Ad

புதன், 15 ஜூலை, 2020

குணமாக்கும் பேச்சு... பெர்ஃபெக்ட் மருத்துவரின் நெகிழ்ச்சி ஃபிளாஷ்பேக்! #MyVikatan

எத்தனையோ மனிதர்கள் வாழ்ந்து மறைகிறார்கள். அவர்களில் ஒரு சிலர் மட்டுமே தங்களின் செயல்களால் காலம் கடந்தும் மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவர் வேணுகோபால் பற்றிய நினைவுகளை, வாசகர் பகிர்ந்துகொள்ளும் உண்மைக் கதை இது!

``ஒருவரும் அப்படி இருந்ததில்லை, நினைவில் நின்றவரை. ஒருவரும் அப்படி வாழ்ந்ததும் இல்லை, விவரம் தெரிந்தவரை. நிழல் போல தன் தொழிலைச் சுமந்தவர். அவரின் நினைவு முழுவதும் பிறருக்கு கற்றுக் கொடுத்தல் மற்றும் உதவிகளைச் செய்வது என்பதாகவே இருந்தது.

Also Read: "தாயின் வயிற்றுக்குள்ளிருந்து வெளியே வந்த பிஞ்சுக்கை..." அனுபவம் பகிரும் டாக்டர் தமிழிசை #DoctorsDay

மூக்கில் இருந்து எப்போது நழுவி விடுமோ என அஞ்சும் வகையில் விலகத் துடிக்கும் கண்ணாடி, அரைகுறையாய் நிமிர்ந்து பார்க்கும் பார்வை, என்னவென்று வெடுக்கெனப் பேசும் பேச்சு என வழக்கமான மருத்துவர்களுக்கான வாடிக்கையான அம்சங்கள் எதுவும் அவரிடம் இருந்ததில்லை.

representational image

அழகான தோற்றம். வெள்ளையில் சற்று மெருகேறிய கறுப்பு நிறம். எனக்கு ஆசிரியராக இருந்தபோது ஐம்பதைக் கடந்து விட்டார். அந்த வயதுக்கே உரித்தான நெற்றிச் சுருக்கங்கள். எப்போதும் வரவேற்கும் புன்னகை. வெள்ளைச் சட்டையில் பிறரை ஊடுருவும் கண்களுடன் குணமாக்கும் பேச்சு. அவர்தான் நம் டாக்டர் வேணுகோபால்.

என்னம்மா பிரச்னை? என்ன பண்ணுதும்மா...’ என்றவாறு நோயாளியின் கையைப் பிடித்து  நாடியைப் பரிசோதித்து, கண், நாக்கு ஆகியவற்றைப் பரிசோதித்து, கால் வீக்கம் இருக்கிறதா எனக் கேட்டபடியே நோயாளி கூறும் தொந்தரவுகளைக் கேட்டு முடிவுக்கு வந்த பிறகு, `சரிங்கம்மா பயப்பட வேணாம். இந்த மருந்து சாப்பிடுங்க. ஒரு வாரம், கழிச்சு வாங்க’ என அனுப்பி வைப்பார்.  

கூடவே மறக்காமல் அங்கிருக்கும் பயிற்சி மருத்துவரை அழைத்து, `அந்தம்மாவை சாப்பாடு விசயத்தில் கவனமாக இருக்கச் சொல்ல மறக்காதே’ என்று நினைவூட்டுவார். அவரின் பேச்சு, செயல் எல்லாமுமே எனக்கு இப்போதும் நினைவில் நிழலாடுகிறது.

திருநெல்வேலி ஜில்லா முழுக்க அவர் ரொம்பவே பிரபலமான மருத்துவர். திருநெல்வேலி மெடிக்கல் காலேஜ்தான் அவருக்கு எல்லாமுமாக இருந்தது. அங்கேதான் அவர் மருத்துவப் படிப்பை முடித்தார். மேற்படிப்பையும் அங்கேயே சேர்ந்து படித்து முடித்தார். அதன் பின்னர் உதவி பேராசிரியர், தலைமை பேராசிரியர்னு அவருடைய வாழ்க்கையின் பாதிக்கு மேல் அந்த மருத்துவமனையிலேயே கழிந்தது. 

நெல்லை அரசு மருத்துவமனை

எப்போதும் நோயாளிகள், நோய்கள், மருந்துகள், சிகிச்சைகள். மருத்துவ மாணவர்களுக்குக் கற்பித்தல், தேர்வுகள் நடத்துதல் என மருத்துவமனை மற்றும் மருத்துவ மாணவர்கள் பற்றியே யோசித்ததாலேயே என்னவோ வாழ்க்கைத் துணை, குடும்பம் என எதைப் பற்றியும் அவர் யோசித்ததாகத் தெரியவில்லை.

டாக்டரை நான் முதன்முதலில் பார்த்தது எப்போது என்பதை யோசித்துப் பார்த்தாலும் நினைவுக்கு வரவில்லை. ஆனால், என் கல்லூரி வாழ்க்கை பற்றி நினைத்தாலோ பேசினாலோ அவரைத் தவிர்த்து விட்டு எதையும் நினைவுகூறினால் அது முழுமையானதாக இருக்காது. 

Also Read: ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி... ஒரு ரூபாய் மருத்துவர் டு ஆந்திராவின் ராஜாவானது வரை! பிறந்த தினப் பகிர்வு

ஆரம்பத்தில் அவரை நெருங்கிப் பேசப் பயமும் தயக்கமும் இருந்தது நன்றாக நினைவில் இருக்கிறது. காரணம், அவர் எனக்கு டீன். அத்துடன்  கல்லூரியில் எங்கள் துறையின் தலைவர். எனக்குப் பாடம் நடத்தும் ஆசிரியர். அனைவரின் அன்புக்குரிய நல்ல மனிதர். அவருக்கு நான் பிரியமான மாணவன் என்பதில் எனக்குப் பெருமை.

மருத்துவமனையில் பெரும்பாலும் பகல் நேரங்களில் நோயாளிகள் கூட்டம் அதிகம் இருக்கும். அப்படி இருந்தால் வகுப்பு எடுப்பதைத் தவிர்த்துவிட்டு, நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கச் சென்று விடுவார். நோயாளிகளைக் கவனிப்பதுதான் அவருடைய முதல் வேலை.

சிகிச்சையை முடித்து விட்டுத்தான் வகுப்பெடுக்க வருவார். சில நாள்களில் இரவு 10 மணிக்கு கூட அவருடைய வகுப்பு தொடங்கும். இரவில் நீண்ட நேரம் வகுப்பு நீளும். அப்படி அவரது வகுப்பு நீண்டு கொண்டிருந்தால் எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சிதான். காரணம், நேரம் கடந்துவிட்டாலும் அனைவரின் உணவுக்கும் அவரே ஏற்பாடு செய்வார்.

டாக்டர் வேணுகோபாலின் வகுப்பு மட்டுமல்ல; அவருடனான உரையாடல்கள் நம்மை ஆர்வப்படுத்தும். அவருடன் பேசினாலே உற்சாகம் பிறக்கும். அவருக்குப் பிடிக்காததைச் செய்தாலோ, பிடிக்காதது நடந்து விட்டலோ காட்டுக் கத்துக் கத்துவார். மனுஷனுக்குக் கோபத்திலும் குறைச்சல் இல்லை. 

ஆரம்பத்தில் அவரை நான் கோபக்கார புரஃபசர் என்றுதான் நினைத்திருந்தேன். அவரை நன்றாகப் புரிந்து கொண்ட பிறகு தான் அவரை போல சிறந்த டாக்டரை, தொழில் மீது பக்தி கொண்ட மனிதாபிமான சிந்தனையாளரைப் பார்ப்பதே அபூர்வம் என்பதைப் புரிந்து கொண்டேன்.

நம்ம டாக்டரிடம் சிகிச்சை எடுத்துக் குணமடைந்த நோயாளி ஒருவர் அவரைப் பார்க்க பெட்டி நிறையப் பழங்கள் மற்றும் பரிசுப் பொருள்களுடன் வந்திருந்தார். `அய்யா நீங்க மட்டும் இல்லைனா நான் இப்போ உசுரோடவே இருந்திருக்க மாட்டேன். உங்களுக்கு என்னோட சின்ன அன்பளிப்பு  கொண்டுவந்திருக்கேன். மறுக்காம ஏத்துக்கணும்’ என்றார்.

representational image

அதற்கென்ன என்பது போல் ஒரு பார்வை பார்த்துவிட்டு, `இப்போ ஏதும் தொந்தரவு இருக்கா?’ என்றார் டாக்டர் வேணுகோபால். அவரோ, `அய்யோ, நீங்கதான் என்னைக் காப்பாத்திட்டிங்களே... எனக்கு இப்போது எந்தக் குறையும் இல்லை. நான் நல்லா இருக்கேன்’ என்று சிரித்தபடியே டாக்டரை நெருங்கி வந்தார்.

அந்த நபரின் பேச்சைக் காதில் கேட்டபடியே மற்றொரு நோயாளிக்குச் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த டாக்டர், `அப்போ சரி. நீங்க போகலாம். தம்பி... அடுத்த பேஷன்டை உள்ளே அனுப்புங்கய்யா’ என்று குரல் கொடுத்தார். ஆனால், அந்த பிரபலம் அப்போதும் போகாமல் உள்ளேயே நின்றார். அதனால் ஆத்திரம் அடைந்த டாக்டர், `வேர் இஸ் தி நெக்ஸ்ட் பேஷன்ட்?’ என்று உச்ச ஸ்தாதியில் கத்தினார். 

representational image

அங்கிருந்த எனக்கு வியர்த்துவிட்டது. பழம் மற்றும் பரிசுப் பொருள்களுடன் வந்தவருக்கும்தான். அவர் அந்த ஏரியாவின் முக்கியமான அரசியல்வாதி. அவரும் இப்படியொரு அவமானத்தை எதிர்பார்க்கவில்லை. அதனால் ஏமாற்றமும் அவமானமும் முகத்தில் தெரிய மெதுவாக வெளியேறினார்.

அரசியல்வாதியுடன் வந்தவர்கள் அளாளுக்கு ஏதேதோ பேசியபடி சென்றார்கள். நம்ம டாக்டர் எதையும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அவர் சிகிச்சைக்கு வந்திருந்த ஒரு குழந்தையின் இதய ஒலியை ஸ்டெதஸ்கோப் மூலம் பரிசோதித்துக் கொண்டிருந்தார். இந்தச் சம்பவம் பற்றி அவரிடம் ஒருமுறை பேசும் வாய்ப்புக் கிடைத்தது. 

representational image

நான் அவரிடம், `சார்... நீங்க அந்த அரசியல்வாதி வந்தப்ப அவரிடம் அந்த அளவுக்கு அலட்சியம் காட்டியிருக்க வேண்டாம். ஒரு சின்ன ஸ்மைல் பண்ணியிருக்கலாம்’ என்றேன். அவரோ, `நாம் சிரிச்சுப் பேசுற நேரத்தில் இன்னொரு நோயாளி வலி தாங்க முடியாமல் அழுதுக்கிட்டிருப்பான். அதை நினைவில் வச்சுக்கிட்டா அநாவசியமா யாரிடமும் பேசிக்கொண்டிருக்க மாட்டோம். அரசு தரும் சம்பளத்தை மீறி அவசியம் இல்லாமல் அன்பளிப்பை ஏற்கவும் மாட்டோம்’ என்று சொல்லிச் சிரித்தார்.

ஒரு நாள் அவர் என்னிடம், `உனக்கு ஏதும் வேலை இருக்கா? நான் என்னுடைய கைப்பையை ரூமிலேயே மறந்து வச்சுட்டு வந்துவிட்டேன். அதை எடுத்துக்கொண்டு வர முடியுமா' என்று கேட்டார். `உங்களுக்கு உதவறதை விடவும் எனக்கு வேறு என்ன சார் வேலை...’ என்று சொன்னபடியே அவரது அறை நோக்கி நடந்தேன். 

representational image

இரண்டாவது தளத்தில் அவர் அறை இருந்தது... வேகமாகப் படி ஏறியது கொஞ்சம் மூச்சு வாங்கியது. `டாக்டர் வேணுகோபால், HOD மெடிசன் டிபார்ட்மென்ட்’ என்று வெள்ளை நிற பெயின்ட்டில் எழுதிய மரத்தாலான பெயர்ப்பலகை சுவரில் அறைந்து வைக்கப்பட்டிருந்தது.

டாக்டர் இல்லாத நேரத்தில் அவரது அறைக்குள் நுழைவது அதுவே முதல்முறை. அறையில் சுற்றிலும் பார்த்தபோது அவருடைய பை அங்கிருந்த மரடேபிளின் கீழ் இருந்தது. அதை எடுக்கச் சென்றேன். கதவு தானே மூடிக்கொண்டது. அறைக்குள் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். நிறைய புத்தகங்களை டாக்டர் வைத்திருந்தார். 

மணி பர்ஸ்

மேஜையின் மீது அவருடைய பர்ஸ் இருந்தது. அழகான அந்த லெதர் பர்ஸை எடுத்துப் பார்க்க ஆசை ஏற்பட்டது. அதை எடுத்து உள்ளே பார்த்தேன். ஒரு போட்டோவும் இரு விசிட்டிங் கார்டுகளும் கொஞ்சம் பணமும் இருந்தது. அப்படியே மூடி வைத்துவிட்டு அவரது கைப் பையை எடுத்துக்கொண்டு வெளியேறினேன்.

டாக்டர் அதற்குள்ளாக வார்டுக்கு சென்றுவிட்டார். அங்கு சென்றபோது வார்டில் பெரிய வரிசை இருந்தது. நான் பையை அவரிடம் கொடுத்ததும் நன்றி சொல்லி வாங்கிக்கொண்டார். பையைத் திறந்து உள்ளே சின்னச் சின்னதாக 20 மற்றும் 10 ரூபாய் கட்டுகளாகப் போடப்பட்டிருந்ததை பார்த்தார். 

டாக்டரின் கையில் பை வந்ததும் வரிசையில் நின்றவர்கள் முகத்தில் மகிழ்ச்சி. ஒவ்வொருவராக வந்து அவரிடத்தில் குறிப்பிட்ட தொகையைக் கூறி வாங்கிச் சென்றார்கள். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. டாக்டர் வட்டிக்குப் பணம் கொடுக்கிறவரா என்கிற எண்ணம் ஏற்பட்டது.

டாக்டரிடம் வந்து கேட்பவர்களிடம் அவர்கள் கேட்கும் தொகையைக் கொடுத்தார். யாருக்கு எவ்வளவு கொடுக்கிறோம் என்கிற கணக்கு எதுவும் எழுதப்படவில்லை. பின் எப்படி இதையெல்லாம் நினைவில் வைத்திருந்து அவர் வசூலிப்பார் என்கிற சிந்தனை எனக்குள் எழுந்தது. 

Also Read: கொரோனா: தந்தை மரணம்; மருத்துவமனையில் மகன்! - நெகிழவைத்த தன்னார்வலர்கள் உதவி

வரிசையில் வந்த சிறுவன் ஒருவன், `அய்யா நீங்க கொடுக்குறது அப்பாவோட மருந்து செலவுக்கு சரியா இருக்கு, சாப்பாடு வாங்க காசு போதவில்லை’ என்றான் அழாதகுறையாக. டாக்டர் அவனிடம் `இந்தா தம்பி... இதையும் சேர்த்து வச்சுக்கோ. அப்பாவுக்கு நல்லா சாப்பாடு வாங்கிக் கொடுத்து நீயும் சாப்பிடு’ என்று கூடுதலாகப் பணத்தைக் கொடுத்தார்.

வார்டில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்த ஒரு நோயாளி, பாதியில் மருந்தை நிறுத்திவிட்டு வரிசையில் வந்து நின்றார். இன்னும் சில நோயாளிகள்கூட வரிசையில் நின்றார்கள். சில நோயாளிகளுக்கு பால், முட்டை வாங்க பணம் தேவைப்பட்டது. சிலருக்குத் தினசரி உணவுக்கே பணம் தேவைப்பட்டது.

representational image

தன் முன்னால் வந்து நிற்பவர் யார் என்பது பற்றி அவர் அறியவில்லை. அவர்களுக்குக் கொடுப்பதில் அளவும் இல்லை  ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவையெனக் கேட்ட பணத்தை எடுத்துக் கொடுத்தார். நோயாளிகளின் மருந்து, உணவுச் செலவுக்கு மட்டுமல்லாது அவர்களின் குடும்பத்துக்கும் உதவும் குணம் அவரிடம் இருந்தது.

ஒவ்வொரு மாதமும் தன்னுடைய சம்பளம் வந்ததும் அதில் இருந்து எடுத்து இதுபோன்று தேவைப்படுபவர்களுக்கு உதவுவதை அவர் வழக்கமாக வைத்திருந்தார் என்பதே எனக்குத் தாமதமாகப் புரிந்தது. இத்தனைக்கும் அப்போது அவருக்கு மாதச் சம்பளமே 600 ரூபாய்தான். 

சம்பளம் கையில் கிடைத்ததும் தன்னுடைய தேவைக்கு மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவற்றை இப்படிக் கொடுக்க உட்கார்ந்து விடுவாராம். அவர்  இங்கு வேலைக்கு வந்த முதல் மாதத்திலிருந்து இது போலவே உதவிகளைச் செய்கிறாராம்.

நோயாளி, நோயாளிகளுடைய வீட்டார் கல்லூரி ஊழியர்கள் மட்டுமல்ல வெளியூர் ஆட்கள்கூட அந்தத் தேதிக்கு வரிசையில் நின்று அவரிடம் பண உதவியைப் பெற்றுச் செல்வார்களாம். முன்பெல்லாம் ஒவ்வொருவரின் வீடுகளுக்கே சென்று உதவியிருக்கிறார். 

Also Read: `அவங்க சிரிப்புதான் நிம்மதி!’ - புற்றுநோயுடன் போராடும் குழந்தைகளுக்கு உதவும் சென்னை நண்பர்கள்

அவருக்கு எப்படி இப்படி ஒரு எண்ணம் ஏற்பட்டது என்று யாருக்கும் தெரியாது. யாரும் கேட்டதும் இல்லை. கர்ணன் கதை படித்திருக்கிறேன். ஆனால், நிஜத்தில் அவர்தான் கர்ணன். என்னையும் யோசித்துக்கொண்டேன். நானும் பஸ்ஸில் உதவி கேட்டு வரும் சிலருக்கு ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் கொடுப்பேன். ஆனால், அவருடன் ஒப்பிடும்போது ஒரு புழு போல நெளிந்தேன்.

டாக்டரின் உதவும் குணம் பற்றி அவரிடமே ஒரு முறை பேசியிருக்கிறேன். `உதவி செய்யுறதுல பெரியது சிறியதுன்னு எதுவுமே கிடையாது. நீங்க, நான், மற்றவர்கள்னு முகம் அறியாத பலரும் செய்யுற உதவியில்தான் இந்தச் சமூகம் முழுமையடையுது. முடிஞ்சா உதவுறது ஒரு வகை. முடிஞ்சவரை உதவுறது மற்றொரு வகை” என்று உதவுதல், மருத்துவம், மனிதம் எனப் பலவற்றைப் பேசினார். 

representational image

இப்படியான மனிதர்கள் நம் கண்முன்பாகவே வாழ்ந்தார்கள் என்பதே பெருமைக்குரியதாக நினைக்கிறேன். நான் நேரில் அனுபவித்த அந்த மாமனிதர் பற்றி என் மகனிடம் சொன்னேன். அவன் நம்பவில்லை. இப்படிப்பட்ட மனிதர்களை நாமே நேரில் பார்க்காதவரை யார்தான் நம்புவார்கள்? ஆனால் அத்தகைய மனிதரின் நிழலில் வாழ்ந்ததை பெருமையாகக் கருதுகிறேன்.

டாக்டர் வேணுக்கோபால் மருத்துவத் தொழிலையே தன் வாழ்க்கையாகக் கொண்டிருந்தார். அப்படிப்பட்ட அந்த உயர்ந்த சிந்தனை கொண்ட மனிதர் பணியில் இருந்தபோதே `ஸ்ட்ரோக்’ வந்துவிட்டது. ஆனால், அதையும் பயிற்சிக் களமாக மாற்றி, மாணவர்களுக்கு தன்னையே ஒரு மாடலாக்கிக் கொண்டு பாடம் நடத்தினார்.

டாக்டர் வேணுகோபால்

அவர் ஓய்வு பெற்று போன பின்பும் கூட தன் ஓய்வூதியப் பணத்தைக் கொண்டு உதவிகளைச் செய்திருக்கிறார். தன்னுடைய பங்களா உட்பட எல்லாச் சொத்துகளையும் அமெரிக்க நண்பர் ஒருவரிடம் விற்று அந்த பணத்தையும் தேவைப்படுபவர்களுக்குக் கொடுத்துள்ளார்.   

தன்னால் முடிந்தவரை உதவ வேண்டும் என்கிற கொள்கையுடடைய அவர், தன் வாழ்வின் கடைசி நொடி வரையிலும் பிறருக்காகவே வாழ்ந்தார். அவர் இப்போது இல்லை என்றாலும் கூட அவரைப் பற்றி குடும்பத்தினர், நண்பர்கள் எனப் பலரிடமும் நாள்முழுவதும் கூடப் பேசியிருக்கிறேன். ஆனால், அவரின் பர்ஸில் இருந்த பெண்ணின் போட்டோ பற்றி இதுவரை நான் யாரிடமும் எதையும் சொன்னதில்லை. அவரும்தான்..! 

அதன் பின்னர் அவரால் முன்பு போல ஓடியாடி பணியாற்ற இயலவில்லை. அவருடைய ஒரு கை இழுத்துக்கொண்டது. ஆனால், ஸ்ட்ரோக் வந்தால் என்ன மாதிரியான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பற்றி தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் புதிதாக வந்த மாணவர்களுக்கும் பயிற்சிக்காக தன்னையே ஒப்புக்கொடுத்தார்.

- ச.வினோத்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/oddities/miscellaneous/a-heartwarming-story-of-tirunelveli-gh-doctor-venugopal

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக