Ad

வியாழன், 9 ஜூலை, 2020

இணையவழி வகுப்புகள் சாதகமா, பாதகமா..? மாணவர்களும் ஆசிரியர்களும் சொல்வது என்ன?

2008-ம் ஆண்டு, ஒரு செல்போன் நிறுவனம், `கிராமப்புற மாணவர்களும் செல்போன் மூலம் கல்வி கற்று சிறந்த நிலையை அடையலாமே’ என விளம்பரம் வெளியிட்டது. இந்த விளம்பரத்தில் வருவது போல் எல்லாம் நடக்க வாய்ப்புள்ளதா என்று 12 வருடங்களுக்கு முன் அப்போது பலர் எண்ணியிருப்பார்கள். ஆனால, இன்றைய கல்வி கற்கும், கற்பிக்கும் நிலையோ அப்படியே அந்த விளம்பரத்தில் வருவது போன்றுதான் அமைந்துள்ளது. கொரோனா ஊரடங்கால் ஆன்லைனில் கல்வி என்ற புதிய கல்வி முறை அவதாரம் எடுத்துள்ளது. தற்போதைய சூழலில் ஆன்லைன் கல்வி தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இந்தக் கல்விமுறை ஆசிரியர்களுக்கும் சரி, மாணவர்களுக்கும் சரி புதிய முறைதான். இரண்டு பக்கத்திலும் தடுமாற்றங்கள் உண்டு. நடுத்தரவயது ஆசிரியர்களுக்கு இந்தத் தொழில்நுட்பம் புதிது. ஆசிரியர்களும் ஆன்லைனில் பாடம் நடத்த பழக வேண்டி உள்ளது. பிறந்த சில மாதங்களிலேயே இக்கால குழந்தைகள் செல்போனை இயக்க பழகிவிடுவதால், இக்கால மாணவர்களுக்கு எளிதுதானே ஆன்லைன் கல்வி என்று நினைக்கலாம். ஆனால், அதிலும் சிக்கல்கள் இல்லாமல் இல்லை.

ஆன்லைன் கல்வி (மாதிரி படம்)

இன்றைய பொருளாதார சூழ்நிலையில் வீட்டில் இரண்டு பிள்ளைகள் இருந்தால், இதுவரை ஆண்ட்ராய்டு போனை உபயோகிக்காத அந்தக் குடும்பம் இரண்டு போனோ, கம்ப்யூட்டரோ வாங்க வேண்டும். பொருளாதார ரீதியில் பின்தங்கியிருக்கும் குடும்பங்களில் இந்த ஆன்லைன் கல்விமுறை சாத்தியமா என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. அதற்குத் தீர்வாக 5 தனியார் சேனல்களில் இணைய பாடங்கள் ஒளிபரப்பப்படும் என அறிவித்திருக்கிறார் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.

அதை விடுங்கள்! படித்த பெற்றோரே இந்த ஆப்பை டவுன்லோடு செய்யுங்கள், அந்த ஆப்பை டவுன்லோடு செய்யுங்கள் என்று மாற்றி மாற்றி பள்ளிகள், கல்லூரிகள் கூறும்போது குழம்பித்தான் போய்விடுகிறார்கள். பள்ளிப்படிப்பைத் தாண்டாத பெற்றோர்கள், படிக்காத பெற்றோர்களுக்கு தங்களது குழந்தைகளுக்கு செல்போனில் ஆப்பை டவுன்லோடு செய்வது, பள்ளி , கல்லூரிகளில் பாடத்திற்கேற்ப அவ்வப்போது அனுப்பும் லிங்க்கில் நுழைவது போன்றவை சவாலான காரியமாகத்தான் உள்ளது. இதையும் தாண்டி சில பள்ளிகள், பல கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்திக்கொண்டுதான் இருக்கின்றன. சீருடையுடன்தான் மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று சில பள்ளிகளில் நடைமுறை உள்ளது. ஆன்லைன் கல்வி தற்போதைய சூழ்நிலையில் அவசியம் என்றாலும் அதிக நேரம் ஸ்கிரீனைப் பார்ப்பதால் மாணவர்களின் கண்கள், காதுகள் பாதிப்படைவது தலைவலி, தூக்கமின்மை போன்றவற்றால் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். எப்படியும் பிள்ளைகள் டிவி அல்லது போனில்தான் இருக்கப் போகின்றார்கள் அதற்கு இப்படி ஆன்லைனில் பாடம் படிப்பதை வரப்பிரசாதமாகவே கருதும் பெற்றோர்களும் உள்ளனர்.

சரி உண்மையில் ஆன்லைன் வகுப்புகள் குறித்தும் அதன் சாதக பாதகங்கள் குறித்தும் என்ன நினைக்கிறார்கள் எனப் பேராசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் சிலரிடம் பேசினோம்.

S.ஹரிஹரன், சமூக மருத்துவத் துணைப் பேராசிரியர்:

``தொழில்நுட்ப முன்னேற்றங்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்தக் கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு சிறப்பாகப் பாடம் எடுக்க ஒரே வழி இணைய வழி வகுப்புகளே. ஆசிரியர் நேருக்கு நேர் பாடம் எடுக்கும் அளவிற்கு இணைய வழி வகுப்புகள் திறன் வாய்ந்ததாக இருக்காது என்றாலும், தற்போதைய நிலைக்கு இது சிறந்த வழியே. மருத்துவ பாடம் என்று எடுத்துக்கொண்டால் நோயாளிகளின் பக்கம் நின்று படிப்பதே படிப்பு. வகுப்பறையில் உட்கார்ந்து படிப்பது அல்ல. இணையவெளி வகுப்புகள் மூலம் பல மாணவர்களை ஒருங்கிணைத்து ஒரே நேரத்தில் வகுப்புகளை எடுக்க முடியும். பாடம் எடுக்க உபயோகிக்கப்படும் பவர்பாய்ன்ட் பிரசன்டேஷன் வைத்து மாணவர்கள் பல முறை படிக்கலாம்.

S.ஹரிஹரன், சமூக மருத்துவர் துணைப் பேராசிரியர்

செய்முறை வகுப்பு பாடங்களை மட்டும் மாணவர்கள், பள்ளி கல்லூரிகள் திறந்த பிற்பாடு பயின்று கொள்ளலாம். அனைத்து மாணவர்களுக்கும் இந்த இணைய வகுப்பில் பங்கேற்கத் தேவையான தொழில்நுட்ப உபகரணங்களை வைத்துள்ளார்களா, அல்லது வாங்க முடியுமா என்பதே கேள்வி. கேரளாவில் டிவி சேனல் ஒன்றை ஆரம்பித்து அதன் வழியாக வகுப்புகள் எடுக்கின்றனர். டிவி அனைவர் வீட்டிலும் இருக்கும்தானே, அதனால் இந்த யுத்தியைக் கையாள்கிறார்கள்.

இணைய வழி வகுப்புகளில் ஆசிரியர் மாணவர் உரையாடல் குறைந்தே இருக்கும். ஒரு வழி பேச்சு மாதிரியே இருக்கும். இணைய வழியில் பாடம் எடுக்க என்று சில செயலிகள் உள்ளன அவற்றிற்கு அனைவராலும் பணம் செலுத்த இயலுமா என்பதும் கேள்விக்குறிதான்.

பாரம்பர்ய கரும்பலகை வகுப்புகள் போல் இல்லை என்றாலும் இணையவழி வகுப்புகளே எதிர்காலம். இந்தக் கொரோனா காலத்தில் இதை எதிர்த்துச் செயல்பட முடியாது. நிலைமை சீரான பிறகு, பள்ளி கல்லூரி வகுப்புகள் இயல்பு நிலைக்குத் திரும்பும்."

மஞ்சு பாலாஜி, பெற்றோர்

திருமதி.மஞ்சு பாலாஜி, பெற்றோர்:

``என் மகள் ஏழாம் வகுப்பு படிக்கிறாள். அவளுக்குத் தினமும் இரண்டு மணி நேரம்தான் இணையவழி வகுப்பு. அதனால் கண்களுக்கு அதிக பளு இல்லை. இணைய வழி வகுப்புகளில் சாதகங்களே நிறைய உள்ளன. குழந்தைகள் காலையில் புத்துணர்வுடன் சீருடை அணிந்து இணைய வழி வகுப்புகளில் பங்கேற்கின்றனர். இதில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான உரையாடல் சிறப்பாகவே உள்ளது. ஊரடங்கு காலமும் பயனுள்ளதாகக் கழிகின்றது. இணையவழி வகுப்புகளை நடத்துவது சிறப்பானதே. இல்லையானால் குழந்தைகள் தங்கள் அன்றாடச் செயல்களை மறந்துவிடுவர். தற்பொழுது படிப்புடன் தொடர்பில் உள்ளனர். சில பள்ளிகளில் மதியம் வரை வகுப்புகள் நடக்கின்றன. ஆனால் 2 மணி நேர ஆன்லைன் வகுப்பே போதுமானதாகத் தெரிகிறது."

K.T.தருண், ECE பிரிவு பொறியியல் மாணவர்

``எனக்கு காலை 8.45 முதல் இணையவழி வகுப்புகள் தொடங்குகின்றன. இரண்டு மணி நேர வகுப்புக்குப் பிறகு 10 நிமிட இடைவெளியுடன் அடுத்த வகுப்பு தொடங்கும். அந்த 10 நிமிட இடைவேளையும் சில நேரங்களில் கிடைக்காது. தினமும் தேர்வு எழுத வேண்டி உள்ளது. மாலையில் ஒரு மணி நேரம் ஸ்பெஷல் லேப் வகுப்பு இருக்கும். இரவு 8 முதல் 9 வரை திறன் மேம்பாட்டு வகுப்புகள் எனச் சில சமயம் 9.30 மணி வரைகூட வகுப்பு நடைபெறுகின்றது. கல்லூரி நடந்தால்கூட மாலை 4 மணியுடன் வகுப்புகள் முடிந்துவிடுகின்றன. ஆனால், தற்பொழுது இரவு வரை வகுப்புகள் நடக்கின்றன. நவம்பரில் முடிக்க வேண்டிய பாடங்களை இன்னும் இரண்டு வாரங்களில் எங்களுக்கு முடிக்கப்போகின்றனர். மாணவர்கள் சந்தேகங்களும் அதிகம் கேட்காததால் அவர்கள் வேகமாகப் பாடங்களை முடித்துக்கொண்டு செல்கின்றனர். கூகுள் மீட் வாயிலாக எங்களுக்கு வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. முதலில் வகுப்பின் இறுதியில்தான் அட்டென்டன்ஸ் எடுக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் வகுப்பின் இறுதியிலேயே அதிகம் சேர்ந்தனர். இதனால் தற்போது வகுப்பில் எப்போது வேண்டுமானாலும் அட்டென்டன்ஸ் எடுக்கலாம் என்று மாற்றியுள்ளனர். அதனால் மாணவர்கள் மியூட் செய்துவிட்டு அவர்கள் ஏதாவது ஒரு வேலையைச் செய்கின்றனர் .

K.T.தருண், ECE பிரிவு பொறியியல் மாணவர்:

சமூக வலைதளங்களைப் பயன்படுத்த முடியும் என்பதால் யாரும் வகுப்பில் கவனம் செலுத்துவதில்லை. `முன்பெல்லாம் வீட்டில் காலையிலிருந்து போனா?' என்று கண்டிப்பார்கள், இப்பொழுதெல்லாம் முழு வகுப்புமே போனில்தான். இணையவழி வகுப்புகள் மூலம் கல்லூரிப் படிப்புடன் தொடர்பில் இருக்க முடிகிறது என்பதுதான் நன்மை."

V.சிவசங்கர சேகரன், மருத்துவ மாணவர்

V.சிவசங்கர சேகரன், மருத்துவ மாணவர்

``ஊரடங்கின் காரணமாக எங்கள் மருத்துவப்படிப்பு பாதிக்கப்படாமல் இணையவழி மூலம் நடைபெற்று வருகின்றது. வகுப்புகள் பயனுள்ளதாக உள்ளன. பல நன்மைகள் இருந்தாலும் சில இன்னல்களும் உள்ளன. வகுப்பறையில் உட்கார்ந்து பாடம் கேட்கும்போது அமைதியான சூழல் நிலவும். வகுப்பில் குறிப்புகள் எடுத்து கவனத்துடன் இருக்கலாம். ஆனால், வீட்டில் அப்படி இருக்காது. ஏதாவது ஒரு சத்தம் வந்துகொண்டே இருக்கும். சில செயலிகளில் மாணவர்கள் தாங்கள் வீடியோ இல்லாமலேயே வகுப்பில் இருக்கலாம். அப்பொழுது மாணவர்கள் கவனிக்கிறார்களா என்று ஆசிரியர்களால் கண்காணிக்க முடியாத சூழல் நிலவுகிறது. மிக முக்கிய பிரச்னை இணையம் அவ்வப்போது துண்டிக்கப்படுவது. ஆசிரியருக்கோ மாணவருக்கோ இந்தப் பிரச்சனை நடப்பதால் வகுப்புகளைக் கவனிப்பதில் இடைஞ்சலாக உள்ளது. சில நேரங்களில் வகுப்பு நடத்தப்படும் செயலிகளில் கோளாறுகள் ஏற்படுகின்றன."

S.பூஜா, தகவல் தொழில்நுட்பத்துறை பொறியியல் மாணவி

S.பூஜா, தகவல் தொழில்நுட்பத்துறை பொறியியல் மாணவி:

``எனக்குத் தினமும் ஒரு மணி நேரம் மட்டுமே இணையவழி வகுப்பு உள்ளது. அதனால் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய முடியவில்லை. கிராபிக்ஸ் போன்ற பாடங்களை இணையவழியில் அறிவது சவாலாக உள்ளது. நேரம் குறைவாக இருப்பதால் அவர்களும் வேகவேகமாக எடுக்கின்றனர், சந்தேகங்களைக் கேட்கவும் நேரமுமில்லை. மாணவர்கள் ஆடியோ, வீடியோவை மியூட் செய்துவிடுவதால் மாணவர்கள் கவனிக்கிறார்களா என்று ஆசிரியர்களுக்குத் தெரியாது. வகுப்பில் பாதிபேரிடம் ஸ்மார்ட் போன் கிடையாது, இதுபோக நெட்வொர்க் பிரச்னையும் உள்ளது. நல்ல விஷயம் என்னவென்றால் அசைன்மென்ட் செய்வதற்கு நிறைய நேரம் அளிக்கிறார்கள்.

ஒரு நாணயத்துக்கு இரு பக்கம் இருப்பதைப்போல இணையவழி வகுப்புகளுக்கும் நன்மையும் தீமையும் இருக்கத்தான் செய்கின்றன. இவற்றிலுள்ள சிக்கல்களைக் களைய அரசுகள் நிச்சயம் உதவ வேண்டும். காலத்திற்கேற்ப நம்மை நாம் மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும். மாற்றம் ஒன்றே மாறாதது. அனைவரும் தொழில்நுட்ப மாற்றத்துக்கு மாறித்தான் ஆக வேண்டும். இணையவழி வகுப்புகளே இன்றைய `நியூ நார்மல்'. பழகிருவோம்!



source https://www.vikatan.com/social-affairs/education/parents-and-students-shares-their-experiences-about-online-classes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக