கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு நாடுகள் தூதரகத்துக்கு வந்த பார்சல் வழியாகக் கடத்தப்பட்ட 30 கிலோ தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவத்தின் பின்னணி குறித்து தினமும் புதிய தகவல்கள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பிவருகிறது. அந்தப் பார்சலை பெற்றுக்கொள்வதற்காகத் தூதரக கடிதத்துடன் வந்த ஸரித் கைது செய்யப்பட்டதுடன் போலீஸ் கஷ்டடியில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தங்கம் வந்த பார்சலை விடுவிப்பதற்காகப் போன் செய்த ஸ்வப்னா சுரேஷ் தலைமறைவாக உள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயனின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்பேஸ் பார்க் நிறுவனத்தில் பணி செய்துவந்தார் ஸ்வப்னா. ஸ்வப்னா சுரேஷுடன் தொடர்பில் இருந்ததாக பினராயி விஜயனின் செயலாளர் சிவசங்கரன் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஸ்வப்னா சுரேஷுக்கும் முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் தலைமறைவாக உள்ள ஸ்வப்னா சுரேஷ் கண்ணீர்மல்க பேசும் ஆடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஸ்வப்னா சுரேஷ் வெளியிட்டுள்ள ஆடியோவில் அவர் கூறுகையில், "யு.ஏ.இ தூதரகத்துக்கு வந்த பார்சல் கிடைப்பதில் தாமதம் ஆகிறது. எனவே, அதுபற்றி கார்கோவில் பேசும்படி தூதரகத்தில் இருந்து என்னிடம் சொன்னார்கள். அந்தப் பார்சலை விரைந்து விடுவிக்கும்படி கார்கோ ஏ.சி ராமமூர்த்தியிடம் போனில் பேசினேன்.
'ஐ வில் டேக் இட் மேடம்' எனக்கூறி போன் தொடர்பைத் துண்டித்தார் ராமமூர்த்தி. இதுமட்டும்தான் நான் செய்த தவறு. எனக்கும் அந்தப் பார்சலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதன்பிறகு நடந்த எந்த நிகழ்வுகளுக்கும் நான் சாட்சி அல்ல. தூதரகத்தில் நான் பணி செய்ததால் கேரள முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள், அரசியல் பிரமுகர்களிடம் நான் பேசியிருக்கிறேன். யு.ஏ.இ கான்சிலேட்டர் ஜெனரலின் நிர்வாகப் பணி நிமித்தமாகத்தான் வி.ஐ.பி-க்களை சந்தித்து பேசியிருக்கிறேன். தூதரக பணிக்காக அல்லாமல் என் சொந்த அவசியத்துக்காக நான் யாரிடமும் பேசியது இல்லை.
Also Read: கேரளம்: `தூதரகம் பெயரில் கடத்தல்; ரூ.15 கோடி தங்கம்!’- அதிரவைத்த ஐ.டி அதிகாரி ஸ்வப்னா
வேலை கிடைக்காத தம்பி, விதவையான அம்மா, இரண்டு சிறிய குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். முதல்வர் அலுவலகத்திலோ, சபாநாயகர், அமைச்சர்கள் அலுவலகத்துக்கோ சென்று ஒப்பந்தங்களில் நான் கையெழுத்துப் போட்டதில்லை. யு.ஏ.இ செயலாளர் என்ற முறையில்தான் நான் முதல்வர், அமைச்சர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் உடன் இருந்தேன். தூதரகத்தில் நான் எந்தத் தவறும் செய்யவில்லை, அங்கிருந்து நான் பணி நீக்கம் செய்யப்படவும் இல்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை தூதரகத்துக்குத் தேவையான உதவிகளை நான் செய்துவந்தேன். ஸ்பேஸ் பார்க்கில் ஊழியராக இருந்துகொண்டு யு.ஏ.இ தூதரக விஷயத்தில் ஏன் தலையிடுகிறேன் என நீங்கள் கேட்கலாம். யு.ஏ.இ-யில் பிறந்து வளர்ந்த எனது அன்புதான் அதற்கு காரணம். யு.ஏ.இ என்றால் எனக்கு உயிர். எனவே யு.ஏ.இ-க்கு எதிராக சதிசெய்ய நான் நினைக்க மாட்டேன்.
வரும் தேர்தலைக் கருத்தில் கொண்டு மீடியாவும் மற்றவர்களும் என்னைப் பற்றி கருத்துகளை பரப்புகிறார்கள். இது முதல்வருக்கோ, அமைச்சர்களுக்கோ, சபாநாயகருக்கோ பாதிப்பை ஏற்படுத்தாது. எனக்கும் என் கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுக்கு மட்டுமே இது பிரச்னையை ஏற்படுத்தும். நானும் என் குடும்பமும் தற்கொலை செய்துகொண்டால், எங்கள் மரணத்துக்கு நீங்கள் ஒவ்வொருவரும் பதில் சொல்ல வேண்டும்.
Also Read: கேரளம்: `தூதரகம் பெயரில் கடத்தல்; ரூ.15 கோடி தங்கம்!’- அதிரவைத்த ஐ.டி அதிகாரி ஸ்வப்னா
தங்கம் கடத்தலில் ஈடுபட்டதால் நான் தலைமறைவாக இருக்கவில்லை. பயத்தின் காரணமாகவும், என் குடும்பத்துக்கு வந்த மிரட்டல் காரணமாகவும் நான் தலைமறைவாக இருக்கிறேன். என் பின்னால் முதலமைச்சரோ, ஐ.டி செயலாளரோ, சபாநாயகரோ, அமைச்சர்களோ இல்லை. எல்லா அமைச்சர்களோடும் நான் பேசியிருக்கிறேன், நிகழ்ச்சிகளுக்கு அழைத்துள்ளேன். தேர்தலுக்காக நீங்கள் இதைச் செய்கிறீர்கள். இதனால் அமைச்சர்கள் யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை.
ஏன் நீங்கள் டாபிக் மாறி போகிறீர்கள். துபாயில் இருந்து அந்த பார்சலை தூதரகத்துக்கு அனுபியது யார். அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் எனக் கண்டுபிடியுங்கள். அதைவிட்டுவிட்டு கேரளத்தில் உள்ள அப்பாவிகளைத் தொந்தரவு செய்யாதீர்கள். இதுபோன்று மீடியாக்கள் நடந்துகொண்டால் நாட்டில் நிறைய ஸ்வப்னாக்கள் மரணமடையும் நிலை ஏற்படும்" என அந்த ஆடியோ மூலம் கூறியுள்ளார்.
source https://www.vikatan.com/government-and-politics/crime/swapna-suresh-release-audio-clip-regarding-kerala-gold-smuggling
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக