Ad

வியாழன், 16 ஜூலை, 2020

கரூர்: ஒரு மழைக்கு ஒரே மாதத்தில் உடைந்த கரைகள்!' - தூர்வாரியதில் முறைகேடு

கரூரில் குடிமராமத்துத் திட்டத்தின்கீழ் தூர்வாரப்பட்ட 5 ஏக்கர் குளத்தின் கரைகள், ஒரு மழைக்கே பல இடங்களில் உடைந்ததால் அந்தப் பகுதி விவசாயிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

உடைந்த குளக்கரை

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் இருக்கிறது வாழ்வார்மங்கலம். இந்தக் கிராமத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது பறையன் குளம்.

Also Read: `தடுப்பணைக்கு 8 லட்சம் ரூபாய்; ஓராண்டில் உடைந்த கொடுமை!' -மணல் கொள்ளையால் கலங்கும் கடவூர் விவசாயிகள்

இந்தக் கிராமத்தைச் சுற்றிப் பெய்யும் மழைநீர் இந்தக் குளத்தில் தேக்கப்பட்டு, அதைக்கொண்டு இந்தக் குளத்தைச் சுற்றியுள்ள 50 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இந்தக் குளம் தூர்ந்துபோய், தண்ணீர் தேங்க வழியில்லாமல் இருந்தது.

பறையன் குளம்

இதனால், விவசாயிகளால் கடந்த 10 வருடங்களாக விவசாயம் செய்யமுடியவில்லை. அந்தக் குளத்தை தூர்வாரச் சொல்லி, வாழ்வார்மங்கலத்தைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் கோரிக்கை வைத்து வந்தனர். இந்தநிலையில், கடந்த ஒருமாதத்துக்கு முன்பு குடிமராமத்து திட்டத்தின்கீழ், இந்தக் குளத்தை தூர்வாரியிருக்கிறார்கள். ஆனால், குளத்தின் கரையை தரமாக அமைக்காமல் போனதால், ஒரே மழையில் குளத்தின் கரைகள் உடைந்து கரைந்துவிட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.

இதுகுறித்து, நம்மிடம் பேசிய வாழ்வார்மங்கலத்தைச் சேர்ந்த விவசாயிகள் சிலர்,

"குடிமராமத்துத் திட்டத்தின்கீழ் இந்தக் குளத்தை 5 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரினார்கள். எங்க ஊர் ஊராட்சி மன்றத் தலைவர் சரவணன், இந்தக் குளத்தின் கரைகளை நல்ல மண்ணைக் கொண்டு பலமாக அமைக்காமல், வெறும் சவுட்டு மண்ணைக் கொண்டு லேசாக அமைத்தார். அப்போதே, விவசாயிகள் அனைவரும் அவர்கிட்ட, 'கரைகளைப் பலமாக அமைங்க'னு சொன்னோம். ஆனால், அவர் அதைக் காதில் வாங்கிக்கலை.

மாறாக, குளத்தில் இருந்த நல்ல மண்ணை வெட்டி, வெளியில் விற்றார். குடிமராமத்து திட்டத்தின்கீழ் இந்தக் குளத்தை தூர்வார ஒதுக்கப்பட்ட நிதியிலும் முறைகேடு நடந்தது. நாங்க குளத்தின் கரைகளைப் பலமாக அமைக்கச் சொல்லி எவ்வளவோ போராடினோம். பலனில்லை. அதனால், இந்தக் குளத்தை தூர்வாரி ஒருமாதம்கூட ஆகாத நிலையில், சிலதினங்களுக்கு முன்பு லேசாக மழைபெய்தது.

உடைந்த குளக்கரை

அந்த மழையில், குளத்தின் கரைகள் கரைந்தும், உடைந்தும் போனது. இதனால், குளத்தைச் சுற்றி 20 இடங்களில் கரைகள் டேமேஜ் ஆயிட்டு. ஒருமழைக்கே இந்தக் கதின்னா, இன்னும் தொடர்ச்சியா மழை பெய்தால், சுத்தமாக கரைகளே இல்லாமல் போகும் சூழல் ஏற்படும். கரைகள் உடைந்தால், குளத்தில் தண்ணீர் தேங்காது. அதனால், எங்களால் விவசாயம் செய்யமுடியாமல் போகும். மாவட்ட நிர்வாகம் உடனே இந்த விஷயத்தில் தலையிட்டு, குளத்தை தூர்வாரியதில் நடைபெற்ற முறைகேட்டை கண்டுபிடிக்கனும். அதோடு, மறுபடியும் குளத்தின் கரைகளை பலமாக அமைத்து, குளத்தில் மழைநீர் நீர்தேங்க வழிவகை பண்ணனும். இல்லைன்னா, விவசாயிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து போராட்டம் நடத்துவோம்" என்றார்.

குற்றச்சாட்டுகள் குறித்து, வாழ்வார்மங்கலம் ஊராட்சிமன்றத் தலைவர் சரவணனிடம் பேசினோம்.

"குளத்தை முறையாகத்தான் தூர்வாரினோம். எந்தவித முறைகேடும் நடக்கவில்லை. கரைகளை அமைத்த பத்துநாளில் மழைபெய்தது. அதனால், கரைகள் உடைந்தது. இந்த குளத்தை தூர்வார எவ்வளவு தொகை ஒதுக்கினாங்கன்னு தெரியலை. விவசாயிகள், கரைகள் உடைந்துவிட்டதாக என்னிடம் சொன்னார்கள்.

உடைந்த குளக்கரை

அவர்களின் கோரிக்கையை அதிகாரிகள்கிட்ட சொல்லியிருக்கிறேன். மத்தபடி, இந்தப் பிரச்னையை பெரிதாக்க வேண்டாம்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/farmers-slams-panchayat-presidents-activity-in-pond-cleaning-work

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக