`தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் வைத்துதான் தூத்துக்குடி சென்றார் என்றால், அதை ஏன் ட்விட்டரில் வெளியிடவில்லை? தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உதயநிதிக்கு இசைவே கொடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் சட்டம் தன் கடமையைச் செய்யும்' - கடந்தவாரம் அமைச்சர் ஜெயக்குமார், சாத்தான்குளத்துக்கு உதயநிதி சென்றது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த கருத்து இது.
சாத்தான்குளத்தில் காவல்துறை தாக்குதலுக்கு உள்ளாகி மரணம் அடைந்த ஜெயராஜ், அவரின் மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல, கடந்த மாதம் 27-ம் தேதி சென்னையிலிருந்து காரில் புறப்பட்டு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சென்றடைந்தார், உதயநிதி. சென்னையில் முழு ஊரடங்கும் பிற மாவட்டங்களில் சில தளர்வுகளுடனும் ஊரடங்கு அமலில் இருந்த நேரத்தில் உதயநிதியின் தூத்துக்குடிப் பயணம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து, அமைச்சர் ஜெயக்குமார், ``தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடிக்குச் சென்று வந்துள்ளார். சென்னை மாநகராட்சியிடமோ, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடமோ அதற்கான அனுமதியைப் பெறவில்லை. அவர் செய்தது சட்டத்துக்கு உட்பட்ட செயலா அல்லது சட்டத்தை மீறிய செயலா என்பதை விளக்க வேண்டும்'' என்று தெரிவித்தார். இதற்கு உடனடியாக உதயநிதி தரப்பில் ட்விட்டரில் பதில் அளிக்கப்பட்டது. அதில் 'இ-பாஸை காட்டிய பிறகே போலீஸார் ஒவ்வொரு தணிக்கைச்சாவடியிலும் பயணிக்க அனுமதித்தனர்'' என்று பதில் அளித்திருந்தார்.
அதன் பிறகும் இந்த விவகாரம் ஓயவில்லை. அமைச்சர் ஜெயகுமார் மீண்டும், ``இ-பாஸ் வைத்துதான் தூத்துக்குடி சென்றார் என்றால், அதை ஏன் ட்விட்டரில் வெளியிடவில்லை? தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உதயநிதிக்கு இசைவே கொடுக்கவில்லை. அவர் செய்தது 420 வேலை. இந்த விவகாரத்தில் சட்டம் தன் கடமையைச் செய்யும்” என்று அதிரடியாக அறிவித்தார். அவர் இப்படி அறிவித்து ஒரு வாரத்துக்கும் மேலாகிவிட்டது.
உதயநிதி தரப்பிலும் இதுவரை தூத்துக்குடி சென்றது யாருடைய இ-பாஸில் என்று வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அதேநேரம் ஒருவாரமாக அரசு தரப்பும் சட்டத்துக்கு புறம்பாக சாத்தான்குளம் சென்றதாக உதயநிதி மீது சட்டபூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து சமூகவலைதளங்களிலும் கருத்துகள் பரப்பப்பட்டு வந்தன.
`உதயநிதி விவகாரத்தில் அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கையை ஏன் எடுக்கவில்லை?' என்று அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டோம். ``உண்மைதான். அவர் சென்றதற்கான ஆவணங்கள் அரசுத் தரப்பில் பதிவாகவில்லை. ஆனால், இப்போது கொரோனா பிரச்னை உச்சத்தில் இருப்பதால் இந்த விவகாரத்துக்கு அதிகநேரம் ஒதுக்கவில்லை. தேவைப்படும்போது, இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுப்போம்” என்றார்.
இந்த விவகாரம் வெடித்தபோது தி.மு.க தரப்பும் எச்சரிக்கையாகவே காய்நகர்த்தியது. குறிப்பாக, உதயநிதி மீது எந்தச் சிக்கலும் வந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார்கள்.
“தூத்துக்குடிக்கு உதயநிதியை அழைத்து வந்தவர் மாநில இளைஞரணி துணைச் செயலாளரான ஜோயல்தான். இ-பாஸ் ஏற்பாடுகளை அவர்தான் முன்னின்று செய்திருக்கிறார். உதயநிதி பெயரில் பாஸ் இல்லை என்றாலும் வேறு ஒரு நபர் பெயரில் பாஸ் பெற்று +1 என்று குறிப்பிட்டு அவருடன் உதயநிதி சென்றிருந்தார். இதில் எந்தத் தவறும் நடக்கவில்லை. அரசுத் தரப்பு எங்களுக்கு நெருக்கடி கொடுத்தால் நாங்களும் ஆவணங்களை வெளியிடுவோம்” என்கின்றனர் இளைஞரணி நிர்வாகிகள்.
source https://www.vikatan.com/government-and-politics/controversy/minister-jayakumar-speaks-about-udayanidhis-e-pass-controversy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக