Ad

புதன், 15 ஜூலை, 2020

கோவை: பரிசோதனை முடிவு; மறைக்கப்படும் தகவல்கள்! - பதற்றத்தில் போலீஸ், பொதுமக்கள்

தமிழகத்தில் சென்னையைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது. முக்கியமாக, கோவையில் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாள்களில் மட்டும் கோவை மாவட்டத்தில் 292 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கோவையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,591 ஆக உயர்ந்துள்ளது.

கோவை

Also Read: கோவை அதிர்ச்சி: செல்வபுரம் பகுதியில், ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா!

இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். ஏற்கெனவே, கோவை தெற்கு தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுனன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். தற்போது அரசு அலுவலர்களும் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் இராசாமணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, ஓர் தனியார் மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகிறார். அதேபோல, மதுக்கரை காவல்நிலையத்தில் 8 போலீஸாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, கோவையில் பரிசோதனை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

கோவை

மதுக்கரை காவல்நிலையத்தில் போலீஸாருக்கு, கடந்த 7-ம் தேதியே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் முடிவுகள் கிட்டத்தட்ட 7 நாள்களுக்குப் பிறகு நேற்றுதான் வெளியிட்டப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

“தற்போது, பாசிட்டிவானவர்கள் அனைவரும் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டவர்கள். ஒரு வாரகாலமாக அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்திருப்பார்கள். ஏராளமான பொதுமக்களும் மதுக்கரை காவல்நிலையம் மற்றும் அந்தச் சுற்றுவட்டார பகுதிகளுக்கு சென்றிருப்பார்கள். எங்களுக்குப் பயமாக இருக்கிறது.

கோவை

சோதனை முடிவுகளை விரைவாக வெளியிட்டு, சிகிச்சையைத் தொடங்குவதன் மூலம், மற்றவர்களுக்கு கொரோனா பரவுவதை ஓரளவு தடுக்க முடியும். எனவே, சோதனை முடிவுகளை அடுத்த நாளே வெளியிட வேண்டும்” என்று மதுக்கரை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

``கோவையில் ஒருவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றாலும், அவர்கள் குடும்பத்தினர் மற்றும் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்து, 4 நாள்களுக்கு மேலானாலும் முடிவுகள் வருவதில்லை. விபரம் தெரியாமல் சிலர் காய்ச்சலுடன் வீடுகளில் அடைந்து கிடக்கின்றனர்.

கோவை

பரிசோதனை முடிவுகள் தாமதமாவதால் அவர்களின் உடல்நிலை பாதிக்கப்படுவதுடன், மற்றவர்களுக்கும் நோய் பரவும் அபாயம் உள்ளது. அதனால், அதிகாரிகள் தயவு கூர்ந்து பரிசோதனை முடிவுகளை விரைவாக வெளியிட வேண்டும்” என்கின்றனர் கோவை மக்கள்.

கோவையில் 60 வயதுப் பெண் ஒருவருக்கு கடந்த 11-ம் தேதி கொரோனா உறுதி செய்யப்படுகிறது. ஆனால், அவர் 13-ம் தேதிதான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அடுத்த நாள், அதாவது 14-ம் தேதி காலை அந்தப் பெண் உயிரிழந்துவிட்டார். அந்தப் பெண்ணை ஒருநாள் தாமதமாக அனுமதித்ததும், அவர் உடல்நிலை மோசமடைய காரணமாகியிருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். கோவையில், பகுதிவாரியாக ஊடகங்களுக்கு வழங்கப்பட்டு வந்த கொரோனா பாதிப்பு தகவல்கள், கடந்த சில நாள்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.

கோவை

“இனி, சென்னையில் இருந்து வழங்கப்படும் தகவல்கள்தான் அதிகாரபூர்வமானது” என்று சொல்லப்பட்டது. ஊடகங்கள் பலமுறை கேட்டும், கடந்த சில நாள்களாக அதிகாரிகள் தகவல் வழங்குவதில்லை. இதனால், உண்மை நிலவரம் மறைக்கப்படுகிறதோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து, விளக்கம் கேட்க சுகாதாரத்துறை அதிகாரிகளும், நமக்கு விளக்கமளிக்க முன்வரவில்லை.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/corona-test-controversy-in-coimbatore

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக