இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயான எல்லைப் பகுதியில் இருநாட்டு வீரர்களுக்கும் தாக்குதல் நடந்த பிறகு பல நாள்கள் கழித்து பிரதமர் மோடி திடீரென லடாக் பகுதிக்குச் சென்றார். ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனைகளை மேற்கொண்ட பிரதமர், அங்குள்ள நிலைமையையும் ஆய்வு செய்தார். இதையடுத்து, சீன ராணுவத் தாக்குதலில் காயமடைந்த இந்திய ராணுவ வீரர்களை, அவர்கள் சிகிச்சைப் பெற்று வரும் மருத்துவமனைக்குச் சென்று நேரில் சந்தித்துப் பேசினார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது. மருத்துவமனையில் உரிய வசதிகள் இல்லை என்றும் பிரதமரின் வருகைக்காக அவசரமாக தயார் செய்யப்பட்ட வார்டுகள் அவை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகளை ராணுவம் மறுத்து தற்போது விளக்கமளித்துள்ளது.
ராணுவம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ``பிரதமர் நரேந்திரமோடி, லே பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு வந்து பார்வையிட்டார். இந்த மருத்துவமனை தொடர்பாக ஆதாரமற்ற மற்றும் தவறான நோக்கத்துடன் குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன. நமது துணிச்சல்மிக்க ராணுவ வீரர்கள் நடத்தப்படும் விதம் தொடர்பாக சந்தேகங்கள் எழுவது துரதிர்ஷ்டவசமானது. இந்திய ராணுவம் அங்குள்ள வீரர்களுக்குச் சிறப்பான முறையில் சிகிச்சை அளித்து வருகிறது” என்று கூறியுள்ளது.
Also Read: மன் கி பாத்: `2020-ம் ஆண்டு, எல்லைப் பிரச்னை, கொரோனா!’ - பிரதமர் மோடி உரை
முன்னதாக சமூக வலைதளத்தில் வெளியான பிரதமர் மோடி மருத்துவமனையில் நின்று வீரர்களுடன் உரையாற்றும் புகைப்படத்தில், குளூக்கோஸ் பாட்டில்கள் தொங்கவிடப்படும் ஸ்டாண்டு உள்ளிட்ட எந்த மருத்துவ உபகரணங்களும் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளின் அருகில் இல்லை என்பதால் அந்தப் புகைப்படங்கள் சர்ச்சையைக் கிளப்பியது. புகைப்படத்தில் இருப்பது மருத்துவமனையே இல்லை என்று சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மிகப்பெரியதாக காணப்பட்ட அறையில் இருந்த புரொஜக்டரை சுட்டிக்காட்டியும் சந்தேகங்களை நெட்டிசன்கள் எழுப்பினர். இதையடுத்துதான் ராணுவம் அறிக்கையை வெளியிட்டது.
அறிக்கையில் சிகிச்சை அளிக்கும் அறை குறித்து அதிகாரிகள், ``கொரோனா நெருக்கடி தொடர்பாக 100 படுக்கை வசதிகளுடன் இந்த அறை தயார்ப்படுத்தப்பட்டது. மருத்துவமனையின் சில வார்டுகளைத் தனிமைப்படுத்தும் வசதி உள்ள வார்டாக மாற்ற வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த அறை ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த அறையும் பொது மருத்துவமனையின் ஒரு பகுதிதான். இந்த அறையானது இதற்கு முன்பு ஆடியோ வீடியோ அரங்கமாகப் பயன்படுத்தப்பட்டது.
கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கியதிலிருந்து இந்த அறை, வார்டாக மாற்றப்பட்டது. கல்வான் பகுதியில் காயமடைந்த வீரர்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம்.நரவானே உள்ளிட்ட அதிகாரிகள் காயமடைந்த வீரர்களை வந்து பார்வையிட்டனர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
Also Read: IndiaChinaFaceOff: `எல்லை விரிவாக்கத்தின் வயது முடிந்துவிட்டது’ - பிரதமர் மோடி
source https://www.vikatan.com/news/india/indian-army-explain-about-the-pm-modis-controversial-photos
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக