Ad

வெள்ளி, 17 ஜூலை, 2020

கரூர்: `சாதாரணமா ஆரம்பிச்சேன்.. அமர்க்களமா போகுது!' -ஆசிரியையின் `30 நாள் சேலஞ்ச்’

அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் அறிவித்துள்ள, 'காய்கறிகள், கீரை விதைகளை விதைத்து, நன்றாக வளர்க்கும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பரிசு' என்ற 30 நாள் சேலஞ்ச் போட்டி, இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றிருக்கிறது.

30 நாள் சேலஞ்சில் மாணவி

இன்று நம் எல்லோரையும் ஆண்ட்ராய்டு மொபைலும், அதன்மூலமான சமூகவலைதளங்களின் பயன்பாடும் ஆக்ரமித்துள்ளன. அதிக நேரம் அதில்தான் செலவிடுகிறோம். இந்த நிலையில், சமூகவலைதளங்கள் மூலம், 'பழைய போட்டோக்களை போடும் சேலஞ்ச், கருப்பு - வெள்ளை போட்டோ போடும் சேலஞ்ச், ஐஸ்கட்டி போடப்பட்ட குளிர்ந்த நீரில் குளிக்கும் சேலஞ்ச்' என்று ஒன்றுக்கும் பல சேலஞ்ச்களை அறிவித்து, அதை டிரெண்டாக்கி வருகிறார்கள்.

30 நாள் சேலஞ்சில் மாணவி

இந்த நிலையில், கரூர் மாவட்டம், குளித்தலையைச் சேர்ந்த பிருந்தா என்ற அரசுப் பள்ளி ஆசிரியை, சமூகவலைதளங்கள் மூலம் பயன்தரும் வகையில், மாடித்தோட்டம் அல்லது வீட்டுத்தோட்டம் அமைப்பது குறித்த 30 நாள் சேலஞ்சை அறிவித்து அசத்தியிருக்கிறார்.

Also Read: `ஒண்ணேகால் ஏக்கர் நிலம்; 300 பழ மரங்கள்!' -விதை பரவலுக்காக `உணவுக்காடு’ அமைக்கும் இன்ஜினீயர் இளைஞர்

குளித்தலை ஒன்றியத்தில் உள்ள மேலக்குட்டப்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார், பிருந்தா. தனது பள்ளியில் மாணவர்களை வைத்து, காய்கறித் தோட்டத்தை அமைத்திருக்கிறார். அதோடு, கொரோனா லாக்டவுனில் வீட்டில் முடங்கும் சூழல் ஏற்பட, தனது மாடியில் காய்கறித் தோட்டத்தை அமைத்திருக்கிறார். அதன்மூலம், தன் மகன்கள் இருவரையும், இயற்கை விவசாயிகளாக மாற்றியிருக்கிறார்.

விதை விதைக்கும் சிறுவன்

இதற்காக, 'மாடித்தோட்டம் பிருந்தா' என்ற யூடியூப் சேனலை ஆரம்பித்து, தனது மாடித்தோட்டத்தில் குடும்பத்தோடு தினமும் இயங்கி வருவதை வீடியோ எடுத்து, அந்தச் சேனலில் வெளியிட்டு வருகிறார். இந்தநிலையில்தான், மற்றவர்களையும் இயற்கை விவசாயிகளாக மாற்றும் பொருட்டு, இந்த '30 நாள் சேலஞ்ச்' போட்டியை அறிவித்து, ஒரு நல்ல மாற்றத்துக்கான விதையை ஊன்றியிருக்கிறார்.

ஆசிரியை பிருந்தாவிடம் பேசினோம்.

"எல்லா மாணவர்களும் ஊரடங்கு, ஆன்லைன் கிளாஸ், டேப், செல், டிவினு சந்திரமண்டலத்துல மாட்டிக்கிட்ட ஆளுங்கமாதிரி ஆயிட்டாங்க. அதனால், அவர்களின் கவனத்தை இயற்கை விவசாயம் பக்கம் திருப்பலாம்னு தோணுச்சு. அதற்காகதான், இந்த 30 நாள் சேலஞ்சை அறிவித்தேன். ஜூலை 16 முதல் ஆகஸ்ட் 15 வரை இந்த சேலஞ்ச். மாடித்தோட்டம் அல்லது வீட்டுத்தோட்டம் அமைத்து, அதில் விதை ஊன்றி, 5- ல் இருந்து 10 செடிகளை வளர்க்க வேண்டும். குறிப்பாக, காய்கறி அல்லது கீரை விதைகளை மட்டுமே வளர்க்க வேண்டும். மாணவர்களும் வைக்கலாம், பெற்றோர்களும் வளர்க்கலாம். விதை விதைத்ததிலிருந்து புகைப்படங்கள் அனுப்ப வேண்டும்.

தனது மாடித்தோட்டத்தில் பிருந்தா

கண்டிப்பாக, இயற்கை முறையில்தான் செடிகளை வளர்க்க வேண்டும். ஏற்கனவே, தோட்டம் வைத்து இருந்தால், அந்தத் தோட்டத்தில் புதிதாக வைத்த செடிகளை மட்டுமே போட்டோ அனுப்ப வேண்டும். அதையும் இயற்கை விவசாயம் முறையில்தான் வளர்க்கணும். மேலே குறிப்பிட்ட நாள்களில் தான் விவசாயம் செய்தது என அனுப்பும் புகைப்படங்களில் உறுதிப்படுத்த வேண்டும். தோட்டத்தில் குழந்தைகளை வைத்து, அவர்களுக்கு விவசாயம் பற்றி கற்றுக்கொடுத்து, தோட்டம் அமைத்து இருந்தால், சிறப்பு பரிசு வழங்கப்படும்.

சேலஞ்சின் கடைசி நாளில், தோட்டத்தின் வீடியோ 2 நிமிடங்களுக்குள் இருக்குமாறு எடுத்து அனுப்ப வேண்டும். இந்த சேலஞ்ச் போட்டோ, வீடியோக்களை வைத்து, சிறந்த பரிசாக தோட்டத்திற்கு தேவையான நாட்டு ரக விதைகள் மற்றும் செடிகள் வளர்க்க பயன்படும் குரோ பேக் அல்லது விதை பென்சில்கள் (குழந்தைகளின் போட்டோ போட்டு) வழங்கப்படும். மொத்தம், மூன்று நபருக்கு பரிசுகள் வழங்கப்படும். தவிர, சிறப்பு பரிசாக குழந்தைகள் வைத்து தோட்டம் போடும், 2 நபருக்கு சிறப்புப் பரிசு வழங்கப்படும். இதுதான் 30 நாள் மாடித்தோட்ட சேலஞ்சின் ரூல்ஸ்.

30 நாள் சேலஞ்சில் மாணவி

இந்த அறிவிப்பை வாட்ஸ்ஆப் குரூப்புகள், எனது யூடியூப் சேனல், ஃபேஸ்புக் பக்கங்கள் என சமூகவலைதளங்கள் மூலமாக நான்கு நாள்களுக்கு முன்புதான் வெளியிட்டேன். கோயமுத்தூர், திருப்பூர், காங்கேயம், சென்னை, கரூர்னு 100 பேர் இதுவரை போட்டிகளில் கலந்துகொண்டு, போட்டோக்களை அனுப்பியிருக்காங்க. சாதாரணமாக நினைச்சு ஆரம்பிச்ச முயற்சி, ஆரம்பமே அமர்க்களமா தொடங்கியிருக்கு. நவீன சாதனங்களோடு பழகிபழகி நாம ரோபோ மாதிரி ஆவதை தடுக்கவும், உடல்நலனுக்கு பயன்தரக்கூடிய இயற்கை காய்கறிகளை பயிரிடும் ஆர்வத்தை மாணவர்களிடம் தூண்டவும்தான் இந்த முயற்சி. இது, நல்ல பலனைப் பெற்றுத் தரும்" என்றார் உறுதியாக!



source https://www.vikatan.com/news/agriculture/kulithalai-teacher-announcement-30-days-challenge-for-organic-vegetables-garden

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக