Ad

புதன், 15 ஜூலை, 2020

``பா.ஜ.க-வின் `புராஜெக்ட் தமிழ்நாடு' திட்டத்தின் ஓர் அங்கம் ஊடகத் தாக்குதல்!'' - பத்திரிகையாளர் ஆர்.கே

2021 சட்டமன்றத் தேர்தல், நெருங்கிவருவதன் அறிகுறியாகத் தமிழக அரசியல், இப்போதே தடதடக்க ஆரம்பித்துவிட்டது. கடந்த சில நாள்களாகத் தமிழ்நாட்டின் முன்னணி ஊடக நிறுவனங்கள் மற்றும் அதன் ஊழியர்களை, அரசியல் ரீதியாகத் தொடர்புபடுத்தி சமூக ஊடகத்தில் பரப்பப்பட்டு வரும் செய்திகளே இந்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.

அண்மையில், தமிழ் ஊடகம் மற்றும் அதன் செய்திப் பிரிவுகளில் பணியாற்றுகிற சிலர் மீது மிகக் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. `நடுநிலை என்ற பெயரில் இயங்கிவரும் சில ஊடகம் மற்றும் அதன் பணியாளர்கள் குறிப்பிட்ட சித்தாந்தப் பின்னணியில் அரசியல் செய்திகளைக் கையாண்டுவருவதாக' அந்தக் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.

குணசேகரன் - கார்த்திகை செல்வன்

இதைத்தொடர்ந்து, `ஊடகத்தில் பணியாற்றுவோரை மிரட்டும் தொனியில் தரம்தாழ்ந்து விமர்சிப்பதுவும், அவர்களது குடும்ப உறுப்பினர்களைத் தனிப்பட்ட முறையில் அவதூறு பரப்புவதும் கண்டனத்துக்குரியது' என்ற எதிர்ப்புக் குரல்களும் எழுந்திருக்கின்றன.

இந்நிலையில், தமிழ்நாட்டில் புதிய கலாசாரமாகப் பரவிவரும் இவ்விவகாரம் குறித்து, பிரபலங்கள் சிலரிடம் கருத்து கேட்டறிந்தோம்...

பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன்

``மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, உடல் நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்தே, பா.ஜ.க-வின் `புராஜெக்ட் தமிழ்நாடு' ஆரம்பித்துவிட்டது. அதனுடைய ஒரு பாகம்தான் இப்போது நடந்துவருவதும்.

ஏற்கெனவே நீதித்துறை, காவல்துறையின் நடவடிக்கைகள் ஒருசார்பாக மத்திய அரசுக்கு ஆதரவான நிலையில் இருந்துவருவதாக நமக்குத் தோற்றமளித்துக் கொண்டிருக்கிறது. இப்போது அதே வழியில் ஆங்கிலம், இந்தி சேனல்கள் மற்றும் பத்திரிகைகள் என டெல்லி ஊடகம் அனைத்தும் பா.ஜ.க-வுக்கு எதிராக ஒரு செய்தியையும் வெளியிடாத வகையில் மாறியிருக்கின்றன. இதே நிலையைத் தமிழ்நாட்டுக்கும் கொண்டுவருவதற்கான வேலைகள் இப்போது நடந்துவருகின்றன.

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டில் பா.ஜ.க மிக மோசமான தோல்வியைத் தழுவியது. இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில், `டி.வி சேனல்களும் பா.ஜ.க தோல்விக்கு ஒரு காரணம்' என்று தெரியவந்திருப்பதாகக் கூறுகிறார்கள். எனவேதான், `தமிழ்நாட்டில் முதலில், ஊடகத்தைக் கைப்பற்ற வேண்டும்' என்று நினைத்தவர்கள் குறிப்பிட்ட பத்திரிகை, சேனல் மூலமாகத் தங்கள் கருத்துகளைப் பரப்ப நினைத்தார்கள். ஆனால், அந்தத் திட்டம் நினைத்த அளவு எடுபடவில்லை. எனவே, இப்போது அடுத்த முயற்சியாக நடுநிலையோடு நியாயம் பேசிவரும் சேனல்களின் குரலை ஒலிக்கவிடாமல் செய்வதற்கான வேலைகளைச் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், TRP அடிப்படையில் `நம்பர் ஒன்' சேனலாக இருக்கும் செய்தி சேனலில், கருத்துருவாக்கம் செய்கிற வகையிலான விவாத நிகழ்ச்சிகள் எதுவும் கிடையாது. அடுத்த நிலையில் இருக்கக்கூடிய பிரபல செய்தி சேனல்களில்தான் இதுபோன்ற விவாத நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

எனவே, இந்தச் செய்தித் தொலைக்காட்சிகளில், இனி விவாதத்துக்கு எந்த மாதிரியான செய்திகளை எடுக்க வேண்டும் என்ற மறைமுக அழுத்தம் கொடுக்கிறார்கள். அடுத்து நடுநிலையாளர்கள் என்ற போர்வையில், நியாயம் பேச வருகிற அனைவரும் வலதுசாரி சிந்தனை கொண்டவர்களாகவே இருக்க வேண்டும் என்ற மறைமுக நிர்பந்தத்தையும் ஏற்படுத்துகிறார்கள். இதற்காகவே நிகழ்ச்சித் தொகுப்பாளர்களையும் இவர்கள் குறிவைத்து தாக்குகிறார்கள்.

ராதாகிருஷ்ணன்

இதையெல்லாம் மீறி, நியாயத்தைப் பேசுகிற பத்திரிகையாளர்களை, `தி.மு.க கூலி, கம்யூனிஸ்ட் கூலி' என்று சித்திரிக்கிறார்கள். இதற்காகவே, தனியே மீம்ஸ் தயாரித்து வெளியிடும் அளவுக்கு தகவல் தொடர்புத்துறையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இது நீண்டகாலமாக நடந்துவருவதுதான் என்றாலும், அண்மையில், புதிதாக `யூடியூப்' சேனல் நபர்கள் மூலமாக, தொலைக்காட்சி செய்திச் சேனல்களின் கற்றுத் தேர்ந்த, முறையாக நெறியாளுகை செய்கிற நிகழ்ச்சித் தொகுப்பாளர்களை அவமானம் செய்துவருகிறார்கள்.

தற்போது நரேந்திர மோடிக்கு ஆதரவாக விவாத நிகழ்ச்சிகளில் பேசுகிற வலதுசாரி சிந்தனையாளர்கள்கூட, தமிழ் செய்தி சேனல்களின் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களது நிலையை நடுநிலையான - நியாயமானதாகவே பார்க்கிறார்கள். எனவேதான், வேறு வழியின்றி இந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர்களின் மதிப்பை பொதுமக்கள் மத்தியில் சீர்குலைக்கிற வேலையில் இறங்கிவிட்டார்கள் எதிர்தரப்பைச் சேர்ந்தவர்கள். அதனால்தான், நியூஸ் 18 முதன்மை ஆசிரியர் குணசேகரனின் மாமாவைக்கூட தேவையே இல்லாமல், இவ்விஷயத்தில் உள்ளிழுத்துப் பேசுகிறார்கள்.

இப்படியெல்லாம் பார்க்கப்போனால், இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கிறவர்கள் சப்போர்ட் செய்கிற கட்சிகளில் உள்ள பல நிர்வாகிகளின் குடும்பத்தினரேகூட எதிர்க்கட்சிகளில் இருந்துவருகிறார்களே..! ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தத்தமது சித்தாந்தம் சார்ந்தும் பரிணாம வளர்ச்சி சார்ந்தும் வெவ்வேறு கட்சிகளில் பயணிப்பதென்பது இயல்பான விஷயம்தான். ஆனால், இதையெல்லாம் குற்றமாகச் சொல்லி, `மக்களிடையே செய்தி சேனல்கள் மற்றும் பத்திரிகைகளுக்கு இருக்கின்ற நம்பகத்தன்மையை சீர்குலைக்க வேண்டும். சமூக ஊடகம் வழியே நாம் பரப்புகிற செய்திகளை மட்டுமே மக்கள் நம்ப வேண்டும்' என்ற வியூகத்தின் அடிப்படையில் செயல்படுகிறார்கள். ஏனெனில், இந்த முயற்சிகளையெல்லாம் செய்துவருகிறவர்களின் மிகப்பெரிய பலம் சமூக ஊடகம்தான்! ஆனால், அந்த ஊடக பலத்தைக்கூட அவர்கள் சரிவரப் பயன்படுத்தவில்லை. அதனால்தான், நியூஸ் 18 நிர்வாக அதிகாரியிடமிருந்து அனுப்பப்பட்டதாக போலி மின்னஞ்சலைக் காட்டி அசிங்கப்பட்டுவிட்டார்கள்!

இத்தனை கோடிகளைக் கொட்டி, இவ்வளவு பெரிய டீம் வைத்துக்கொண்டு, ஒரு மின்னஞ்சலின் உண்மைத்தன்மையைக்கூட இவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லையே... இவர்களது வியூகங்கள் எப்படி தமிழ்நாட்டில் வெற்றிபெறும்?'' என்றார் எள்ளலாக.

பா.ஜ.க ஆதரவாளர் ராமசுப்பிரமணியன்

``தொலைக்காட்சி, பத்திரிகை துறையினரோடு எனக்கு நீண்டகால நட்பு உண்டு. புதிய தலைமுறை, நியூஸ் 7, நியூஸ் 18 சேனல்களின் விவாத நிகழ்ச்சிகளில் பா.ஜ.க ஆதரவாளராக நான் பலமுறை கலந்துகொண்டு பேசி வருகிறேன். இவர்கள் சொல்வதுபோல், கட்சி ரீதியாக எந்தப் பாகுபாடும் இந்த சேனல்களில் பார்க்கப்படுவது இல்லை. இவர்கள் குற்றம் சாட்டுகிற நிகழ்ச்சித் தொகுப்பாளர்களும்கூட மிக நல்லமுறையில் நடுநிலையோடுதான் நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டு வருகிறார்கள்.

`நியூஸ் 18 குணசேகரன், மாமா தி.க-வைச் சேர்ந்தவர். எனவே, இவரும் தி.க சித்தாந்தத்தோடு செயல்படுகிறார்' என்று புகார் சொல்கிறார்கள். இதெல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாத வாதங்கள். அப்படிப் பார்த்தால், மத்திய பா.ஜ.க அமைச்சரவையில் அங்கம் வகித்த ரங்கராஜன் குமாரமங்கலம் வீட்டிலேயே ஒருவர் கம்யூனிஸ்ட், மற்றொருவர் காங்கிரஸ் கட்சி. இதையெல்லாம் கேள்வி கேட்க முடியுமா?

`உங்கள் ஊடகத்தில் இந்தத் தலைப்பில்தான் விவாதம் நடத்த வேண்டும்' என்று வெளியிலிருந்து நான் எப்படிச் சொல்ல முடியும்? உங்களுக்கு இப்படியான கேள்விகள் இருந்தால், சம்பந்தப்பட்ட சேனல்களின் விவாத நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உங்கள் கருத்துகளை முன்வைக்கலாமே... அதை விட்டுவிட்டு வெளியிலிருந்து தனிப்பட்ட மனிதர்களைக் குற்றம் சொல்லிக்கொண்டிருப்பது என்ன நியாயம்?

ராமசுப்பிரமணியன்

நியூஸ் 18 ஜீவ சகாப்தனின் அம்மா ஓவியா, திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர். தொலைக்காட்சி விவாதங்கள் பலவற்றில் கருத்து ரீதியாக அவருக்கு எதிராக நான் பேசியிருக்கிறேன். ஆனாலும்கூட நாங்கள் இருவருமே ஒருவருக்கொருவர் மரியாதை வைத்திருக்கக்கூடிய அளவுக்கு நல்ல நட்பு கொண்டவர்கள்.

நான் கடவுள் நம்பிக்கைகொண்டவன் என்பதாலேயே எல்லோரும் ஆன்மிகவாதியாகத்தான் இருக்க வேண்டும் என்று நான் எப்படிச் சொல்ல முடியும்? ஒருவர் கம்யூனிஸ்ட், இன்னொருவர் திராவிடர் கழகம்... என அவரவருக்குப் பிடித்த சித்தாந்தங்களில் இணைந்திருக்கிறார்கள். இப்படி பலதரப்பட்டவர்களும் ஒருங்கிணைந்து இருப்பதுதானே சார் அழகு!

இந்தப் பிரச்னைகளை ஆரம்பித்து வைத்தவர்களின் பின்னணியில் பா.ஜ.க இருக்கிறது என்ற பேச்சு பரவலாக எழுந்துவருகிறது. ஆனால், ஆதாரம் இல்லாமல் நான் இதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். அதேசமயம், இப்படியொரு பேச்சு இருந்து வரும்போது, `இவர்களது பின்னணியில் நாங்கள் இல்லை' என்ற மறுப்பை பா.ஜ.க சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லவில்லையென்றால், பா.ஜ.க-வினர்தான் இவர்களை மறைமுகமாகத் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம்'' என்றார் அழுத்தமாக.

மூத்த பத்திரிகையாளர் குமரேசன்

``2019 தேர்தலில், இந்தியா முழுமைக்குமான நிலைப்பாட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்டு தனித்து நின்றது தமிழ்நாடு. காரணம்... தமிழ்நாட்டு மக்களின் பாரம்பர்யம் என்பது முற்போக்கான மரபைக் கொண்டது. ஆனால், `ஊடகம் நடத்துகிற கருத்து விவாதங்கள் வழியேதான் இதுபோன்ற மாற்று சிந்தனைகள் மக்களிடையே விதைக்கப்படுகிறது; மத்திய அரசின் சாதனைப் புள்ளிவிவரங்களை இந்த ஊடகம் எடுத்துச்செல்லவில்லை' என்று தவறாக நினைப்பவர்கள்தாம் இப்படியான வன்மத் தாக்குதலை ஊடகத்தினர் மீது நிகழ்த்தியிருக்கிறார்கள்.

இதைச் சொல்வதாலேயே ஊடகத்தினர் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற கருத்தை நான் சொல்லவில்லை. விமர்சனம் செய்கிற உரிமை எல்லோருக்குமே இருக்கிறது. இப்போது ஊடகத்தினரைத் தாக்குகிறவர்களுக்கும்கூட இந்த உரிமை இருக்கிறது. இதை யாரும் குறை சொல்லவில்லை. ஆனால், அந்த விமர்சன உரிமையை இவர்கள் எப்படிப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் பிரச்னையே..!

அதாவது, ஊடகத்திலுள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்களை வம்பிக்கிழுக்கும்விதமாக அவர்களது பின்னணி மற்றும் அரசியல் தொடர்புகளை எல்லாம் குறிப்பிட்டு, `அதனால்தான் இந்த ஊடகத்தினரும் இப்படி இருக்கிறார்கள்' என்றெல்லாம் சொல்வது, இவர்களது முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது என்பது மட்டுமல்ல... இதன்மூலம் சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர்களை கொச்சைப்படுத்தி, மக்கள் மத்தியில் தனிமைப்படுத்தும் முயற்சியாகவும்கூட இது நடந்துவருகிறது. அதனால்தான் குறிப்பிட்ட ஒரு செய்தி நிறுவனத்தின் நிர்வாகிக்கே ஊழியர்களைப் பற்றி புகார் மின்னஞ்சல் அனுப்புகிறார்கள். அந்தப் புகாருக்கு பதில் வந்ததாக ஒரு மின்னஞ்சலைக் காட்டுகிறார்கள். ஆனால், இந்த மின்னஞ்சல் விவகாரத்திலேயே அடுத்தடுத்து பல்வேறு கேள்விகள் இப்போது எழுந்து வருகின்றன என்பது வேறு விஷயம்.

குமரேசன்

மத்திய அரசின் சாதனைகளை, மக்களிடையே சொல்லிப்பார்த்தார்கள்... அது இங்கே எடுபடவில்லை. அடுத்து இங்குள்ள எதிர்க்கட்சிகளின் பழைய விஷயங்களை எல்லாம் தோண்டியெடுத்து மோதிப் பார்த்தனர். அதிலும்கூட வெற்றி கிட்டவில்லை. இப்போது அடுத்தகட்டமாக ஊடகம் வழியிலான தாக்குதலை ஆரம்பித்திருக்கிறார்கள். இதுவும்கூட வெற்றி பெறப்போவதில்லை!

ஏற்கெனவே வடநாட்டில், இவர்கள் கடைப்பிடித்த வழிமுறைகள் எல்லாம் இங்கே தமிழ்நாட்டில், எடுபடவில்லை; காரணம்... மதச்சார்பின்மையை உயர்த்திப்பிடிக்கிற, மத நல்லிணக்கத்தைப் பேணுகிற, `அரியும் சிவனும் ஒண்ணு; அறியாதவன் வாயில் மண்ணு' என்ற சிந்தனையோடு வாழ்ந்து வருகிறவர்கள்தாம் இங்கே அதிகம். எனவே, இந்த சிந்தனை இங்கேயுள்ள ஊடகம் வழியேயும் பிரதிபலிக்கத்தான் செய்யும்.

ஆக, இந்த மண்ணின் பாரம்பர்யத்தைப் புரிந்துகொள்ளாதவர்கள், `ஊடகம்தான் தங்களுடைய முயற்சிகளைத் தடுக்கிறது' என்ற தவறான புரிதலோடு, இந்தத் தாக்குதலை நடத்திவருகிறார்கள். ஒருவகையில், இது அவர்களுக்கான தனிப்பட்ட புகழ் தேடும் முயற்சியாகவும்கூட இருக்கலாம். அதாவது, அவர்கள் யாருக்கு சப்போர்ட் செய்கிறார்களோ... அந்த இயக்கத்தைச் சார்ந்த தலைவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் இவர்கள் இப்படி செயல்படலாம்! அதனால்தான், `கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளுங்கள்' என தமிழ்நாட்டிலுள்ள பலரும் இவர்களைக் கண்டித்துவரும் சூழலிலும்கூட அப்படியான கருத்துகள் எதையும் சொல்லாமல், `நீ செய்... பார்த்துக்கொள்ளலாம்' என்ற மறைமுக ஆதரவை சிலர் கொடுத்துவருவதையும் பார்க்க முடிகிறது'' என்றார் முத்தாய்ப்பாக.

நீதியரசர் கே.சந்துரு

இந்நிலையில், ஊடகம் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது குறிவைத்து நடத்தப்பட்டுவரும் ஊடக தாக்குதல் குறித்து மேனாள் நீதியரசர் கே.சந்துருவிடம் கருத்து கேட்டபோது,

``தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரும்பாலான ஊடகம் (அச்சு மற்றும் தொலைக்காட்சி) கட்சி சார்ந்த நபர்களுடைய கட்டுப்பாட்டிலேயே இயங்கி வருகின்றன. அநேகமாக அந்த ஊடகம் அந்த கட்சிக்கு விரோதமான செய்திகளை வெளியிடுவதோ அல்லது கருத்து தெரிவிப்பதோ நடைமுறையில் சாத்தியமில்லை.

சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் சமூக வலைதளத்திலிருந்த மீம்ஸ் ஒன்றை ஒளிபரப்பியது தி.மு.க கட்சியின் தலைவரை அசிங்கப்படுத்துவதாக இருந்ததனால், நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்பட்டார். மத்திய-மாநில அரசுகள் தங்களுடைய விளம்பரங்களை தங்களுக்கு ஆதரவான நிறுவனங்களுக்கு மட்டும் விநியோகிப்பதால், பல அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகம் பொருளாதார இழப்புக்கு உள்ளாக்கப்படுகின்றன.

இப்படி பல வழிகளில் பத்திரிகையாளர்கள் கஷ்டப்படுவதை எதிர்த்து பரவலான குரல் எழுப்பப்படுவதில்லை. அதேபோல் அரசுக்கெதிராகவும் கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதைப் பற்றி யாரும் பேசுவதில்லை. மேலும் தினசரி தொலைக்காட்சியில் நடைபெறும் விவாதங்களில் பா.ஜ.க கட்சி தமிழ்நாட்டில் இரண்டு சதவிகித ஓட்டு வாங்கவில்லையென்றாலும் அக்கட்சி சார்பாக கருத்து தெரிவிப்பதற்கு குறைந்த பட்சம் இரண்டு பேரை பங்கு கொள்ள வைக்க வேண்டுமென்ற எழுதப்படாத உத்தரவு நிறைவேற்றப்பட்டு வருகிறது.

சந்துரு

இது போதாதென்று ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கென ஒரு தகவல் தொழில்நுட்பப் பிரிவு (I.T.Wing) ஏற்படுத்திக்கொண்டு ஊடகத்தில் (சமூக ஊடகம் உட்பட) தங்களது கருத்தை திணித்து வருகிறார்கள். மாற்றுக் கருத்துக்கெதிராக நாகரிகமற்ற முறையில் எதிர் தாக்குதலும் நடத்தி வருகின்றனர். இதில் பல கட்சிகள் கூலி கொடுத்து முழுநேர ஊழியர்களை அமர்த்தி கருத்து தாக்குதல் நடத்துவதைப் பார்க்கிறோம். இதில் அநேகமாக எல்லா அரசியல் கட்சிகளும் அடங்கும்.

இப்படி கூலி வேலை செய்யும் சிலர் ஒரு தொலைக்காட்சி ஊடகத்தில் பணியாற்றும் ஊடகவியலாளர்களை வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து பிரசாரம் செய்து வருவது விஷமத்தனமானதென்றாலும் இதுவொன்றும் ஆச்சர்யப்பட வைக்கவில்லை. அவர் கோரிக்கை வைத்துள்ள நிறுவனத்தின் சொந்தக்காரர் தி.மு.க ஆதரவில் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றவர். விஷமப் பிரசாரம் செய்து வருபவர் அந்த ஊடகவியலாளர்களைத் திராவிடக் கட்சியின் கருத்தைத் திணிக்கிறார்கள் என்று சொன்னாலும் அந்த ஊடகத்தை நடத்தி வருபவர் அதற்காக அவர்களை பணியிலிருந்து நீக்கப் போவதில்லை. அப்படி நீக்க முன்வந்தால் ஊடகங்கத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள மத்திய அரசின் அதிகாரத்துக்குப் பயந்து செய்கிறார் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் இப்படி கட்சிதோறும் கூலிக்கு அமர்த்தப்பட்டுள்ள நபர்கள் தங்களது கருத்துக்களை சமூக ஊடகத்தில் பரப்பி வருவது மிகவும் அசிங்கமாக இருப்பதோடு ஒருவிதமான கருத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என்றுதான் கூற வேண்டும்.

ஊடகவியலாளர்கள் குறிப்பிட்ட ஊடகத்தில் பணியாற்றும்போது அந்த ஊடக நிர்வாகத்தின் கொள்கைக்கு விரோதமாகச் செயல்படுவதற்கு வாய்ப்புகள் குறைவு. வெளியிலிருந்து வரக்கூடிய நிர்பந்தத்துக்கு ஊடக உரிமையாளர்கள் ஆளாகுவார்கள் என்பதைவிட அவர்களது ஊடகம் பொதுமக்கள் மத்தியில் எந்த அளவுக்கு செல்வாக்கு பெறுகிறது (TRP Rate) என்பதை வைத்துத்தான் தங்களது பணியாளர்களை தக்க வைத்துக் கொள்வதுடன் நிகழ்ச்சிகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பார்கள்.

எனவே, ஊடகத்தைத் தங்களது கருத்துக் கட்டுப்பாட்டில் கொண்டுவர, மத்திய அரசு கையிலெடுத்திருக்கும் கருத்து சுதந்திர நசுக்குதலை எதிர்த்து நாம் குரல் எழுப்ப வேண்டுமேயொழிய, அவர்கள் கூலிக்கு வைத்து தினசரி பதிவுகள் மூலம் கூலிப் போராட்டங்கள் நடத்தி வருபவர்களைப் பற்றி தனிப்பட்ட போராட்டம் நடத்துவது சரியாக இருக்காது. ஏனெனில் எல்லா தரப்பிலும் கருத்துச் சிதைவுகள் என்பதும் கட்சிப் பிரசாரம் என்பதும் ஓங்கி விட்ட இவ்வேளையில் தனிப்பட்ட நபர்கள் மீது நாம் தாக்குதல் தொடர முடியாது.”



source https://www.vikatan.com/government-and-politics/news/the-reason-behind-tn-media-and-journalists-are-being-attacked-by-right-wing

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக