடியாக அதே கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது பா.ம.கவுக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது.

பிறகு மீண்டும், 2016 தேர்தலில், திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல், தனித்துப் போட்டியிடுவோம் என அறிவித்து அதேபோல போட்டியிட்டபோது பா.ம.க. அப்போது ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை என்றாலும், 5.36 சதவிகித சதவிகித வாக்கையும் பா.ம.கவின் மீது மக்கள் மத்தியில் சிறிதளவு நம்பிக்கையும் ஏற்பட்டது. ஆனால், மீண்டும், 2019 நாடாளும்ன்றத் தேர்தலில், அ.தி.மு.க, பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்தது பா.ம.கவின் அரசியல் வரலாற்றில் ஏற்கெனவே இருந்த சிறிய கரும்புள்ளியை அழித்துவிட்டுப் போடப்பட்ட மிகப்பெரிய கரும்புள்ளியாக அமைந்துவிட்டது. அந்தத் தேர்தலில் பா.ம.க தனித்துப் போட்டியிட்டு, ஒரு எட்டு சதவிகித வாக்குகளை வாங்கியிருந்தால், வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில், தமிழகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக, பா.ம.க நிச்சயமாக இருந்திருக்கும் என்கிறார்கள் அரசியல் திறனாய்வாளர்கள்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி

பா.ம.க மீதும் மருத்துவர் ராமதாஸ் மீதும் கூட்டணி அரசியலைத் தாண்டி முன்வைக்கப்படும் முக்கியமான விமர்சனங்கள் என்னென்ன?

வட தமிழகத்தில் நிகழும் சாதியக் கலவரங்களுக்கு பின்புலத்தில் இருப்பது பா.ம.கதான் என்று விமர்சிக்கப்படுவது; தன் குடும்பத்தில் இருந்து யாரும் கட்சிப் பதவிக்கோ ஆட்சிப் பதவிக்கோ வரமாட்டார்கள் எனச் சொல்லிவிட்டு தன் மகன் அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது; 2012-2014 காலகட்டத்தில், பா.ம.க முன்னெடுத்த அனைத்து சமுதாயக் பேரமைப்பு எனும் செயல்பாடு, ``பா.ம.கவுக்கு மட்டுமல்ல, மருத்துவர் ராமதாஸின் அரசியல் வரலாற்றிலேயே மிகப்பெரிய கரும்புள்ளி'' என்கிறார்கள், அரசியல் விமர்சகர்கள். மருத்துவர் ராமதாஸ் தரப்பில் அதற்கு ஆயிரம் விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும், தொண்ணூறுகளின் ஆரம்பத்தில், யாரை தமிழகத்தின் புதிய சக்தியாக, மாற்று சக்தியாக கருதினார்களோ, வரவேற்றார்களோ அதே முற்போக்காளர்கள், ஜனநாயக சக்திகளால் சாதிக் கட்சி எனவும், சாதியை வைத்து அரசியல் செய்கிறார் எனவும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டார் ராமதாஸ்.

Also Read: ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி... ஒரு ரூபாய் மருத்துவர் டு ஆந்திராவின் ராஜாவானது வரை! பிறந்த தினப் பகிர்வு

பா.ம.கவின் சாதனைகள்!

அதேவேளை, தமிழகத்தில் அதிகமான அம்பேத்கர் சிலைகளைத் திறந்தது. சமச்சீர் கல்வி, மது ஒழிப்புக்கு எதிரான போராட்டங்கள்; ஆரம்ப காலங்களில் பட்டியலின, தமிழ், இஸ்லாமிய இயக்கங்களுடன் இணைந்து எடுத்த முன்னெடுப்புகள், (அந்தக் காலகட்டத்தில்தான் விசிக தலைவர் திருமாவளவன் மருத்துவர் ராமதாஸுக்கு தமிழ்க்குடிதாங்கி பட்டம், அம்பேத்கர் விருதுகள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது) தமிழ்மொழி, இனம், ஈழ ஆதரவு, மாநில உரிமை சார்ந்த போராட்டங்கள், கருத்துப் பிழைகள் இல்லாத அறிக்கைகள், 2002-2003-ம் நிதி ஆண்டில் தொடங்கி தொடர்ந்து வெளியிடப்படும் நிழல் நிதி நிலை அறிக்கைகள், 2008-2009-ம் நிதி ஆண்டில் தொடங்கி வெளியிடப்படும் வேளாண் நிழல் நிதி நிலை அறிக்கைகள், சுகாதாரம் சார்ந்து கொண்டுவரப்பட்ட முக்கியமான திட்டங்கள் ஆகியவை பா.ம.கவின் சாதகமான அம்சங்களாக இன்றளவும் அந்தக் கட்சியை எதிர்ப்பவர்கள் கூட முன்வைக்கின்ற விஷயங்கள்.

ராஜசேகர ரெட்டி - ராமதாஸ்

70- களின் தொடக்கத்தில், ஆந்திரமாநிலம், புலிவெந்துலா மாவட்டத்தில் பிறந்து படித்து மருத்துவராகி, பிறகு ஒரு ரூபாய் மருத்துவர் எனப் பெயரெடுத்த பொதுவாழ்வுக்கு வந்த ராஜசேகர ரெட்டி, இரண்டு முறை ஆந்திராவின் முதல்வராகப் பதவியேற்றுவிட்டார். இப்போது அவரது மகனும் முதல்வர் பதவியை வகித்து வருகிறார். அதே, காலகட்டத்தில் அதேபோல `ஏழைகளின் மருத்துவர்' எனப் பெயர் பெற்று பொதுவாழ்வுக்கு வந்த மருத்துவர் ராமதாஸின் கட்சியான பா.ம.கவுக்கு இன்று ஒரு எம்.எல்.ஏ, எம்.பி (ராஜ்யசபா நீங்கலாக) கூட இல்லை.

வன்னிய சமூக மக்களின் நலனுக்காகத் தொடங்கப்பட்டாலும் தமிழ் மொழி, இனம், உரிமை என பரந்துபட்ட அளவில் செயல்பட்ட மருத்துவர் ராமதாஸ், அதேபோல பரந்துபட்ட அளவில் தன் கட்சியை தமிழகம் முழுவதும் கொண்டு சேர்க்காததும், வன்னிய மக்களின் வாக்கு வங்கியைத் தக்கவைத்துக்கொண்டாலே போதும் என சாதிக்குள் சுருங்கிக் கொண்டதும்; அல்லது அரசியல் புற சூழ்நிலைகளால் அத்தகைய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதும் மருத்துவர் ராமதாஸுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்துக்குமே மிகப்பெரிய பின்னடைவுதான். ஆனால், இனி வரும் காலங்களிலாவது பழைய தவறுகளிலிருந்து பாடத்தையும் பழைய நற்செயல்பாடுகளில் இருந்து உத்வேகத்தையும் பெற்று அந்தக்கட்சி மீண்டுவர வேண்டும்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/a-political-journey-of-pattali-makkal-katchi-32-years-of-pmk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக