Ad

வியாழன், 16 ஜூலை, 2020

ராமநாதபுரம்: நேதாஜியின் பாலசேனை; 12 வயதிலேயே வீராங்கனை! - மரணமடைந்த காந்திமதி பாய்

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இந்திய சுதந்திர வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தவர். இவரின் வரலாற்றுப் பயணத்தில் தன்னையும் இணைத்துக்கொண்ட ராமநாதபுரம் காந்திமதிபாய் தனது 85 வயதில் இயற்கை எய்தினார்.

ஐ.என்.ஏ படை அமைத்து போராடிய நேதாஜி.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள மேல பண்ணகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம். பர்மாவில் குடியேறி மீன் வியாபாரம் செய்துவந்ததன் மூலம் மிகப் பெரிய செல்வந்தராகத் திகழ்ந்தவர். முத்துராமலிங்கத் தேவர்-ராமுகண்ணம்மாள் தம்பதியின் மகளாகப் பிறந்தவர் காந்திமதி. காந்திமதி தன்னுடன் பிறந்த 6 பேர்களில், இவர் மட்டும் எப்போதும் சுறுசுறுப்புடன் இருப்பார். இதுவே பின்னாளில் காந்திமதியை வீரப் பெண்மணியாக மாற்றியது.

பர்மா நாட்டில் பள்ளிப் படிப்பு படித்துக்கொண்டிருந்த வேளையில் நேதாஜி இந்தியாவுக்கு சுதந்திரம் வேண்டும் என்பதற்காக, துடிப்புமிக்க இளைஞர்கள், பெண்கள் என ஆர்வமிக்க அனைவரையும் ஐ.என்.ஏ-வில் சேரும்படி அழைப்பு விடுத்தார். அதுமட்டுமல்லாமல் தனது போராட்டத்துக்கான படையை உருவாக்க நன்கொடையும் திரட்டி வந்தார். வசதி வாய்ப்புடன் இருந்த காந்திமதி வீட்டிற்கும் நேதாஜி நிதி திரட்டச் சென்றுள்ளார். அப்போது காந்திமதியின் தந்தை பணம் மட்டும் இல்லாது, தன்னிடம் இருந்த நகைகளையும் நேதாஜியிடம் வழங்கினார்.

இதைக் கவனித்த காந்திமதி எதற்காகப்பணம் நகை எல்லாம் கொடுக்கிறீங்க என தன் தந்தையிடம் கேட்டார். அப்போதுதான் நேதாஜியைப் பற்றி முழுமையாக அறிந்துகொண்டார் காந்திமதி. அதைத்தொடர்ந்து நேதாஜியின் படையில் சேர அவருக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. தந்தையின் அனுமதியுடன் தனது 12-வது வயதில் ஐ.என்.ஏ பாலசேனையில் சேர்ந்தார்.

காந்திமதி பாய்

ஐ.என்.ஏ-வில் ஜான்சிராணி பெயரில் இருந்த பெண்கள் படைக்கு கேப்டனாக டாக்டர் லட்சுமி தலைவராக இருந்தார். இதேபோல் சிறுவர்கள், சிறுமிகளைக் கொண்ட பாலசேனையும் இருந்தது. பாலசேனையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், சிறுவர்கள் இணைந்திருந்தனர். அவர்களின் ஒரே நோக்கம் இந்தியா சுதந்திரம் அடைய வேண்டும் என்பது மட்டுமே. பாலசேனையில் பிரசார பிரிவில் இணைந்த காந்திமதி, இந்திய விடுதலை குறித்த பாடல்களை மக்கள் மத்தியில் பாடி தேச பக்தியை வளர்ப்பது, பயிற்சியின்போது வீரர்களுக்குத் தேவையான ஆயுதங்களை எடுத்து கொடுப்பது, நாடகங்கள் நடத்தி அதன் மூலம் நிதி திரட்டுவது போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளார். ஐ.என்.ஏ-வுக்கு நிதி திரட்டுவதற்காகப் பல கலை நிகழ்ச்சிகளை நடத்தி அதில் வரும் நிதியை நேதாஜியின் மெய்க்காப்பாளரிடம் வழங்கியிருக்கின்றனர் காந்திமதி குழுவினர். அவ்வப்போது போர்ப் பயிற்சி, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பயிற்சிகளை முறையாகக் கற்றுத் தேர்ந்துள்ளார்.

Also Read: 75 ஆண்டுகளுக்கு முன் நேதாஜி ஏற்றிய கொடி! - அந்தமான் தீவுகளின் பெயர்களை மாற்றிய மத்திய அரசு

பாலசேனையில் இளைஞர்கள், சிறுவர்கள் எனப் பலர் இருந்தாலும் இவர்களுக்குள் வேற்றுமைகள் இல்லாமல் பழகி வந்தனர். காலப்போக்கில் நேதாஜியை சாதாரணமாகப் பார்க்கவும், பேசவும் காந்திமதிக்கு வாய்ப்பு கிடைத்தது. அவருடைய நடவடிக்கைகளை கவனித்த நேதாஜி, காந்திமதியை `பாய்’ என்றே அழைப்பார். பின்னாளில் அதுவே காந்திமதி பாய் என்ற பெயராக நிலைத்துவிட்டது. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் சிலகாலம் பர்மாவில் இருந்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் அவரது தந்தை, காந்திமதிக்கு, முத்துராமலிங்கத் தேவருக்குத் திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டார். பசும்பொன்தேவருக்கு திருமண ஆசையில்லாததால், காந்திமதிபாயை திருமணம் முடிக்க மறுத்துவிட்டார்.

ஐ.என்.ஏ பதக்கம்

பின்னர் அபிராமத்தை அடுத்துள்ள மேலப்பண்னைக்குளத்தை சேர்ந்த செல்வந்தர் ராமசாமித்தேவருக்கு காந்திமதிபாயை திருமணம் செய்து கொடுத்தனர். ராமசாமி - காந்திமதி தம்பதிகளுக்கு 12 குழந்தைகள், அவர்களில் 11 பேர் உயிருடன் உள்ளனர். இந்நிலையில் மேலப்பண்னைக்குளத்தில் வசித்து வந்த காந்திமதிபாய், நேற்று காலை தனது 85-வது வயதில் இயற்கை எய்தினார். நேதாஜி உருவாக்கிய ஐ.என்.ஏ படையின் கடைசி வீராங்கனையான காந்திமதிபாய் உடலுக்கு ஏராளமானோர் வீரவணக்கம் செய்து அஞ்சலி செலுத்தினர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/nethajis-ina-soldier-gandhimathi-bai-died-in-ramanathapuram

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக