Ad

வெள்ளி, 3 ஜூலை, 2020

COVAXIN: இந்தியாவின் கோவிட்-19 தடுப்பூசி... ஆகஸ்ட் 15 -ல் ஆய்வு முடிவுகள்?

இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள கோவிட்-19 தடுப்பூசியை மனிதர்களுக்கு கொடுத்து ஆய்வு செய்து, அதன் முடிவுகள் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் 'கோவாக்ஸின்' (COVAXIN)என்ற மருந்தை உருவாக்கியுள்ளது.

புனேவிலுள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து இது உருவாக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட ஆராய்ச்சிகள் நிறைவடைந்த நிலையில், மனிதர்களிடம் நடத்தும் சோதனைக்கு (Clinical Trial) இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) அனுமதியளித்துள்ளது.

Covid-19

இந்தியாவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட 12 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கோவாக்ஸின் தடுப்பூசி மனிதர்களுக்குச் செலுத்திப் பரிசோதிக்கப்பட உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையில் மட்டும் 1300 பேருக்கு தடுப்பு மருந்தை அளித்துப் பரிசோதிக்கப்படவுள்ளது. ஆராய்ச்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மனித சோதனைக்கான வேலைகளை துரித கதியில் முடிக்க வேண்டும் என்று ஐ.சி.எம்.ஆரின் இயக்குநர் ஜெனரல் மருத்துவர் பல்ராம் பார்கவா பாரத் பயோடெக் நிறுவனத்துக்கும், 12 மருத்துவக் கல்லூரிகளின் முதன்மை ஆராய்ச்சியாளர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

vaccine

"உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள முதல் கோவிட்-19 தடுப்பூசி என்பதால் இது தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். கொரோனோ பெருந்தொற்றின் அவசரத்தை உணர்ந்து, இந்த ஆராய்ச்சிக்கான பணிகளில் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும். ஜூலை 7-ம் தேதிக்குள் மனித சோதனைக்கு உட்படுத்தப்படுவோரின் பதிவு நிறைவடைய வேண்டும்.

தடுப்பூசி வழங்கி மனிதர்களிடம் ஆய்வு செய்து அதன் முடிவுகளை ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் வெளியிடும் வகையில் ரிப்போர்ட் அளிக்க வேண்டும்" என்று கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஆகஸ்ட் 15-ம் தேதி தயாராகிவிடும் என்ற தவறான செய்தி பரவியதையடுத்து, மனித சோதனைக்கான முடிவுகள் மட்டுமே அன்று வெளியாகும் என்று ஐ.சி.எம்.ஆர் விளக்கமளித்துள்ளது. அதன் காரணமாகவே இந்தக் கடிதத்தின் விவரங்களையும் வெளியிட்டுள்ளது. சுதந்திர தினத்தன்று முடிவுகள் கிடைத்தாலும் இரண்டு படிநிலை ஆய்வுகள் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருவதற்கு கூடுதல் நாள்கள் ஆகும் என்றும் ஐ.சி.எம்.ஆர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

vaccine

Also Read: கொரோனா வைரஸ் மீண்டும் மீண்டும் ஒருவரைத் தாக்குமா? #ExpertOpinion

இந்நிலையில், கொரோனோ தடுப்பூசி குறித்த ஆராய்ச்சியில் இவ்வளவு அவசரம் கூடாது. துரித கதியில் தடுப்பூசி ஆராய்ச்சிகளை முடிப்பது சரியான முடிவுகளைத் தராது. முறையான ஆராய்ச்சிகளுக்குப் பிறகே அதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் மத்தியில் கண்டனக் குரல்களும் எழத் தொடங்கியிருக்கின்றன.



source https://www.vikatan.com/government-and-politics/healthy/indian-covid-19-vaccine-human-trial-results-to-be-released-by-august-15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக