Ad

வியாழன், 16 ஜூலை, 2020

மீண்டும் ஒரு பிளாக்‌வாஷ்... வெஸ்ட் இண்டீஸுக்கு இங்கிலாந்தின் பிளான் என்ன? #Preview #EngVsWI

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெஸ்ட் இண்டீஸ் த்ரில் வெற்றியை பெற்ற நிலையில் இன்று இரண்டாவது போட்டி மான்செஸ்டரில் தொடங்க இருக்கிறது.

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வெல்ல இந்த இரண்டாவது போட்டி இரு அணிகளுக்குமே மிகவும் முக்கியமானது. குறிப்பாக இங்கிலாந்து இந்தத் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை வெல்வதற்கான வாய்ப்பிருக்கிறது. கடந்த போட்டிக்கு கேப்டனாக செயல்பட்ட ஸ்டோக்ஸுமே, ``டிரா பற்றியெல்லாம் நாங்கள் யோசிக்கமாட்டோம். மூன்று போட்டிகளிலும் வென்று தொடரைக் கைப்பற்றுவதுதான் இலக்கு" என பேசியிருந்தார். இதிலிருந்து இங்கிலாந்து அக்ரஸிவோடு வெற்றிக்காக மட்டுமே விளையாடப்போகிறது என்பது மட்டும் உறுதி.

வெஸ்ட் இண்டீஸை பொறுத்தவரைக்கும் கிரிக்கெட்டைத் தாண்டி இன்றைய உலக அரசியல் சூழ்நிலையிலும் அவர்களுக்கு இந்த வெற்றி மிக முக்கியமானதாக இருக்கும். நாங்கள் யாருக்கும் கீழானவர்கள் அல்ல என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துக்காட்ட விண்டீஸ்கள் வெறித்தனமாக விளையாடக்கூடும்.

Also Read: காட்டான்கள் எனச் சொல்வார்கள்; நம்பாதீங்க... இவர்கள் கிரிக்கெட்டை காத்த கடவுள்கள்!

இந்தப் போட்டியை வென்றுவிட்டால் 1988-க்குப் பிறகு 32 வருடங்கள் கழித்து இங்கிலாந்து மண்ணில் மீண்டும் ஒரு சரித்திர வெற்றியை வெஸ்ட் இண்டீஸ் பதிவு செய்யும்.

Jason Holder

Also Read: #ENGvsWI ஹோல்டர், ஜெர்மெய்ன் பிளாக்வுட்... கரீபியக் கிரிக்கெட்டின் புதுப்போராளிகள்! #RaiseTheBat

சவுத்தாம்ப்டன் டெஸ்ட்டில் மழை குறுக்கிட்டதைப்போல மான்செஸ்டரில் வைத்து நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் மழையின் தாக்கம் இருக்காது என்றே தெரிகிறது. கடந்த போட்டியில் ஸ்டோக்ஸ் டாஸ் ஜெயித்து முதல் பேட்டிங் எடுத்திருப்பார். போட்டி ஆரம்பிக்கும் முன்பே ஸ்டோக்ஸ் செய்த மிகப்பெரிய தவறு இது. இந்த முடிவை தவறு என குறிப்பிடுவதற்கு வானிலை மட்டும் காரணமில்லை. வெஸ்ட் இண்டீஸ் ஒரு சரியான திட்டமிடலுடன் நிலையான பர்ஃபாமன்ஸை கொடுக்கும் அணி கிடையாது. எந்த க்ளூவும் கொடுக்காமல் அவர்களுடைய இன்னிங்ஸை அவர்களையே ப்ளான் செய்ய வைக்க வேண்டும். வெஸ்ட் இண்டீஸ் இந்த விஷயத்தில் சொதப்புவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதைவிடுத்து இங்கிலாந்து முதல் பேட்டிங் செய்தால் டார்கெட் என்ற பெயரில் அவர்களுக்கு ஒரு க்ளூ கொடுத்ததை போல் ஆகிவிடுகிறது. அதேமாதிரிதான் ரூட், பட்லர், ஸ்டோக்ஸ் என்ற மூவேந்தர்கள்தான் வெஸ்ட் இண்டீஸின் டார்கெட்டாக இருக்க வேண்டும்.

கேப்டன் ரூட் இங்கிலாந்து அணிக்கு திரும்புவதால் முதல் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சொதப்பிய டென்லி வெளியேற்றப்படலாம். முதல் டெஸ்ட்டில் ஸ்டூவர்ட் பிராட் வெளியேற்றப்பட்டதற்கு கடும் விமர்சனம் எழுந்தது. இந்த போட்டியில் பிராட் உள்ளே வரும்பட்சத்தில் மார்க் வுட் வெளியேற்றப்படலாம். அதேமாதிரி வெஸ்ட் இண்டீஸில் கேம்ப்பெல் காயம் காரணமாக ஆடாமல் இருக்கலாம். மற்றபடி பௌலிங்கில் அல்சாரி ஜோசப், ரோச் சொதப்பியிருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் விக்கெட் எடுக்கும் திறனுள்ள வீரர்கள் என்பதால் மாற்றத்திற்கு வாய்ப்பில்லை.

JASON HOLDER

இரு அணிகளுக்குமே மிகமுக்கியமான ஒரு போட்டியாக இன்றைய ஆட்டம் இருக்கும். கரீபியன்களின் கை ஓங்கும் பட்சத்தில் நிச்சயம் உலக கிரிக்கெட்டில் மீண்டும் விண்டீஸ்களின் எழுச்சியைப் பார்க்க முடியும். ரூட், ஸ்டோக்ஸ், ஆண்டர்சன், பிராடு, ஆர்ச்சர் எனப் பெரிய வீரர்கள் இருந்தும் இங்கிலாந்துக்கு டஃப் கொடுக்கிறது வெஸ்ட் இண்டீஸ். பிளாக்வுட், பிராத்வெயிட், ஹோல்டர், சேஸ், கேப்ரியேல் எனப் பெரிய அனுபவம் இல்லாத அணியாக இருந்தாலும் வெஸ்ட் இண்டீஸ் இந்தமுறையும் ஆச்சர்யம் அளிப்பார்கள் என்றே தெரிகிறது. மீண்டும் பிளாக்வாஷ் நடக்குமா?



source https://sports.vikatan.com/cricket/england-vs-west-indies-second-test-match-preview

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக