Ad

ஞாயிறு, 3 ஏப்ரல், 2022

டாஸ்மாக் டிஷ்யூம் டிஷ்யூம்: இனிமேலாவது உள்ளாட்சிகளுக்கு அதிகாரம் அளிக்குமா `திராவிட மாடல்'?

தமிழகத்தில் மதுபானக்கடைகளை மூட வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுக்கின்றனர். இதையும் கடந்து மதுபானக்கடைகளைத் திறக்க வேண்டுமென்றால் அந்தந்தப் பகுதி மக்களிடம் கருத்தைக் கேட்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களிடமிருந்து கோரிக்கைகளும் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனாலும், மதுபானக்கடைகள் தொடங்கப்படுவது இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த மதுபானக் கடைகளால் மக்கள் படும் பாடு கொஞ்சம்கூட ஓயவில்லை. இன்னும் பல இடங்களில் டாஸ்மாக் என்னும் மதுபானக் கடைகளுக்கு எதிரான மக்களின் குரல் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.

டாஸ்மாக் மதுக்கடை

இந்தச் சூழலில்தான், தமிழ்நாடு மது சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள், 2003-ல், மதுபானக்கடைகள் அமைப்பதற்கான இடம் மற்றும் கடையை மாற்றுவது குறித்த பகுதிகளில் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது தமிழக அரசு. கடை அமையவிருக்கும் இடம், ஏற்கெனவே உள்ள கடையை இடம் மாற்றுவது ஆகியவை குறித்து பொதுமக்களிடமிருந்து ஆட்சேபனை எதுவும் வரப் பெற்றால், அதைக் கட்டாயமாகக் கருத்தில் கொண்டு தேவைப்படும் முடிவை மாவட்ட ஆட்சியர் எடுக்க வேண்டுமென மேற்கண்ட விதிகளில் 02.03.2022 அன்று திருத்தம் கொண்டு வந்துள்ளது தமிழக அரசு. அதாவது, மதுபானக்கடை அமைவிடம் குறித்த ஆட்சேபனையிருந்தால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்க வேண்டும். அதன் பிறகு, இறுதி முடிவை மாவட்ட ஆட்சியர் எடுப்பார் என்றும் சொல்கிறது திருத்தம். இத்தனை ஆண்டுகளில் மாவட்ட ஆட்சியர்களிடம் இதுவரை யாருமே ஆட்சேபனை தெரிவிக்காதது போலவும் இனி ஆட்சேபனை வந்தால் அதை ஆட்சியர் கருத்தில் கொண்டு உடனே முடிவெடுப்பார் என்பது போலவும் சொல்ல வருகிறார்களா இந்தத் திருத்தத்தின் மூலம்?

இது சம்பிரதாயமான விதித் திருத்தம் என்பதைத் தவிர வேறு என்ன? தங்கள் பகுதியில் ஒரு மதுபானக்கடை வேண்டுமா, வேண்டாமா என முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கிராமப்புறமாக இருந்தால் சம்பந்தப்பட்ட கிராமசபைக்கும், நகர்ப்புறமாக இருந்தால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி மன்றத்துக்கும் வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.

அதிகாரப்பரவல் எதுவரை? எந்த அளவுக்கு நாம் ஒன்றிய அரசிடமிருந்து நமக்கான உரிமைகளைப் பெறுவதில் உறுதியாக செயல்பட வேண்டியது அவசியமோ, அதே உறுதி உள்ளாட்சிகளை வலுப்படுத்துவதிலும் அவற்றுக்கான அதிகாரங்களை உறுதிப்படுத்துவதிலும் இருக்க வேண்டாமா? ஜி.எஸ்.டி நிதிப் பகிர்வாக இருந்தாலும் சரி, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதாக இருந்தாலும் சரி, மாநில ஆளுநரின் அதிகார வரம்புகளை மறுபரிசீலனை செய்வதாக இருந்தாலும் சரி, நம்முடைய நியாயமான கோரிக்கைகளை நாம் அனைவரும் ஒன்றிணைந்து வலியுறுத்துகிறோம். காரணம், ஒன்றிய அரசின் அதிகார குவிப்பு அணுகுமுறையால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என்பதால். அதிகார குவிப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட நாம், அதிகாரப் பகிர்வை செயல்படுத்தும் முன்னோடி மாநிலமாக இருக்க வேண்டாமா? திராவிட மாடலில் உள்ளாட்சிகளுக்கான அதிகாரப்பர்வு என்ற முக்கிய அத்தியாயத்துக்கும் இடம் உண்டுதானே?

மக்களுக்கு பக்கத்திலிருந்து கொண்டு மக்களின் பிரச்னைகளில் நேரடியாகப் பங்கெடுக்கின்ற உள்ளாட்சி மன்றங்களின் முடிவு மற்றும் கிராம சபைகளின் முடிவை மதிப்பதுதான் மாநிலங்களுக்கான அதிகாரப் பகிர்வுக்கான நமது கோரிக்கைக்கு நியாயம் கற்பிப்பதாக இருக்கும்.

உள்ளாட்சி

கிராமசபைக்கு இடமளித்த மாநிலங்கள்

மதுப்பானக்கடைகளை அமைப்பது பற்றி கிராம சபையின் முடிவெடுப்பது என்பது புதிய அணுகுமுறை அல்ல. ஏற்கெனவே மகாராஷ்டிரா, ஹரியானா போன்ற மாநிலங்களில் மதுப்பானக்கடைகள் அமைப்பு குறித்து கிராம சபையின் ஒப்புதல் பெறுவது என்பது சட்டப்படி அமைந்திருக்கிற ஒன்றுதான்.

நம்பிக்கையான காலகட்டம்

1996 முதல் 2001 வரையிலான காலகட்டம், தமிழகத்தில் உள்ளாட்சிகளுக்கான ஒரு முக்கியமான காலகட்டமாக இருந்தது. முன்னாள் முதல்வர் கருணாநிதியும் அன்றைய உள்ளாட்சித்துறை அமைச்சர் கோ.சி.மணியும் உள்ளாட்சிகளை வலுப்படுத்தப் பல முயற்சிகளை எடுத்திருக்கிறார்கள். குறிப்பாக, எல்.சி.ஜெயின் என்ற வல்லுநரைக் கொண்டு மூன்றடுக்கு ஊராட்சிகளுக்கான உரிய அதிகாரங்களை வழங்குவது குறித்த அறிக்கைத் தயாரிக்கப்பட்டு தமிழகச் சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்து மிக முக்கிய ஒரு வரலாற்றுப் பணி.

கருணாநிதி

பதவி நீக்கம் செய்யப்பட்ட ஓர் ஊராட்சித் தலைவருக்குக் கிராமசபை மூலம் நீதி கிடைத்ததும் இந்தக் காலகட்டத்தில்தான்.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஒன்றியம், குத்தம்பாக்கம் என்ற கிராமத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டார் ஊராட்சி தலைவர் இளங்கோ. நேர்மையாகத் தான் செய்த பணிகள், தவறாக ஒரு சில அலுவலர்களால் கணக்கிடப்பட்டு முறைகேடு செய்தாகக் குற்றம்சாட்டப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளேன் என்றும் என் பணிகள் நேர்மையாகச் செய்து முடிக்கப்பட்டவை என என்னால் நிரூபிக்க முடியும் எனவும் ஊடகங்கள் மூலம் தெரிவித்திருந்தார். அதை அறிந்த அப்போதைய முதல்வர் கருணாநிதி, அக்கிராமத்தில் கிராமசபையைக்கூட்டி மக்களின் கருத்தைக் கேட்டுச் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

கிராமசபை கூடியது. ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் சிறப்பாக உள்ளன என்பது கண்டறியப்பட்டதோடு, பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்த இளங்கோ மீண்டும் அதே கிராமசபையில் ஊராட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற வரலாறு தமிழகத்தில் உண்டு. இது நடந்து 1997-ல்.

கிராமசபை மீது அன்று தமிழக அரசு எடுத்த முடிவு மிகச் சரியான முக்கியமான முடிவு. மக்கள் நலப் பணிகளை ஆய்வு செய்து தீர்ப்பு அளிக்கக்கூடிய ஒரு களமாகக் கிராமசபை இருக்க முடியும் என நம் தமிழகத்திலேயே ஒரு முன்னுதாரணம் இருக்கும்போது, ஏன் மதுபானக்கடைகள் குறித்த முடிவு எடுக்கக்கூடிய வாய்ப்பு கிராம சபைக்கு வழங்கக் கூடாது?

திராவிட முன்னேற்றக் கழகம் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் `ஊராட்சி சபை’ என்றும், 2021 சட்டமன்றத் தேர்தலில் `மக்கள் கிராமசபை’ என்றும் தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டதை நாம் அறிவோம். குறிப்பாக, இன்றைய முதல்வரும் அன்றைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் பல இடங்களுக்குப் பயணித்துப் பரப்புரை மேற்கொண்ட அதே கிராமசபைகளை வலுப்படுத்த வேண்டும் என்றுதான் மக்கள் கேட்கிறார்கள்.

உரிய சட்டத் திருத்தத்தின் மூலம் மதுபானக்கடைகள் குறித்து முடிவெடுக்கக் கிராமசபைகளுக்கும் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும் தமிழக அரசு அதிகாரமளிக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. அதிகாரம் அளிக்கப்பட்டால் மட்டுமே மீண்டும் உள்ளாட்சிகளுக்கான நல்ல காலம் பிறக்கும்.

- நந்தகுமார் சிவா,

தன்னாட்சி தலைவர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/why-should-the-tn-govt-give-power-to-local-body-institutions-to-decide-on-tasmac

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக