Ad

வெள்ளி, 17 ஜூலை, 2020

சரிந்த வருவாய்... முடங்கிய நிதிநிலை... தடுமாறும் தமிழக அரசு! #InDepth

தமிழக அரசுக்கு ஒவ்வொரு ஆண்டும் வணிக வரி, டாஸ்மாக், பத்திரப்பதிவு ஆகிய மூன்றிலிருந்தும்தான் அதிகமான வருமானம் கிடைக்கும். அதன்படி, கடந்த 2018-19-ம் நிதிஆண்டில் தமிழக அரசுக்குச் சொந்த வரிகள் மூலம் கிடைத்த வருவாய் 1,05,543 கோடி ரூபாய். வணிக வரி மூலம் மட்டும் கிடைத்த வருவாய் 88,143.81 கோடி ரூபாய். டாஸ்மாக் வருவாய் 31,157 கோடி ரூபாய். பத்திரப் பதிவு மூலம் கிடைத்த வருவாய் 11,002 கோடி ரூபாய். ஆனால், கொரோனா பாதிப்புக்குப் பிறகு அனைத்து வருவாயிலும் துண்டு விழுந்துவிட்டது. 

தமிழக அரசின் வருமானம்

நடப்பு 2020-2021-ம் நிதியாண்டில் தமிழக அரசின் சொந்த வரி வருவாய் இலக்கு 1.33 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஏப்ரல் மாதத்தில் தமிழக அரசுக்குச் சராசரியாக 11,127.30 கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அதில் வெறும் 10 சதவிகிதம் மட்டுமே வருவாய் கிடைத்திருப்பதாகவும், அதிகபட்சமாகப் போனால் இது 20 சதவிகிதமாக இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

வரி வருவாய் இழப்பு!

ஊரடங்கு காரணமாக இந்திய மாநிலங்களில், கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை  `India Ratings And Research' அமைப்பு கணித்துள்ளது.

Also Read: ̀`மொத்த முதலீடும் முடங்கியது!' கலங்கும் சிறு குறு வியாபாரிகள்... மீள்வது எப்படி?

அதன்படி தமிழகத்திற்கு,  ஜி.எஸ்.டி வரி இழப்பு 2,211 கோடி ரூபாய்; வாட் வரி இழப்பு 2,827 கோடி ரூபாய்; மாநில கலால் வரி  இழப்பு 605 கோடி ரூபாய்; பத்திரப் பதிவின் மூலம் வருமான இழப்பு 1,094 கோடி ரூபாய்; வாகன வரி இழப்பு 502 கோடி ரூபாய்; மின்சாரக் கட்டண வருமான இழப்பு 108 கோடி ரூபாய்; வரி அல்லாத மற்ற வருவாய் இழப்பு 1,065 ரூபாய் என மொத்தம் 8,412 கோடி ரூபாயை அந்த அமைப்பு தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

வருவாய் இழப்பு

ஒரு நிதியாண்டின் முதல் மாதத்தில் 90 சதவிகித வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதிலிருந்தே தமிழகத்தின் நிதி ஆதாரங்கள் மீது கொரோனா வைரஸ் எத்தகைய தாக்குதலை நடத்தியிருக்கிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

மத்திய அரசின் உதவியை நாடி...

மற்றொருபுறம், இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயால் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் உருவெடுத்துள்ளது. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் இருந்தபோது, சென்னையில் அது கோரத்தாண்டவம் ஆடியது. இப்போது சென்னையில் சற்றே தணிந்திருக்கும் சமயம், கோவை, மதுரை, திருவள்ளூர் போன்ற பல மாவட்டங்களில் தொற்று பரவுதலின் வேகம் அதிகரித்திருக்கிறது.  

வருமான இழப்பு ஒருபுறம் இருக்க, கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காகவும், மருத்துவச் செலவினங்களுக்கும், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கும் தமிழக அரசு பல்லாயிரம் கோடிகளைச் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. வருமானமும் இல்லாமல், செலவுகளும் அதிகரிக்கும்போது மத்திய அரசின் நிதியுதவி இல்லாமல், மாநில அரசுகளால் சமாளிக்க முடியவே முடியாது. இதனால் மத்திய அரசின் நிதி உதவியை அனைத்து மாநிலங்களும் எதிர்நோக்கி காத்திருப்பது போல, தமிழகமும் காத்துக் கொண்டிருக்கிறது.

கணக்கு காட்டும் மத்திய அரசு!

``கொரோனா ஒழிப்புப் பணிகள் மற்றும் வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்காக பேரிடர் நிதியாக முதலில் 16,000 கோடி ரூபாயை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. அடுத்தகட்டமாக, உணவு தானியங்கள் வாங்குவதற்காக 1321 கோடி ரூபாய்; மருத்துவப் பாதுகாப்புக் கருவிகள் வாங்குவதற்காக தேசியப் பேரிடர் நடவடிக்கை நிதியிலிருந்து 1,000 கோடி ரூபாயை வழங்கும்படியும் மத்திய அரசைக் கோரியிருந்தார்.

ஆனால், தமிழகத்திற்கு மத்திய அரசு போதுமான நிதியை வழங்கவில்லை. வரி வருவாய் நிலுவை உள்ளிட்ட பல்வேறு வகைகளில் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையில் மட்டுமே ரூ.6,420 கோடியை மத்திய அரசு வழங்கிய போதிலும், தமிழக அரசு கோரிய நிதி கிடைக்கவில்லை" என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

இந்நிலையில், தமிழகத்திற்கு கொரோனா தொற்று நோயை எதிர்த்துப் போராட மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்ய 6,600 கோடி ரூபாய்; பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டத்திற்கு 2,285 கோடி ரூபாய்; கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 1.22 கோடி பெண்களின் ஜன்தன் வங்கி கணக்குகளில் மாதம் 500 ரூபாய் வீதம் போடப்பட்ட மொத்த தொகை 610 கோடி ரூபாய்; அவசர கடன் வரி உத்தரவாதத் திட்டம் மூலம், தமிழகத்திலுள்ள சுமார் 47,000 சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 1,937 கோடி ரூபாய் என தமிழகத்துக்கு போதிய நிதியை கொடுத்திருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து முதல்வரிடம் கேள்வி வைக்கப்பட்ட போது, ``நான் மத்திய நிதியமைச்சர் பேசியதை கேட்கவில்லை. அதனால் அதற்கு என்னால் பதில் சொல்ல இயலாது" என்று மறுத்துவிட்டார்.

வருவாய் பற்றாக்குறை!

தமிழக அரசின் நடப்பு 2020-21 நிதி ஆண்டின் பட்ஜெட்டில், சுமார் 2.19 லட்சம் கோடி ரூபாய் வருவாய்  இருக்கும் எனக் கணிக்கப்பட்டிருந்தது. இதில் சுமார் 2.40 லட்சம் கோடி ரூபாய் செலவு இருக்கும் என்பதால், வருவாய் பற்றாக்குறை 21,000 கோடி  ரூபாயாக இருக்கும் என்றும், அரசு பெற்ற கடன்களுக்கு சுமார் 37,120 கோடி ரூபாயை வட்டியாகச் செலுத்துவதால், நிதிப் பற்றாக்குறை சுமார் 59,000 கோடி ரூபாய் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதே போல, கடந்த 2019-20 ஆண்டு நிதி நிலை அறிக்கையில், அரசுக்கு 1,97,721 கோடி ரூபாய் வருவாய் இருக்கும் என்றும்,  2,12,035 கோடி ரூபாய் செலவு ஏற்படும் என்பதால் வருவாய் பற்றாக்குறை 14,314 கோடி ரூபாயாகவும், நிதிப் பற்றாக்குறை 44,176 கோடி ரூபாய் என்றும் சொல்லப்பட்டிருந்தது. 

Also Read: “அரசின் வருவாய் பற்றாக்குறை கட்டுக்குள் இருக்கிறது!” - நிதி அமைச்சர் சொல்வது உண்மையா?! #TNBudget

இதை வைத்துப் பார்க்கும்போது, ஒவ்வொரு நிதி ஆண்டிலும் வருவாய் பற்றாக்குறையும், நிதிப் பற்றாக்குறையும் பல மடங்கு அதிகரித்து வருவது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. தமிழக அரசின் கஜானாவின் நிலைமை வழக்கமான நாட்களிலேயே இப்படியிருக்கும்போது, கொரோனா பேரிடர் காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. 

முதலமைச்சர் சமீபத்தில் பேசும்போது கூட, நடப்பு நிதி ஆண்டில் கணிக்கப்பட்ட வருவாய் பற்றாக்குறையை விட நான்கு மடங்கு அதிகமாக இருக்கும் என்பதை குறிப்பிட்டிருந்தார். அதாவது 2020-2021-ம் நிதி ஆண்டில் வருவாய் பற்றாக்குறை 85,000 கோடி ரூபாயாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.

தமிழக அரசின் கடன்!

இந்த நடப்பு நிதியாண்டில் தற்போதைய நிலவரப்படி இந்தியாவிலேயே அதிக கடன் பெற்ற மாநிலமாகத் தமிழகம் மாறி உள்ளது. ஒவ்வொரு நிதி ஆண்டின் பட்ஜெட் அறிக்கையிலும், இந்த ஆண்டின் வருவாய் இவ்வளவு இருக்கும்; கடன் இவ்வளவு இருக்கும் எனக் குறிப்பிடுவது வழக்கம். அதனடிப்படையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக வருவாய் கணக்கீட்டை விட, கடன் வாங்கும் அளவு தொடர்ந்து வேகமாக அதிகரித்துள்ளது. 

தமிழக அரசின் கடன்

2000-2001-ம் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் 28,685 கோடி ரூபாய் ஆக இருந்தது. ஆனால் இது அடுத்த 10 ஆண்டுகளில் 1,20,204 கோடியாக உயர்ந்தது. தற்போதைய 2020-2021-ம் நிதியாண்டில் 4,56,660 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

மேலும், நடப்பு நிதியாண்டில், கடந்த ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் மட்டும் இதுவரை தமிழக அரசு 30,500 கோடி ரூபாய் கடன் பெற்றிருக்கிறது. தமிழகம் பெற்ற இந்த கடன் தொகை, நிர்ணயிக்கப்பட்ட கடன் வரம்பை விட அதிகம் ஆகும். இப்படி நாளுக்கு நாள் தமிழக அரசின் கடன் சுமை அதிகரித்துக் கொண்டே போகிறது.

மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்!

தமிழக அரசின் கடன் சுமை குறித்தும், வருவாய் மற்றும் செலவுகள் பற்றியும் பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானத்திடம் பேசினோம். ``இன்றைய நிலையில் பொருளாதார ரீதியாகவும் சரி, கொரோனா பாதிப்பிலும் சரி, தமிழகத்தின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. தமிழக அரசுக்கு ஒவ்வொரு மாதமும் சுமார் 12,000 கோடி வரி வருவாய் கிடைக்க வேண்டும். ஆனால் கடந்த மூன்று மாதங்களாகப் பெருமளவு வருமானம் சரிந்துள்ளது. இதை ஈடுகட்ட வேறு வழியில்லாமல் தமிழக அரசு கடன் வாங்கியிருக்கிறது.  

பேராசிரியர் ஜோதி சிவஞானம்

கொரோனா நெருக்கடியால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதால் அரசு மக்களுக்காக அதிக செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. கொரோனா தடுப்பு பணிக்காக அதிக நிதி ஒதுக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. எனவேதான் தமிழக அரசு கடந்த மூன்று மாதங்களில் அதிக கடன் வாங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. 

இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. தற்போது வாங்கியிருக்கும் கடன்கள் அனைத்தையும், லாங்டேர்ம் கடன்களாக வாங்கியிருக்கிறது தமிழக அரசு. ஒரு கடனை குறுகிய காலத்திற்கு வாங்கும் போதுதான் வட்டி குறையும். நீண்டகால அடிப்படையில் வாங்கும்போது வட்டி அதிகமாகக் கட்ட வேண்டி இருக்கும். ஏற்கெனவே வாங்கியிருக்கும் கடன்களுக்கு தமிழக அரசு சுமார் 37,000 கோடி ரூபாயை வட்டியாகக் கட்டி வருகிறது. தற்போது வாங்கியிருக்கும் கடனுக்கான வட்டியையும் சேர்த்தால், அது இன்னும் அதிகமாகும். 

கொரோனா பாதிப்பால் உண்டான செலவுகளுக்கெல்லாம், மாநில அரசாங்கம் பொறுப்பேற்க முடியாது. மத்திய அரசாங்கம்தான் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை, கேட்டிருக்கும் நிவாரண நிதியை மத்திய அரசாங்கம் கொடுக்காமல் தாமதப்படுத்தி வருகிறது. இதுவரை கொடுத்திருக்கும் நிதியும், வரி நிலுவை தொகைதானே தவிர, கொரோனா பேரிடர் நிதியிலிருந்து நிவாரண நிதியாகக் கொடுக்கவில்லை. அதுமட்டுமில்லாமல், தமிழக அரசின் நிதி திரட்டும் நடவடிக்கைகளிலும் தலையிடுகிறது. இது மிகப்பெரிய தவறு.

Also Read: கேட்டது ரூ.3,000 கோடி; கொடுத்தது ரூ.510 கோடி... கொரோனா நிவாரண நிதியில் தமிழகத்துக்கு ஓரவஞ்சனையா?

இப்படிச் செய்வதற்கு பதிலாக, ஜி.எஸ்.டி வரி நிலுவைத் தொகை மற்றும் கொரோனா நிவாரண நிதியைக் கொடுத்தாலாவது தற்போதிருக்கும் பிரச்னைகளிலிருந்து தமிழக அரசு தற்காலிகமாக தப்பிக்கும்" என்றார். 

ஆக, வருவாய்க்கு ஆதாரமற்ற சூழல் நிலவி வரும்போது, கடன் சுமை அதிகரித்தால் தமிழக அரசு மேலும் சிக்கலைத்தான் சந்திக்க வேண்டியிருக்கும். இதனால், தமிழக அரசு கேட்கும் நிவாரண நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/budget/tamilnadu-govt-in-severe-financial-crisis-due-to-covid-19-outbreak-explained

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக