Ad

வியாழன், 9 ஜூலை, 2020

தஞ்சை: ஆற்றுக்கு நடுவே பெரிய பள்ளங்கள்! - சிறுமியின் உயிரைப் பறித்த அரசு மணல் குவாரி

தஞ்சாவூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள அரசு மணல் குவாரியில் மணல் எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கி நீரில் மூழ்கி 10 வயதுச் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி மாலினி

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள ரெங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அம்பிகா. இவரின் கணவர் ரவிச்சந்திரன். இவர்களுக்கு தர்ஷினி, மாலினி (10), ஹரிணி (8) என மூன்று மகள்கள் உள்ளனர். ரவிச்சந்திரன் இறந்துவிட்ட நிலையில் அம்பிகா, மூன்று மகள்களையும் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா பரவுவதைத் தடுப்பதற்காகப் பள்ளிகள் இன்னும் திறக்கப்படாததால் அம்பிகா, தன் இரண்டு மகள்களை தன் அம்மாவின் ஊரான திருச்செனம் பூண்டியில் கொண்டு வந்துவிட்டுள்ளார்.

Also Read: Corona Live Updates: `ஒரே நாளில் 4 ஆயிரத்தை கடந்த பாதிப்பு’ - தமிழக கொரோனா நிலவரம்

இதையடுத்து கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் இரண்டாவது மகள் மாலினியும் அவரின் தங்கை ஹரிணியும் குளிக்கச் சென்றனர். மணல் ஏற்றிச் செல்வதற்காக ஆற்றுக்குள் சாலை போடப்பட்டுள்ளது. அத்துடன் தண்ணீர் செல்வதற்காக சாலையின் கீழ்ப்பகுதியில் பெரிய குழாய்களும் வைக்கப்பட்டுள்ளன.

ஆற்றுக்குள் பள்ளத்தை காட்டும் ராஜேந்திரன்

இதைத் தண்ணீர் கடந்து செல்லும்போது பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் மணல் எடுக்கப்பட்டதாலும் பள்ளம் இருந்துள்ளது. இதை அறியாத அந்தச் சிறுமி வழக்கம்போல் குளித்துள்ளார். இதில் தண்ணீருக்குள் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து முன்னாள் ஒன்றிய கவுன்சிலரான திருச்செனம்பூண்டியைச் சேர்ந்த ராஜேந்திரனிடம் பேசினோம். ``கல்லணையிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருச்செனம்பூண்டி கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக மணல் எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே இதே பகுதியில் இரண்டு முறை அரசு மணல் குவாரி அமைத்து மணல் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஆற்றுக்கு நடுவே பெரிய பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. ஒரு ஆள் நின்றாலே மூழ்கும் அளவுக்கு அந்தப் பள்ளங்கள் காணப்படுகின்றன.

அரசு மணல் குவாரி

இந்நிலையில், தற்போது மூன்றாவது முறையாக அரசு அந்தப் பகுதியில் மணல் குவாரி அமைத்துள்ளது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதுடன் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து வருகிறது. உடனே இதைத் திரும்பப் பெற வேண்டும் என இரண்டு வாரங்களுக்கு முன் ஆற்றுக்குள் இறங்கிப் போராடினோம். ஆனால், இதை நிறுத்துவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து ஆற்றிலிருந்து எடுக்கப்படும் மணலை லாரிகளில் ஏற்றிக்கொண்டு செல்வதற்காக ஆற்றுக்கு நடுவே தற்காலிகமாக சாலை அமைத்துள்ளனர்.

Also Read: `ப்ளீஸ் எங்க ஊரில் மணல் குவாரி அமைக்காதீங்க!’ - அரசுக்குக் கோரிக்கை வைக்கும் குழந்தைகள்

தண்ணீர் கடந்து செல்வதற்காக சாலைக்குக் கீழ்பகுதியில் குழாய்களையும் வைத்துள்ளனர். கொள்ளிடம் ஆற்றிலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்துக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தின்கீழ் குடிநீர் செல்கிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள பம்பிங் ஸ்டேஷன் அருகிலேயே நேற்று மணலை எடுத்துச் செல்வதற்கான சாலையை அவசர அவசரமாக அமைத்தனர்.

மணல் குவாரிக்கான சாலை

குழாய்களைக் கடந்து தண்ணீர் வேகமாக வந்து கொட்டும்போது பள்ளம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் மணல் குவாரியாலும் ஏற்கெனவே பள்ளம் இருந்தது. இதை அறியாத அந்தச் சிறுமி இன்று மாலை தன் தங்கையுடன் சென்று அந்த இடத்தில் குளித்துள்ளார். அப்போது அந்தப் பள்ளத்தில் சிக்கி நீரில் மூழ்கி இறந்துவிட்டார்.

இதைப் பார்த்த அந்தச் சிறுமியின் தங்கையான ஹரிணி பெரும் குரலெடுத்து கதறினாள். இதை அறிந்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக மாலினியை மீட்டனர். ஆனால், அதற்குள் அவள் மூச்சு நின்றிருந்தது. இதுகுறித்து அவரின் தாயார் அம்பிகா, தோகூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கொள்ளிடம் ஆறு

மணல் குவாரியால் ஏற்பட்ட பள்ளத்தினால் அநியாயமாக ஒரு பிஞ்சின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவம் எங்கள் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் அரசு மணல் குவாரியால்தான் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இதற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இது தொடர்பாகப் போராட்டமும் நடத்த இருக்கிறோம்" என்றார் கொதிப்புடன்.



source https://www.vikatan.com/news/death/10-year-old-girl-died-due-to-tn-government-sand-quarry

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக