வெளிநாட்டில் இருந்துகொண்டு, உள்ளூர் பெண்களை ஆபாசப் படம் பிடித்து, மிரட்டிப் பணம் பறித்துவந்த கீழக்கரை பகுதி கும்பலை ராமநாதபுரம் போலீஸார் கைதுசெய்தனர். இதுதொடர்பாக மேலும் சிலர் தேடப்பட்டுவரும் நிலையில், தொடர்ந்து வரும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் போலியான முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களின் மூலம் பெண்களை ஆபாசமாகப் படம் எடுத்தும், மார்ஃபிங் செய்யப்பட்ட படங்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டியும் வரும் கும்பல்கள், தொடர்ச்சியாக சிக்கிவருகின்றன.
உச்சிப்புளி, ராமநாதபுரம், பரமக்குடி என அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த அதிர்ச்சி சம்பவங்களில் தொடர்புடையவர்கள் குறித்த புகார்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாரின் பிரத்யேக எண்ணில் பதிவானதைத் தொடர்ந்து, அந்த கும்பல்களைச் சேர்ந்தவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
மாவட்ட கண்காணிப்பாளருக்கு பறந்த புகார்!
இந்நிலையில், கீழக்கரை பகுதியைச் சேர்ந்த திருமணம் ஆன பெண் ஒருவர், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பிரத்யேக எண்ணைத் தொடர்புகொண்டு, இன்ஸ்டாகிராம் செயலி மூலம் மோசடி கும்பல் ஒன்று, பெண்களை நண்பர்களாக்கி, அவர்களது புகைப்படங்களை ஆபாசமாக மார்ஃபிங் செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டுவதாகக் குறிப்பிட்டிருந்தார். அப்பெண்களைக் கட்டாயப்படுத்தி, வீடியோ காலில் நிர்வாணமான நிலையில் பேசும்படி மிரட்டிப் பதிவுசெய்து கொண்டு, அதை வெளியிட்டுவிடுவதாகக் கூறி பணம் பறிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்று தன்னை மிரட்டி 7.50 லட்ச ரூபாயை வங்கிக் கணக்குகள் மூலம் அபகரித்துக்கொண்டதாகவும், தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வருவதாகவும் புகாரளித்தார்.
இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சைபர் கிரைம் போலீஸார் சம்பந்தப்பட்ட கும்பலின் சமூக வலைதளங்கள், வங்கிக் கணக்குகள், இணையதள வங்கி பரிவர்த்தனைகள் ஆகியவற்றைக் கண்காணித்தனர்.
இதில், ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பயின்று வரும் கீழக்கரையைச் சேர்ந்த முகம்மது முகைதீன் என்பவரது தலைமையிலான கும்பல், இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. முகம்மது முகைதீன், பல பெண்களிடம் இதுபோன்று பணம் பறித்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்ததுடன், தமிழகத்தைச் சேர்ந்த தனது நண்பர்களுக்குப் பணம் கொடுத்து, அவர்களது வங்கிக் கணக்குகள் மூலம் பெண்களிடம் இருந்து அபகரிக்கப்படும் பணத்தை தன் கணக்குக்கு மாற்றியதும் கண்டறியப்பட்டது.
Also Read: காசி வழக்கு: மெமரிகார்டு, ஹார்ட் டிஸ்க் ஆவணங்கள் அழிப்பு! சிபிசிஐடி வளையத்தில் தந்தை
சிக்கிய கும்பல்...!
தொடர் விசாரணையில், கீழக்கரையை சேர்ந்த முகம்மது முகைதீன், புதுச்சேரி முகம்மது இப்ராஹீம் நூர், சென்னை பாசித் அலி, திருநெல்வேலி ஜாசம் கனி, கீழக்கரை பார்டு பைசல், நாகப்பட்டினம் முகம்மது ஜாசிம் ஆகியோர், இன்ஸ்டாகிராமில் கணக்குகள் தொடங்கி, அதன்மூலம் நண்பர்களாகும் பெண்களின் படங்களை மார்ஃபிங் செய்தும், அதைக் காட்டி மிரட்டிப் பணம் பறித்துவந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட கீழக்கரையைச் சேர்ந்த பெண்ணின் உறவினர் கொடுத்த புகாரின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து திருநெல்வேலியைச் சேர்ந்த ஜாசம் கனி, கீழக்கரையைச் சேர்ந்த பார்டு பைசல் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்றுவரும் இதுபோன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து, பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறையின் பிரத்யேக எண்ணில் தைரியமாகப் புகார் அளிக்க வேண்டும் எனவும், இதன்மூலம் இதுபோன்ற சமூக விரோத கும்பல்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தெரிவித்துள்ளார்.
source https://www.vikatan.com/social-affairs/crime/2-persons-were-arrested-for-cyber-crime-charge-at-ramanathapuram
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக