Ad

வெள்ளி, 3 ஜூலை, 2020

தேனி:`வனத்துறை செய்வது கொஞ்சம்கூட சரியில்லை!' -கொதிக்கும் மேகமலை விவசாயிகள்

தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதிக்கு உட்பட்ட அரசரடி, பொம்மராஜபுரம், குழிக்காடு, இந்திரா நகர், மஞ்சனூத்து, மேலக்குடிசை ஆகிய மலைக்கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் காய்கறி, பழங்கள் ஆகியவற்றை விளைவித்து தேனி, ஆண்டிபட்டி சந்தைக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு, மலைக்கிராம மக்களின் விளைபொருள்களை சந்தைக்குக் கொண்டுவர, வனத்துறை அனுமதி மறுத்தது. மேலும், கிராமங்களுக்குச் சென்று விளைபொருள்களை ஏற்றிவரும் ஒரே ஒரு வாகனத்திற்கும் மஞ்சனூத்து சோதனைச்சாவடியில் தடை விதித்தது.

இந்த விவகாரம் பெரிதாகி, தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் எதிரொலித்தது. ’விவசாயிகள், வனப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்கின்றனர். அதனால்தான் அனுமதி மறுக்கப்பட்டது’ என விளக்கம் சொன்னது வனத்துறை. கலெக்டர் தலையீட்டின்படி பிரச்னைக்கு தற்காலிகத் தீர்வு காணப்பட்டது. அதன்படி, கிராமங்களுக்கு தினமும் சென்றுகொண்டிருந்த வாகனத்தை வாரத்திற்கு மூன்று நாட்களுக்கு மட்டும் அனுமதிப்பதாக உறுதியளித்தது வனத்துறை.

திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் மட்டும், மலைக் கிராமங்களுக்குச் செல்லும் வாகனம், விளைபொருள்களை ஏற்றிவரும். நிலைமை சீராகச் சென்றுகொண்டிருந்த நேரத்தில், மீண்டும் வனத்துறை பிரச்னை செய்வதாகக் கூறி, மலைக்கிராம மக்கள், கடமலைக்குண்டில் உள்ள மேகமலை ரேஞ்சர் அலுவலகத்தில் திடீர் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர்.

அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை

நம்மிடம் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கண்ணன், “தினமும் சென்று, விளைபொருள்களை ஏற்றிவந்த வாகனத்தைத் தடுத்து பிரச்னை செய்து, வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டும் செல்லலாம் எனக் கூறியது வனத்துறை. அப்போதும் மக்கள் அமைதியாகக் கேட்டுக்கொண்டனர். இப்போது, அதற்கும் விட மாட்டோம் எனக் கூறுவது எந்த விவத்திலும் சரியானது இல்லை. நேற்று, மேகமலை ரேஞ்சர் அலுவலகத்தில் போராட்டம் நடத்திய பின்னர் சமாதானம் பேசினர். இனி, வண்டியைத் தடுக்க மாட்டோம் எனக் கூறினார்கள். ஆனால், அவர்கள் சொன்னதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

Also Read: எழில் கொஞ்சும் மேகமலை படங்கள்!

இது, மக்களின் வாழ்வாதாரப் பிரச்னை. கொரோனா காலகட்டத்தில் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து, இப்போதுதான் விளைபொருள்களை சந்தைப்படுத்தி, அவர்களின் வாழ்க்கை சீராகியுள்ளது. இப்போது பிரச்னை செய்வதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மேலும், 60 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பயன்படுத்திவரும் பாதை அது. அதற்கு, திடீரென கட்டுப்பாடு விதிப்பதும், முற்றிலும் தடை செய்வதும் கண்டிக்கத்தக்கது. மஞ்சனூத்து சோதனைச் சாவடியில் இனி அவர்களின் வாகனத்தை நிறுத்தினால், அனைத்துக் கிராம மக்களையும் திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்” என்றார்.

மேகமலை ரேஞ்சர் அலுவலகத்தில் நடந்த போராட்டம்

Also Read: `மேகமலை சாலை வளைவுகளுக்கு தமிழ் மலர்கள் பெயர்!’ - நெடுஞ்சாலைத்துறைக்கு குவியும் பாராட்டுகள்

வனத்துறை அதிகாரி ஒருவரிடம் இது தொடர்பாகப் பேசியபோது, “இந்திராநகர், அரசரடி பகுதிகளில் வனத்துறைக்குச் சொந்தமான நிலங்களை மக்கள் ஆக்ரமித்து விவசாயம் செய்கிறார்கள். இது போதாது என்று, அந்த விவசாய நிலத்திற்குப் பாதை அமைத்து, அங்கே வாகனத்தையும் கொண்டுசெல்கின்றனர். வனச்சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை நாங்கள் சரியாகச் செய்ய நினைக்கிறோம்” என்றார்.

வனத்துறைக்கும் மலைக்கிராம மக்களுக்கும் விரைவில் மோதல் உருவாகும் சூழலே தற்போது நிலவுகிறது. மாவட்ட நிர்வாகம் இதனை கவனத்தில் எடுத்துக்கொண்டு பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

Also Read: `லேப்டாப்பிலேயே அவ்வளவு ஆபாசப் படங்கள்!' - சுஜி தங்கை புகாரால் சீறும் சிபிசிஐடி



source https://www.vikatan.com/government-and-politics/controversy/megamalai-farmers-protest-against-theni-forest-department-officials

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக