Ad

புதன், 15 ஜூலை, 2020

Twitter: ஒபாமா, பில் கேட்ஸ், எலான் மஸ்க்! - விட்டுவைக்காத ஹேக்கர்ஸ் #Hacked

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் மிகப்பெரிய ஹேக்கிங் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உலகின் மிக முக்கிய புள்ளிகளின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டிருக்கின்றன. இவர்களின் கணக்குகளிலிருந்து பிட்காயின் கேட்டுப் பதிவுகள் இடப்பட்டுள்ளன.

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, வாரன் பஃபெட், பில் கேட்ஸ், எலான் மஸ்க் உட்பட பல பிரபலங்களின் கணக்குகள் இதில் அடங்கும். இது அல்லாமல் உபேர், ஆப்பிள் போன்ற நிறுவனங்களின் அதிகாரபூர்வ பக்கங்களும் ஹேக் செய்யப்பட்டிருக்கின்றன.

ஆப்பிள் ட்வீட்
பேஸாஸ் ட்வீட்
வாரன் பஃபெட் ட்வீட்
ஒபாமா ட்வீட்
எலான் மஸ்க் ட்வீட்

இவற்றிலிருந்து பதியப்பட்ட போலி பதிவுகளில் குறிப்பிட்ட பிட்காயின் அட்ரஸுக்கு $1000 அனுப்பினால் $2000 திருப்பி அனுப்பப்படும் எனக் கூறப்பட்டிருக்கிறது. உடனடியாக இவை நீக்கப்பட்டாலும், பிரபலங்களின் இந்தக் கணக்குகளை ஹேக்கர்களிடமிருந்து மீட்க முடியாமல் திணறியிருக்கின்றனர். உதாரணத்துக்கு, டெஸ்லா நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான எலான் மஸ்க்கின் கணக்கிலிருந்து இந்தப் பதிவு நீக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் பதிவிடப்பட்டது.

இதுகுறித்து விளக்கம் அளித்த ட்விட்டர், "பல கணக்குகளைப் பாதித்திருக்கும் இந்த ஹேக்கிங் சம்பவம் குறித்து அறிவோம். இது குறித்து விசாரித்து வருகிறோம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அது குறித்த தகவல்களை அனைவருக்கும் விரைவில் தெரிவிக்கிறோம்" என்று கூறியுள்ளது

"இதை நாங்கள் விசாரித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் உங்களால் புதிதாக ட்வீட் செய்யவோ பாஸ்வேர்டு மாற்றவோ முடியாது" என்று முதல்கட்டமாக ட்விட்டர் தெரிவித்திருந்தது. இப்போது மீண்டும் கணக்குகள் செயல்படத் தொடங்கிவிட்டன.

இப்படிப் பல முக்கிய புள்ளிகளின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டது ட்விட்டருக்கு பெரும் களங்கமாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்க பங்குச்சந்தையில் பெரும் சரிவைக் கண்டுள்ளது அந்த நிறுவனம்.

"இது ட்விட்டரில் மிகவும் சவாலான நாள். இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு மிகவும் வருந்துகிறோம். இது எதனால் நடந்தது எனத் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம். இந்தச் சம்பவம் குறித்து எங்களுக்கு முழு புரிதல் வந்தவுடன் இதுபற்றி அனைத்தையும் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்" என்று ட்விட்டர் CEO ஜாக் டார்ஸி பதிவிட்டிருக்கிறார் .

ட்விட்டர் தரப்பிலிருந்து இந்தச் சம்பவம் எவ்வாறு நடந்திருக்கும் எனத் தொடர்ந்து தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்?

இந்த அளவிலான சைபர் தாக்குதல் என்பது பயனாளர்கள் அளவில் நடந்திருக்க வாய்ப்பு மிகவும் குறைவு எனக் கூறப்படுகிறது. ஒவ்வொரு கணக்காக ஹேக் செய்திருக்க மாட்டார்கள். ட்விட்டர் உள்கட்டமைப்பு அளவில் எதோ பிரச்னை இருந்திருக்க வேண்டும் என்றே வல்லுநர்கள் கணிக்கின்றனர். இதுவரை பல ஹேக்கிங் சம்பவங்கள் நடந்திருந்தாலும், இந்த அளவில் ஒரு சம்பவம் இதுவரை நடந்ததில்லை என்றே தெரிவிக்கின்றனர்.

Also Read: WhatsApp: வாட்ஸ்அப் சாட் ஹேக்கிங்; மாணவிகள்தான் குறி! - ஹரியானாவை அதிரவைத்த கும்பல்

பொதுவெளியிலிருக்கும் பிட்காயின் தரவுகளின்படி இதுவரை சுமார் $100,000 அளவிலான பிட்காயின் இந்தப் போலி ட்வீட்களின் விளைவால் பரிமாறப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஆனால், இத்தனை ஆளுமைகளின் கணக்குகளை ஹேக் செய்தவர்கள் வெறும் பிட்காயின் கேட்டுத்தான் பதிவுகளை இட்டிருக்கிறார்கள் என ஆசுவாசப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான் எனத் தெரிவிக்கின்றனர் சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள்.



source https://www.vikatan.com/technology/tech-news/from-obama-to-musk-major-twitter-accounts-hacked

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக