Ad

வெள்ளி, 17 ஜூலை, 2020

புதுக்கோட்டை: `கொரோனாவில் இருந்து மீண்டாலும்!' - அலர்ட் கொடுத்த அரசு அதிகாரியின் உடல்நிலை

புதுக்கோட்டை மாவட்ட கருவூலத்தில் அலுவலக மேலாளராக 58 வயதான நபர் ஒருவர் பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஜூன் 30-ம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜூலை 1-ம் தேதி ராணியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்ட மூன்று நாள்கள் காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் இருந்ததால், நிமிடத்துக்கு 12 லிட்டர் ஆக்சிஜன் கொடுத்துள்ளனர். ஆனாலும், ஆக்சிஜன் செறிவு 75 சதவீதம் என்ற நிலைக்குச் சென்றது. பின்னர், நோயாளியைக் குப்புறப்படுக்க வைத்த நிலையில் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது.

கொரோனா

வைரஸ் தொற்று எதிர்ப்பு மருந்துகளும் கொடுக்கப்பட்டன. யோகா போன்ற பயிற்சிகளும் கொடுத்துப் பார்த்துள்ளனர். இதன் காரணமாக, உடலில் முன்னேற்றம் ஏற்பட்டதால், 9-ம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இல்லை என்று முடிவு வந்தது. டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனாவால், அவரது நுரையீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதித்துக் கூடுதலாக 8 நாள்கள் தொடர் சிகிச்சை அளித்தனர். தற்போது கொரோனாவுக்கு முன், பின் என 17 நாள்களுக்குப் பிறகு நோயாளி குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

இதுபற்றி டீன் மீனாட்சி சுந்தரம் கூறும்போது, "கொரோனா தொற்று இல்லை என்ற முடிவு வந்தபோதிலும், கொரோனா தொற்றின் பின்விளைவு காரணமாக, நோயாளியின் இரண்டு நுரையீரல்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன. கொரோனா இல்லை என்று அவரை அனுப்பிவிட முடியாது.

நோயாளியை மீட்ட மருத்துவர்கள்

அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு நாளைக்கு 6 ஆக்சிஜன் சிலிண்டர்கள் என 6 நாள்களுக்கு 36 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மூலம் அவருக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டுள்ளது. 1 லட்சம் மதிப்பிலான தடுப்பு மருந்துகளும் அவருக்குச் செலுத்தியுள்ளோம்.

தற்போது நோயாளி நலமுடன் உள்ளார். கொரோனாவில் இருந்து மீண்டாலும், பின் விளைவுகள் குறித்துக் கண்டறிவது மிகவும் முக்கியமானது. கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளித்து வருகிறோம். ஆக்சிஜன் அதிக அளவு தேவை இருக்கிறது. விரைவில் ராணியார் மருத்துவமனையில், திரவ வடிவ ஆக்சிஜன் கிடங்குகள் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/pudukkottai-government-officer-suffered-due-to-corona-disease

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக