Ad

சனி, 4 ஜூலை, 2020

உ.பி: `போலீஸ் துப்பாக்கியால் கொல்லப்பட்ட 8 காவலர்கள்!’ - பிரேதப் பரிசோதனை அதிர்ச்சி

உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூர் மாவட்டம் சவுபேர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதி பிக்ரூ என்ற கிராமம். கான்பூரைச் சேர்ந்த பிரபல ரவுடி விகாஸ் தூபே மீது கொலை, கொள்ளை என 60 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் பிக்ரூ கிராமத்தில் மறைந்திருப்பதாகக் காவலர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கடந்த வியாழக்கிழமை இரவு, தூபேவை கைது செய்வதற்காக 15-க்கும் மேற்பட்டவர்கள் அடங்கிய ஒரு காவலர் படை அந்தக் கிராமத்துக்குள் சென்றுள்ளது.

உ.பி போலீஸார் கொலை

போலீஸார் தன்னை கைது செய்ய வருவதை முன்னரே அறிந்த ரவுடி, கிராமத்துக்குள் நுழையும் அனைத்து வழிகளையும் அடைத்து வைத்துள்ளார். இவை அனைத்தையும் மீறி உள்ளே சென்ற காவலர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அந்தக் கிராமத்தில் ஒரு வீட்டின் மாடியில் மறைந்திருந்த பல ரவுடிகள், திடீரென போலீஸாரை நோக்கி சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதைச் சற்றும் எதிர்பார்க்காத காவலர்கள் சுதாரித்துக்கொண்டு பதில் தாக்குதல் நடத்துவதற்குள் 8 பேர் கொல்லப்பட்டுவிட்டனர்.

ரவுடி தூபேவால், டி.எஸ்.பி தேவேந்திர மிஸ்ரா, மூன்று சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 4 கான்ஸ்டபிள்கள் என 8 காவலர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிக்ரூ கிராமத்திலிருந்து தப்பிய ரவுடி தூபேவை பிடிக்க 25 போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உயிரிழந்த போலீஸாரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகி மொத்த உத்தரப்பிரதேச போலீஸாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

உ.பி போலீஸார் கொலை

காவலர்களிடம் இருந்து திருடப்பட்ட துப்பாக்கியின் மூலமே 8 போலீஸாரும் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கான்ஸ்டபிள் ஜிதேந்திர குமார் உடலிலிருந்து ஏகே 47 ரக துப்பாக்கியின் குண்டுகளை மருத்துவர்கள் பறிமுதல் செய்துள்ளனர். இது மட்டுமல்லாது INSAS துப்பாக்கி, க்ளோக் (Glock) துப்பாக்கி மற்றும் இரண்டு 9 MM ரக துப்பாக்கிகளின் குண்டுகளும் காவலர்கள் உடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்துமே போலீஸாரிடமிருந்து திருடப்பட்டவை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Also Read: உ.பி கொடூரம்: `நள்ளிரவில் திடீர் தாக்குதல்’ -8 காவலர்களை சுட்டுக்கொன்ற ரவுடிகள்

மிகவும் அருகிலிருந்து காவலர்கள் சுடப்பட்டுள்ளதாகவும் தடயவியல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த அனைவரது உடலிலிருந்தும் ஐந்துக்கும் அதிகமான குண்டுகளை மருத்துவர்கள் பறிமுதல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. போலீஸாரின் தலை, மார்பு மற்றும் கால்கள் ஆகியவற்றை மட்டுமே குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் மாவோயிஸ்ட்டுகள் நடத்தும் கொரீலா தாக்குதல் முறைப்படி காவலர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸார் கொலை செய்யப்பட்டது தொடர்பாகவும் திருடப்பட்ட துப்பாக்கிகள் தொடர்பாகவும் விசாரணை நடைபெற்றுவருவதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



source https://www.vikatan.com/news/crime/criminal-vikas-dubey-had-used-the-police-weapons-to-kill-them-autopsy-report

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக