கதிராமங்கலம்:
கதிராமங்கலத்தில், கச்சா எண்ணெய் கொண்டு செல்வதற்கான பழுதடைந்த பழைய குழாய்க்குப் பதிலாக புதிய குழாய் அமைக்கும் பணி ஓ.என்.ஜி.சி சார்பில் நடைபெற்றது. இதை அறிந்து, பணி நடக்கும் இடத்திற்கு அப்பகுதியைச் சேர்ந்த சிலர் சென்றபோது, தடையை மீறி ஒன்றுகூடியதாக 6 பேரை போலீஸார் கைதுசெய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தை விட்டு ஓ.என்.ஜி.சி நிறுவனம் முற்றிலுமாக வெளியேற வேண்டும் என அப்பகுதி மக்கள், போராட்டக் குழு ஒன்றை அமைத்து, கடந்த சில வருடங்களாக தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்திவந்தனர். அவ்வப்போது ஏதேனும் பணிகள் நடைபெற்றாலும் உடனே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியும் வந்தனர்.
கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு வரை போராட்டங்கள் தொடர்ந்துவந்தன. இந்நிலையில், இன்று கதிராமங்கலம் கடை வீதியில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் சார்பில் 160 மீட்டர் நீளத்துக்கு பூமிக்கடியில் பதிக்கப் பட்டுள்ள கச்சா எண்ணை கொண்டுசெல்லும் குழாய் பழுதடைந்ததையொட்டி அதை மாற்றுவதற்காக போலீஸார் பாதுகாப்புடன் ஓ.என்.ஜி.சி ஊழியர்கள் வந்தனர்.
கொரோனா ஊரடங்கில் மக்கள் முடங்கியிருக்கும்போதுகூட இது போன்ற பணிகளைச் செய்கிறார்களே என மக்கள் வேதனையடைந்தனர். அத்துடன் என்ன பணிகள் நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள, கதிராமங்கலம் போராட்டக் குழுவைச் சேர்ந்த ராஜூ, ராஜாராமன், தேவேந்திரன், கஸ்தூரி, கலையரசி, மகேஸ்வரி ஆகிய 6 பேர் பணிகள் நடைபெற்ற இடத்துக்குச் சென்றனர்.
தடையை மீறியதாக கைது:
இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட திருவிடைமருதூர் போலீஸ் டிஎஸ்பி அசோகன் தலைமையிலான போலீஸார், `ஊரடங்கு காலத்தில் தடையை மீறி ஒன்று கூடியதாக’க் கூறி, அந்த ஆறு பேரையும் கைதுசெய்து பந்தநல்லூர் காவல் நிலையத்துக்குக் கொண்டுசென்றனர். இதனால் கதிராமங்கலத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து போராட்டக் குழுவைச் சேர்ந்த ராஜூ என்பவரிடம் பேசினோம், `மக்கள் ஊரடங்கில் இருக்கும் இந்த நேரத்தில் பணிகள் நடைபெறுவதை அறிந்து நாங்க பார்க்கச் சென்றோம். போலீஸார், பழுதடைந்த குழாயை மாற்றும் பணிதான் நடக்கிறது, வீணாக போராட்டம் எனக் கூறி பிரச்னை செய்ய வேண்டாம். ஏற்கெனவே 60 பேர் மீது 20 வழக்குகள் வரை பதியப்பட்டுள்ளன. திரும்பவும் எங்களுக்கு வழக்குப் பதியும் எண்ணம் இல்லை எனக் கூறி, எங்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.
ஓ.என்.ஜி.சி பணிகளுக்கு எதிராக எங்களின் எதிர்ப்பை நாங்க இப்ப இல்ல, எப்பவும் காட்டிக்கொண்டேதான் இருப்போம். ஓ.என்.ஜி.சி முழுமையாக இங்கிருந்து வெளியேர வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம் எனக் கூறினோம். காலை 11 மணியளவில் அழைத்துச்சென்று மாலை ஆறு மணிக்கு விட்டுவிட்டனர். இடையில், மதிய சாப்பாடு வாங்கிக் கொடுப்பதாக போலீஸார் கூறினார்கள்.
Also Read: மண்ணோட வளமும் போச்சு எங்க வாழ்க்கையும் போச்சு - கதறும் கதிராமங்கலம் மக்கள்...
ஓ.என்.ஜி.சி காசுல நீங்க சாப்பாடு வாங்கிக் கொடுப்பீங்க, அந்தக் காசில் வாங்குற சாப்பாட்டை நாங்க சாப்பிட மாட்டோம் என மறுத்தோம். நாங்க எங்க காசுல சாப்பாடு வாங்கித் தர்றோம் நீங்க சாப்பிட வேண்டும் என போலீஸ் சொன்னதையடுத்தே நாங்கள் சாப்பிட்டோம். அதன்பிறகு, தடையை மீறி கூடியதாக வழக்குப் பதிவு செய்த பிறகு எங்களை அனுப்பிவைத்தனர். 3 நாள்களில் இந்தப் பழைய பணி முடிந்துவிடும் என்கிறார்கள்’ என்று தெரிவித்தார்.
source https://www.vikatan.com/news/agriculture/people-protest-against-ongc-police-arrest-6-of-them
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக