Ad

வியாழன், 16 ஜூலை, 2020

சூர்யா, விஜய் சேதுபதி, சித்தார்த், அரவிந்த்சாமி... மணிரத்னத்தின் `நவரசா'வில் என்ன ஸ்பெஷல்?

தியேட்டர்கள் இல்லாததால் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்கள்தான் சினிமா ரசிகர்களை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. மொழிப்பாகுபாடில்லாமல் எல்லா மொழிப்படங்களையும் மக்கள் பார்க்க, ரசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். வெப்சீரிஸ்கள் வேறு லெவலில் கொண்டாடப்படுகின்றன. இந்த அமோக வரவேற்பால் பாலிவுட்டைப் போலவே தமிழ்நாட்டிலும் முன்னணி நடிகர்களும் முக்கிய இயக்குநர்களும் ஓடிடியில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டனர்.

நெட்ஃபிளிக்ஸ் தயாரிக்கும் ஆந்தாலஜி படத்தை கெளதம் மேனன், வெற்றிமாறன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் இயக்கி முடித்துள்ளனர். இதில் பிரகாஷ்ராஜ், சாய் பல்லவி, காளிதாஸ் ஜெயராம், சாந்தனு, பவானி ஶ்ரீ, கல்கி கோச்லின், அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். ஆணவப்படுகொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் செப்டம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் மணிரத்னம்

இந்நிலையில், அமேசான் ப்ரைம் தளத்துக்கு இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் `நவரசா' என்ற வெப் சீரிஸ் உருவாக இருக்கிறது. நவரசங்கள்தான் மையப்புள்ளி. ஒன்பது ரசங்களையும் ஒன்பது இயக்குநர்கள் இயக்குகிறார்கள். மணிரத்னம், கெளதம் மேனன், பிஜாய் நம்பியார், கார்த்திக் நரேன், கே.வி.ஆனந்த், சுதா கொங்கரா, `180' படத்தை இயக்கிய ஜெயேந்திரா, சித்தார்த், அரவிந்த்சாமி ஆகியோர்தான் அந்த ஒன்பது இயக்குநர்கள். சித்தார்த், அரவிந்த்சாமி ஆகியோர் இதில் முதல்முறையாக இயக்குநர்களாக அறிமுகமாகிறார்கள்.

இதில் பிஜாய் நம்பியார் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதியும், ஜெயேந்திரா இயக்கும் பகுதியில் சூர்யாவும் நடிக்கின்றனர். `பொன்னியின் செல்வன்' படத்தில் பயங்கர பிஸியாக இருந்த இயக்குநர் மணிரத்னம், இந்த லாக் டெளனில் வெவ்வேறு புராஜெக்ட்களில் இறங்கியிருக்கிறார். அதில் ஒன்றுதான் `நவரசா'. இதில் கெளதம் மேனனின் படத்துக்கு பி.சி.ஶ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.

அமேசான் ப்ரைம் வீடியோ

நெட்ஃபிளிக்ஸ், அமேசான் மாதிரியான ஓடிடி நிறுவனங்கள் தயாரிக்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸைப் பற்றிய எல்லா தகவல்களையும் அந்த நிறுவனம்தான் அதிகாரபூர்வமாக அறிவிக்கும். அதுவரை அதில் பணியாற்றும் யாரும் வெளியே எந்தத் தகவலையும் சொல்லக் கூடாது என்பது முக்கியமான விதிமுறை. இன்னும் ஒரு வாரத்தில் `நவரசா' வெப் சீரிஸ் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பில்தான் எந்தெந்த இயக்குநர்கள் எந்தெந்த பகுதியை இயக்கவிருக்கிறார்கள், அதில் நடிக்கும் நடிகர்கள், பணிபுரியும் டெக்னீஷியன்கள் பற்றிய முழு விவரமும் இருக்கும்.

இந்த `நவசா'வை இயக்கப்போகும் எல்லா இயக்குநர்களுமே வெவ்வேறு பட வேலைகளில் பிஸியாக இருப்பவர்கள். மணிரத்னத்துக்கு `பொன்னியின் செல்வன்', கெளதம் மேனனுக்கு `துருவநட்சத்திரம்', `ஜோஷ்வா இமை போல் காக்க' பட வேலைகள் இருக்கின்றன. இதுதவிர, அவர் எழுதிக்கொண்டிருக்கும் `வேட்டையாடு விளையாடு - 2', `விண்ணைத்தாண்டி வருவாயா - 2' ஆகியவை இருக்கின்றன. தனுஷ் பட வேலைகளில் இருக்கிறார் கார்த்திக் நரேன். சுதா கொங்கராவுக்கு `சூரரைப் போற்று' ரிலீஸ், நெட்ஃபிளிக்ஸ் தயாரிக்கும் ஆந்தாலஜி படம், அஜித் படம் ஆகியவை இருக்கின்றன. `காப்பான்' படத்தை முடித்த கே.வி.ஆனந்த், அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் இருக்கிறார். சித்தார்த்துக்கு `இந்தியன் 2' ஷூட்டிங், `டக்கர்' பட ரிலீஸ் ஆகியவை இருக்கின்றன. அரவிந்த்சாமிக்கு `கள்ளபார்ட்', `புலனாய்வு', `தலைவி' உள்ளிட்ட படங்கள் இருக்கின்றன.

ஓடிடிக்கு தங்களை மாற்றிக்கொண்ட மக்களுக்கு நெட்ஃபிளிக்ஸ் தயாரிக்கும் ஆந்தாலஜி படமும், மணிரத்னம் இயக்கத்தில் அமேசான் ப்ரைமுக்காக உருவாகும் `நவரசா'வும் நிச்சயம் செம ட்ரீட்டாக இருக்கும்.



source https://cinema.vikatan.com/tamil-cinema/directors-who-are-part-of-the-mani-ratnams-navarasa-project

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக