Ad

வியாழன், 9 ஜூலை, 2020

சென்னை: `மனைவி சரியாகச் சாப்பாடு போடுவதில்லை!' - முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

வெடிகுண்டு மிரட்டல்

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை 4.45 மணியளவில் ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய ஆண் குரல், `இன்னும் சற்று நேரத்தில் முதல்வர் வீட்டில் வெடி குண்டு வெடிக்கப்போகிறது' என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார். உடனே உஷாரான போலீஸாரும் வெடிகுண்டு நிபுணர்களும் சென்னை அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு சிக்கவில்லை. அதனால் வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு புரளி என்று தெரிந்ததும் போலீஸாரும் வெடிகுண்டு நிபுணர்களும் நிம்மதியடைந்தனர்.

ஆடியோ

பின்னர் வெடிகுண்டு மிரட்டல் வந்த போன் நம்பரை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது அது செல்போன் நம்பர் எனத் தெரியவந்தது. மேலும், அதுதொடர்பாக விசாரித்தபோது வினோத்குமார் (33), சேலையூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் எனத் தெரிந்தது. இதையடுத்து சேலையூர் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் வினோத்குமாரிடம் விசாரித்தனர். அப்போது அவர், நான் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கவில்லை என்று கூறினார். அப்போது போலீஸார் காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கு இந்தச் செல்போன் நம்பரிலிருந்து நேற்று மாலை 3 தடவை அழைப்பு வந்துள்ளதற்கான ஆதாரத்தைக் காண்பித்தனர்.

Also Read: கோவை: 24 மணி நேரத்தில் புதிதாக 98 பேருக்கு கொரோனா பாதிப்பு; 6 பேர் பலி

ஆட்டோ டிரைவர்

அதன்பிறகே ஆட்டோ டிரைவர் வினோத்குமார் மிரட்டல் விடுத்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து போலீஸார் அவரை சேலையூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், `ஊரடங்கு காலகட்டத்தில் வேலை இல்லை. அதனால் வருமானமின்றி சிரமப்பட்டு வருகிறேன். இதன்காரணமாக மனைவி சாப்பாடுகூட சரியாகத் தருவதில்லை. அதனால்தான் மனைவியை போலீஸிடம் சிக்க வைக் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தேன்' என்று கூறியுள்ளார். வினோத்குமார் அளித்த தகவலின்படி அவரை போலீஸார் கைது செய்தனர்.

காவல் கட்டுப்பாட்டு அறை

Also Read: `மனைவி வைத்த செய்வினைதான் காரணம்!' -அறிவாலயத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த போதை இளைஞர்

இதுகுறித்து சேலையூர் போலீஸார் கூறுகையில், ``மனைவியை பழிவாங்க வேண்டும் என்று கருதிய வினோத்குமார், மனைவிக்குத் தெரியாமல் அவரின் செல்போனிலிருந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் எதுவும் நடக்காதுபோல வீட்டில் இருந்துள்ளார். வினோத்குமாரின் மனைவியிடம் விசாரித்தபோதுதான் அவர் ஏற்கெனவே 2019-ம் ஆண்டு முதல்வர் வீட்டுக்கு வினோத்குமார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவரத்தைக் கூறினார்" என்றனர்.



source https://www.vikatan.com/social-affairs/crime/chennai-police-arrested-auto-driver-for-bomb-threatening-charge

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக