Ad

வெள்ளி, 17 ஜூலை, 2020

`கொரோனா வார்டுகளில் கிருமிநாசினி தெளிப்பு இயந்திரம்’ - அசத்திய மதுரை பொறியாளர்

சமீபத்தில், கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களின் வார்டுகளில் உணவு மற்றும் தண்ணீர் கொண்டு செல்ல ரோபோ அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது, அதே வார்டுகளில், கிருமி நாசினி தெளிக்க தானியங்கி இயந்திரத்தை வடிவமைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் மதுரையைச் சேர்ந்த பொறியாளர் சுந்தரேஸ்வரன்.

தானியங்கி கிருமி நாசினி தெளிப்பு இயந்திரம்

Also Read: மதுரை: `தள்ளுவண்டி கிடைச்சதே பெரிய சந்தோஷம்!' - ஏழைப் பெண்ணை நெகிழ வைத்த தி.மு.க எம்.எல்.ஏ

”கடந்த 13 வருடங்களாக மதுரை மாவட்டத்தில், மருத்துவ உபகரணங்கள் விற்பனை மற்றும் பழுது நீக்கம் தொழில் செய்துவருகிறேன். கொரோனா சிகிச்சை அளிக்கப்படும் வார்டுகளில் கிருமி நாசினி தெளிக்க, 7 முதல் 8 கிலோ எடை கொண்ட இயந்திரத்தை தோள்களில் சுமந்துகொண்டு, முழு கவச உடை அணிந்து பணியாளர் அந்த வேலையினை செய்ய வேண்டும். அப்படி செய்தாலும் கூட, அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அவரும், அச்சத்துடனே அப்பணியினை செய்வார். அதற்கு தான் தானியங்கி கிருமி நாசினி தெளிப்பு இயந்திரத்தை வடிவமைத்திருக்கிறோம்.

இதை நமது செல்போனில் உள்ள ஒரு செயலி மூலமாக இயக்க முடியும். 20 அடி தொலைவில் நாம் நின்றுகொண்டு மொபைல் போனில் அந்தச் செயலியைத் தரவிறக்கம் செய்து இயந்திரத்தை இயக்கலாம். ஒருமுறை சார்ஸ் செய்தால், 4 மணி நேரம் தொடர்ச்சியாக இயங்கும். இயந்திரத்தில் 4 லிட்டர் அளவில் கிருமி நாசினி திரவத்தை நிரப்பிக்கொள்ளலாம்.

சுந்தரேஸ்வரன்

Also Read: ஸ்ரீவில்லிபுத்தூர் டு மதுரை... மகளின் பசியாற்ற 80 கி.மீ சைக்கிள் மிதித்த செல்லத்துரை - கொரோனா துயரம்!

இந்த இயந்திரத்திற்கு மத்திய அரசின் மருத்துவ உபகரணங்களுக்கான அங்கீகாரம் வழங்கும் நிறுவனத்திடம் சான்றிதழ் வாங்கியுள்ளோம். மேலும், தரச்சான்றிதழும் கிடைத்துள்ளது. இயந்திரத்தைத் தயார் செய்ய ஒன்றரை லட்சம் ரூபாய் செலவானது. மொத்தமாக உற்பத்தி செய்யும் பட்சத்தில் அதன் விலை 60,000-த்தில் தயார் செய்யலாம். அரசோ, தனியார் அமைப்போ முன்வந்தால், இன்னும் மிகக் குறைவான விலையில் உற்பத்தி செய்ய முடியும். பள்ளி, கல்லூரி, அலுவலகம், திரையரங்கம், திருமண மண்டபம் என மக்களின் பயன்பாடு அதிகம் இருக்கும் இடங்களில், இந்த இயந்திரம் இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம். மேலும், அரசு முன்வரும்போது, மக்களுக்கு குறைந்த விலையில் இயந்திரத்தைக் கொடுக்க முடியும்” என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/an-engineer-from-madurai-has-designed-an-automatic-disinfectant-sprayer

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக