Ad

வியாழன், 16 ஜூலை, 2020

`கவரிங் நகைக்காக புகார் கொடுக்கலாமா?' - கொள்ளையடித்த வீட்டில் தாக்குதல் நடத்திய திருடர்கள்

கவரிங், தங்க நகைகள் கொள்ளை

சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம் பச்சையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார் (48). இவர், கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 1-ம் தேதி இரவு செல்வகுமார் வீட்டின் வெளியில் தூங்கிக்கொண்டிருந்துள்ளார். வீட்டுக்குள் மனைவி, மகள் படுத்திருந்தனர். அதிகாலையில் கண்விழித்த செல்வகுமாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. உடனே உள்ளே சென்று அவர் பார்த்தார். மனைவியும் மகளும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர்.

கொள்ளை

பீரோவிலிருந்த 3 சவரன் தங்க நகை மற்றும் கவரிங் நகை, 2 செல்போன்கள் ஆகியவை கொள்ளை போயிருந்தன. இதையடுத்து செல்வகுமார் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார், சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். விசாரணையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் ராஜா (எ) குண்டன் எனத் தெரியவந்தது. ஆனால், வெங்கடேஷ், தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார் தேடிவந்தனர்.

மீண்டும் புகார்

இந்நிலையில் வெங்கடேஷ் ராஜாவின் கூட்டாளிகள் செல்வக்குமாரின் வீட்டில் புகுந்து கற்கள் மற்றும் பாட்டில்களால் செல்வக்குமாரின் மனைவி மீது தாக்குதல் நடத்தினர். மேலும், இதுகுறித்து செல்வகுமார், வெங்கடேஷ் ராஜாவின் கூட்டாளிகள் தங்களை தாக்கியதாக இன்னொரு புகாரை காவல் நிலையத்தில் கொடுத்தார்.

Also Read: ஊரடங்கு நேரத்தில் உலா.. போனுக்கு வந்த எஸ்.எம்.எஸ்! - இ-சலான் மூலம் சிக்கிய திருடர்கள்

கொள்ளை, தாக்குதல் என அடுத்தடுத்த புகார்களில் சிக்கிய வெங்கடேஷ் ராஜா கும்பலை போலீஸார் தேடிவந்தனர். அப்போது அவர் திரிசூலத்தில் உள்ள கல்குவாரியில் பதுங்கி இருக்கும் ரகசிய தகவல் போலீஸாருக்கு கிடைத்தது. அங்கு சென்ற தனிப்படை போலீஸார் வெங்கடேஷ் ராஜா (எ) குண்டன் (22) மற்றும் அவரின் கூட்டாளிகளான தினேஷ்குமார் (எ) கட்டா தினேஷ் (21), பாலகணேஷ் (23) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

குற்ற வழக்குகள்

விசாரணையில் வெங்கடேஷ் ராஜாவும் அவரின் கூட்டாளிகளும் அதிர்ச்சி தகவல் ஒன்றை போலீஸாரிடம் கூறினார். நள்ளிரவில் செல்வக்குமார் வீட்டுக்குள் நுழைந்து கஷ்டப்பட்டு கொள்ளையடித்த நகைகள் அனைத்தும் கவரிங் நகைகள். அதை விற்க முயன்றபோதுதான் எங்களுக்கு தெரிந்தது. கவரிங் நகைகளுக்காக எங்கள் மீது புகாரளித்ததால்தான் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டோம் என்று கூறியுள்ளனர். இதையடுத்து வெங்கடேஷ் ராஜா கூட்டாளிகளிடமிருந்து கவரிங் நகைகள் மீட்கப்பட்டது.

கைதான வெங்கடேஷ், தினேஷ்,பாலகணேஷ்

இதுகுறித்து பல்லாவரம் போலீஸார் கூறுகையில், ``கவரிங் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் கைதான வெங்கடேஷ் ராஜா மற்றும் அவரின் கூட்டாளிகள் மீது ஏற்கெனவே காவல் நிலையத்தில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 15 நாள்களுக்கு முன்புதான் வெங்கடேஷ் ராஜா, சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளார். ஊரடங்கு காரணமாகக் குற்றச் செயல்களில் ஈடுபட முடியாத இந்தக் கும்பல் செல்வகுமார் வீட்டில் கைவரிசை காட்டியுள்ளது. செல்வக்குமாரின் குடும்பத்தினர் தினமும் வீட்டுக்கு வெளியில் தூங்குவதை நோட்டமிட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதான 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளோம்" என்றனர்.

ஒரிஜினல் எங்கே?

இதையடுத்து செல்வகுமாரிடம் பறிமுதல் செய்யப்பட்ட கவரிங் நகைகளை போலீஸார், சட்டப்படி பெற்றுக்கொள்ளும்படி கூறினர். அப்போது, பீரோவில் கவரிங் நகைகளோடு 3 சவரன் தங்க நகையும் மற்றும் வீட்டிலிருந்த 2 செல்போன்களையும் வெங்டேசன்ராஜா கும்பல் திருடியுள்ளதாகச் செல்வகுமார் கூறினார். அதற்கு போலீஸார், கைதானவர்கள் கவரிங் நகைகளை மட்டும்தான் திருடியதாகக் கூறுகிறார்கள் என்று பதிலளித்துள்ளனர். அதனால் செல்வகுமார், மனவேதனையோடு வீடு திரும்பியுள்ளார்.

பல்லாவரம் காவல் நிலையம்

Also Read: `முதல் கொள்ளை சக்ஸஸ்; காட்டிக்கொடுத்த நீல நிறச் சட்டை!’ - குதிரை ரேஸுக்காகத் திருடிய சென்னை இளைஞர்

செல்வக்குமார், கொடுத்த புகாரில் ``நான் 1.7.2020-ல் வீட்டின் வாசலில் கட்டிலில் படுத்திருந்தேன். என் மனைவி, மகள் வீட்டுக்குள் தூங்கினர். 2.7.2020 அதிகாலையில் திடீரென கண் விழித்து பார்த்தபோது வீட்டின் முன் கதவு திறந்திருந்தது. உடனே நான் சந்தேகப்பட்டு உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்த நிலையில் இருந்தது. உள்ளே இருந்த 3 சவரன் தங்க நகைகள், 2 செல்போன்கள் காணவில்லை. எனவே, அதைக் கண்டுபிடித்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார். புகாரின் பேரில் எஸ்.எஸ்.ஐ பாஸ்கரன் ஐபிசி 380 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்.

இந்த வழக்கில் யார் சொல்வது உணமை என போலீஸார்தான் கண்டுபிடிக்கணும்.



source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-3-persons-in-theft-charge

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக