Ad

புதன், 15 ஜூலை, 2020

`திருப்பூர் முதலிடம்; அரசுப் பள்ளிகளில் 85.94% தேர்ச்சி’ - ப்ளஸ் டூ தேர்வு முடிவு விவரங்கள்

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெற்றன. இந்த தேர்வைத் தமிழகம் முழுவதும் சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர். இறுதி தேர்வின் போது கொரோனா அச்சம் காரணமாக 35,000 மாணவர்களால் ஒரு தேர்வு மட்டும் எழுத முடியாத சூழல் உருவானது. இந்த தேர்வைப் பின்னர் எழுத அனுமதி வழங்கப்படும் எனப் பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது ஆனால் தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்ததால் மாணவர்களுக்கான தேர்வு நடத்தமுடியாமல் போனது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு

இதனையடுத்து ஒரு தேர்வு எழுதாத மாணவர்களைத் தவிர்த்து பிறரது விடைத்தாள்களைத் திருத்த ஏற்பாடு செய்யப்பட்டது ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக விடைத்தாள் திருத்தும் பணியிலும் தாமதம் ஏற்பட்டது. ஒருவழியாகக் கடந்த மே 27-ம் தேதி முதல் 43,000 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 200-க்கும் அதிகமான மையங்களில் சமூக இடைவெளி, மாஸ்க், க்ளௌஸ் என கொரோனா தடுப்பு முறைகளின்படி விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று இணையத்தில் வெளியிடப்படும் என்றும் மாணவர்களுக்குக் குறுஞ்செய்தியாக அனுப்பிவைக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்படி பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் தமிழகம் முழுவதும் சுமார் 92.3 சதவிகிதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவிகள் மட்டும் 94.80 சதவிகிதமும் மாணவர்கள் மட்டும் 89.41 சதவிகிதமும் தேர்ச்சிபெற்றுள்ளனர். இந்த வருடம் மாணவர்களை விட மாணவிகள் 5.39 சதவிகிதம் அதிகமாக தேர்ச்சியடைந்துள்ளனர்.

தேர்வு முடிவுகள்

தமிழகத்தில் 97.12% தேர்ச்சிகளோடு திருப்பூர் மாவட்டம் முதல் இடத்திலும் 96.99% தேர்ச்சிகளோடு ஈரோடு மாவட்டம் இரண்டாவது இடத்திலும் 96.39% தேர்ச்சிகளுடன் கோயம்புத்தூர் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது. அரசுப் பள்ளிகளில் 85.94% மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அரசு உதவி பெறும் பள்ளிகளில் 94.3 சதவிகதமும், பெட்ரிக் பள்ளிகளில் 98.7 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை tnresults.nic.in என்ற இணையதளத்தில் காலை 9.30 மணி முதல் தெரிந்துகொள்ளலாம்.



source https://www.vikatan.com/news/tamilnadu/tamil-nadu-class-12-exam-results-released

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக