Ad

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

`ஜெகதீஷ் சந்திரபோஸ் டு அன்னா மணி' - நாம் அறியவேண்டிய இந்தியாவின் அறிவியல் நட்சத்திரங்கள்

ஜெகதீஷ் சந்திரபோஸ்

வானொலி அறிவியல், தாவரவியல், இயற்பியல் எனப் பல தரப்பட்ட அறிவியல் துறைகளில் வல்லமைகள் நிறைந்தவராய் திகழ்ந்தவர் ஜெகதீஷ் சந்திரபோஸ். மனிதர்கள், விலங்குகள் மட்டுமன்றி தாவரங்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு என்பதை முதலில் கண்டறிந்த அறிவியலாளர் இவரே. வெப்பம், குளிர், ஒளி, சத்தம், மகிழ்ச்சி, வலி போன்ற அடிப்படை மனித உணர்வுகளுக்கு எதிராற்றல் காண்பிக்கும் தன்மை தாவர இனங்களுக்கும் அடிப்படையே என்று நிரூபித்துள்ளார். இதற்காக அவைகளின் வளர்ச்சியை கணக்கிட கிரெஸ்கோகிராஃப் என்ற கருவியையும் கண்டறிந்தார். இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கது வயர்லெஸ் டெலிகிராபி. இந்த முறையை போஸ்‌ கண்டுபிடித்திருந்தாலும் அதற்குக் காப்புரிமை பெறாத காரணத்தால் அந்த படைப்பில் அவருக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. மேலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1897 ஆம் ஆண்டு இத்தாலிய விஞ்ஞானி குக்லீல்மோ மார்கோனி இதே போன்ற ஒரு செயல்முறையைக் கண்டறிந்து அதற்குத் தேவையான காப்புரிமையையும் பெற்றுக் கொண்டார். ஆகையால் கண்டுபிடிப்பில் போஸ் முன்னோடியாக இருந்தாலும் காப்புரிமையில் கோட்டை விட்டதால் அவர் பெயர் இடம்பெறவில்லை.

ஜெகதீஷ் சந்திரபோஸ்

சர் சி வி ராமன்

இந்தியாவின் மிகவும் மதிப்பிற்குரிய இயற்பியலாளர் சந்திரசேகர வெங்கட்ராமன் என்ற சர் சி வி ராமன் ஆவார். தந்தையின் கணித இயற்பியல் வாசம் தன்னையும் ஒட்டிக்கொள்ள 13 வயதிலேயே பட்டப்படிப்பை மேற்கொண்ட ராமன் ஒளியின் சிதறலைக் கவனிப்பதன் மூலம் ஒளியின் குவாண்டம் தன்மைக்கான ஆதாரங்களைக் கண்டுபிடித்து, அதன் விளைவுகளையும் கண்டறிந்தார். இதுவே ராமன் எபெக்ட் என்று இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. பிப்ரவரி 28 இல் 1928 இல் அவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றுத் தந்ததும் இந்த கண்டுபிடிப்பே. அறிவியலுக்கான நோபல் பரிசை வென்ற முதல் ஆசிய வழி வெள்ளையர் அல்லாத நபர் ராமன் ஆவார். சிறுவயதில் இருந்தே உடல் ரீதியாக பெரும் பலமற்ற இவர் 1970 ஆம் ஆண்டு தனது 82 ஆம் வயதில் இயற்கை எய்தினார்.

சர் சி வி ராமன்

ஹோமி ஜஹாங்கீர் பாபா

`நிகழ்காலத்தில் சிந்திப்பது மட்டுமின்றி கலாச்சாரத்தைக் கடத்தி செல்பவர்களாக விஞ்ஞானிகள் திகழ வேண்டும்' என்று அனைவரையும் தன் கருத்தால் சிந்திக்க வைத்தவர் ஹோமி ஜஹாங்கீர் பாபா. கலைகளின் வெளிப்பாடு விஞ்ஞானிகளிடமிருந்த படைப்பாற்றலில் சிறந்ததை வெளிப்படுத்தியது என்றும், மேற்கத்தியக் கலை மற்றும் இசையின் அழகியல் அவருக்கு ஒரு நிலையான குறிப்பு புள்ளியாக இருக்கும் என்றும் பாபா உறுதியாக நம்பினார். ஒரு திறமையான அமெச்சூர் ஓவியர் மற்றும் இசை ஆர்வலரான பாபா, மேற்கத்திய முறையான ஆடைகளை அணிந்து, லுட்விக் வான் பீத்தோவன் மற்றும் பிற கிளாசிக் படைப்புகளைக் கேட்பதற்கும், தனது ஃபோனோகிராப்பில் மணிநேரங்களைச் செலவிடுவதற்கும் தயங்குவதில்லை.

ஜஹாங்கீர் பாபா

விக்ரம் சாராபாய்

இந்தியாவின் அறிவியல் வளர்ச்சியை எடுத்துக் கொண்டால் பரவலாகச் சுழல் வரும் ஒரு பெயர் தான் விக்ரம் சாராபாய். காஸ்மிக் கதிர்களைப் பற்றி தனது அடிப்படை ஆய்வை தொடங்கிய இவர் அறிவியல் அடிப்படையில் இந்தியா வளர்ச்சி அடைய உதவினார். இந்தியாவின் விண்வெளி மையமான இஸ்ரோ நிறுவப்பட்டது சாராபாயின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகும். மேலும் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆரியப்பட்டா 1975 ஆம் ஆண்டு விண்ணில் பாய முக்கிய காரணமாக இருந்தவர் இவரே. பத்மபூஷன் மற்றும் பத்மவிபூஷன் போன்ற பிரபலமான விருதுகளைப் பெற்ற இவரைக் கவுரவிக்கும் வகையில் இஸ்ரோ விக்ரம் சாராபாய் விருதை அறிவித்து விண்வெளி அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி துறையில் சிறந்த இடத்தை வகிப்பவர்களுக்கு வழங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இவர் பிறந்தநாளான ஆகஸ்ட் 12 ஆம் தேதி இந்தியாவின் விண்வெளி அறிவியல் தினமாக அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

விக்ரம் சாராபாய்

கல்பனா சாவ்லா

விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய வழி பெண்மணி என்ற பெருமைக்குரியவர் கல்பனா சாவ்லா. அடிப்படையில் பொறியியலாளரான அவர் தன் சிறுவயது கனவை நினைவாக்க அயராது உழைத்து விண்வெளி வீரராகவும் திகழ்ந்தார். ஹரியானாவின் ஒரு சிறு கிராமத்துப் பெண்மணியான இவர் 1997யில் தன் முதல் விண்வெளி பயணத்தை மேற்கொண்டார். முதல் பயணம் எந்த பிரச்சனைகளும் இன்றி முடிந்தேற தன்னுடைய இரண்டாம் பயணத்தின் முடிவில் தன் வாழ்வின் முடிவும் நிர்ணயிக்கப்பட ஏவுகணை விபத்து ஏற்பட்டதால் உயிரிழந்தார். இவரது நினைவாக ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று இந்தியப் பெண்களின் துணிச்சலான செயல்களுக்காக கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டு வருகிறது. 5 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழுடன் இந்த விருது நிறுவப்பட்டுள்ளது. வீர பெண்மணியைக் கௌரவிக்கும் விதமாக வீர பெண்மணிகளுக்கு அரசு வழங்கும் ஒரு அங்கீகாரமே இவ்விருது.

கல்பனா சாவ்லா

அசிமா சாட்டர்ஜி

அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி அசிமா சாட்டர்ஜி. இவர் ஒரு ஆர்கானிக் வேதியியலாளர் ஆவார், ஆர்கானிக் வேதியியல் துறையில் தனது பணிக்காகக் குறிப்பிடப்பட்டவர். அவரது மிகவும் பிரபலமான சாதனைகள் ஆயுஷ் 56 எனப்படும் வலிப்பு மருந்தைக் கண்டுபிடித்தது மற்றும் ஆண்டிமலேரியா மருந்துகளை உருவாக்கியது ஆகும். அறிவியலுக்கான சாட்டர்ஜியின் பங்களிப்பு கரிம வேதியியல் முழுவதும் பரவியுள்ளது. கிட்டத்தட்ட அனைத்து முக்கிய வகை இண்டோல் ஆல்கலாய்டுகளின் வேதியியலை அவர் ஆய்வு செய்திருக்கிறார்.

அசிமா சாட்டர்ஜி

மேலும் ஆல்கலாய்டு தொகுப்பு தொடர்பாக பீட்டா-ஃபைனிலெதிலமைன்களை (beta-phenylethylamines) தயாரிப்பதற்கான நடைமுறைகளையும் உருவாக்கினார். மடகாஸ்கர் பெரிவிங்கிள் தாவரங்களைச் சேர்ந்த வின்கா ஆல்கலாய்டுகள் பற்றிய அவரது பணி ஒரு சிறந்த பங்களிப்பாகும். புற்றுநோய் செல்கள் பெருகுவதை மெதுவாக்க உதவும் கீமோதெரபியில் அவை பயன்படுத்தப்படுகின்றன.

எடவலேத் காக்கட் ஜானகி அம்மாள்

1977 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதைப் பெற்ற முதல் பெண் விஞ்ஞானிகளில் ஒருவர் தான் எடவலேத் காக்கட் ஜானகி அம்மாள். அதுமட்டுமின்றி 1931 யிலேயே மிச்சிகன் பல்கலைக் கழகம் தனது அல்மா மேட்டரால் கௌரவ டாக்டர் பட்டம் (DSc. Honoris causa) வழங்கிய சில ஆசியப் பெண்களில் இவரும் ஒருவர். ஒரு முன்னோடி தாவரவியலாளர் மற்றும் சைட்டோஜெனட்டிஸ்ட் (cytogeneticist- person who studies chromosomes and inheritance), ஜானகி அம்மாள், இந்தியாவின் கரும்பு வகைகளில் இனிப்பை இனைத்த பெருமைக்குரியவர், கேரளாவின் சைலண்ட் பள்ளத்தாக்கில் நீர்-மின்சாரத் திட்டத்திற்கு எதிராகவும், ஆயிரக்கணக்கான பூக்கும் தாவரங்களின் குரோமோசோம்களின் அற்புதமான ஆய்வுக்கு எதிராகவும் பேசியவர் இவர். மாக்னோலியா கோபஸ் ஜானகி அம்மாள் என்று அழைக்கப்படும் தூய வெள்ளை நிறத்தில் ஒரு மென்மையான மலர் அவள் பெயரில் உள்ளது.

எடவலேத் காக்கட் ஜானகி

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம்

ஒரு சிறந்த விஞ்ஞானி, மக்கள் ஜனாதிபதி, மற்றும் ஒரு அற்புதமான ஆசிரியர், இப்படி பன்முகங்கள் கொண்டு நாட்டிற்காகத் தனது பங்களிப்பை பல்வேறு விதத்தில் அர்ப்பணித்தவர் தான் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம். இந்தியாவில் பல அதிநவீன தொழில்நுட்பங்களுக்கு உந்து சக்தியாக இருந்தவரும் இவரே. செயற்கைக்கோள்கள் முதல் உள்ளூர் சுகாதாரம் வரை, இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பற்றிப் பேசும்போது அவரது பங்களிப்புகள் எப்போதும் குறிப்பிடத் தக்கதாக இருக்கும்.

ஏபிஜே அப்துல் கலாம்

டிஆர்டிஓவில் (DRDO) உள்நாட்டு வழிகாட்டி ஏவுகணைகளை உருவாக்கும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டதால் 'இந்தியாவின் ஏவுகணை நாயகன்' (Missile Man of India) என்ற பட்டத்தையும் பெற்றார். நாட்டிற்கு டாக்டர் கலாமின் பங்களிப்புகளைச் சொல்லில் அடங்கச் செய்வது கடினம். விண்வெளி முதல் மருத்துவம் வரை அணு ஆயுதம் என அறிவியல் துறையில் இந்தியா முன் வர முக்கிய பங்களிப்புகளை அளித்துள்ளார் டாக்டர் அப்துல் கலாம்.

அன்னா மணி

இந்தியாவின் மார்ஸ் ஆர்பிட்டர் மிஷனில் (எம்ஓஎம்) இருந்து மிகவும் பேசப்பட்ட ஒரு பேசுபொருள் இஸ்ரோவின் பெண் விஞ்ஞானிகள் பணியின் வெற்றியைக் கொண்டாடுவது. அக்கொண்டாட்ங்களில் பங்கு பெற்றவர் தான் அன்னா மணி. ஒரு புகழ்பெற்ற வானிலை ஆய்வாளரான மணி, இந்திய வானிலை ஆய்வுத் துறையின் முன்னாள் துணை இயக்குநர் ஜெனரலாக இருந்தார். மேலும் சூரிய கதிர்வீச்சு, ஓசோன் மற்றும் காற்றாலை ஆற்றல் கருவித் துறையில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பைச் செய்துள்ளார். நோபல் பரிசு பெற்ற சி வி ராமனின் ஆய்வகத்தில் பட்டதாரி மாணவியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வைரங்கள் மற்றும் மாணிக்கங்களின் ஸ்பெக்ட்ரோஸ்கோபியில் பணியாற்றினார்.

அன்னா மணி

காற்றின் வேகம் மற்றும் சூரிய சக்தியை அளவிடுவதற்கான கருவிகளைத் தயாரிக்கும் சிறிய பட்டறையை அண்ணா மணி தொடங்கினார். தனது பட்டறையில் தயாரிக்கப்பட்ட கருவிகள் இந்தியாவில் காற்று மற்றும் சூரிய ஆற்றல் வளர்ச்சிக்கு உதவும் என்று அவர் நம்பினார். இன்று, நாடு முழுவதும் சூரிய மற்றும் காற்றாலைகளை அமைப்பதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது என்றால் அதன் பெருமை இவரையும் சென்று சேரும்.

ராமானுஜன்

உலகின் மிகச்சிறந்த கணிதவியலாளர்களில் ஒருவரான சீனிவாச ராமானுஜன் ஒரு இந்திய வழி மனிதர் ஆவார். எண்களின் கோட்பாட்டில் இவரின் பங்களிப்பு ஆழமானது. இவர் உண்மையில் இருபதாம் நூற்றாண்டின் ஒரு கணித மேதை ஆவார். இந்தியாவின் இந்த பழம்பெரும் மேதை, ஆய்லர் மற்றும் ஜேக்கபி போன்ற மேலைநாட்டு மேதைகளை ஒத்த சிறப்பிற்குரியவர் ஆவார். ராமானுஜன் வெறும் 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார்.

சீனிவாச ராமானுஜன்

ஆனால் இந்த குறுகிய காலத்தில் அவர் அத்தகைய கோட்பாடுகள் மற்றும் சூத்திரங்களை உருவாக்கிச் சென்றுள்ளார். அவை தற்போதைய யுகத்தின் சூப்பர் கணினிகளால் கூட புரிந்துகொள்ள முடியாதவை. சுமார் 4000 சூத்திரங்கள் மற்றும் கோட்பாடுகளைக் கண்டுபிடித்துச் சென்றுள்ளார். ராமானுஜன் கணிதத்தை யதார்த்தத்தின் ஆழமான வெளிப்பாடாகக் கண்டார். சிறந்த கணிதவியலாளரான இவர் அனைத்து எண்ணங்களையும் கற்பனைகளையும் தாண்டிய மேதை.



source https://www.vikatan.com/news/india/most-notable-scientists-in-india

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக